-விஜய் ஆனந்த்.K
ஷம்மீர் மற்றும் அவரது பாதை அமைப்பினர் மென்பொருள் (Software) துறையில் பணியாற்றிக் கொண்டே கலை- இலக்கியப்பணியாற்ற வந்திருக்கிறார்கள். நியான் நகரம் என்கிற நாவலை ஷம்மீர் எழுதியதோடு மட்டுமல்லாமல் அந்த நாவலுக்கு சிவாவுடன் சேர்ந்து ஷம்மீரும் இசையமைத்திருக்கிறார். சினிமாவுல பாட்டைப்போட்டாலே எழுந்து போய்விடும் ரசிகர்கள் மத்தியில் நாவல் படிக்கும் போது பாட்டா..? இது எல்லாம் எடுபடுமா..? எடுபட்டிருக்கிறது, ஷம்மீர் கூட்டணியின் கிரியேட்டிவ்வான விடா முயற்சியால்.
ஒரு சோப்பு விளம்பரத்தில் அழகான அம்மாவா வந்து மாதவனை ஜொள்ளு விட வைக்கும் கிருத்திகா முதல் விஜய் டிவி யி ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2 பட்டம் வென்ற அஜீஷ் வரை பிரபல பின்னணிப்பாடகர்களும் ஷம்மீர் நண்பர்களும் பாடியிருக்கிறார்கள். பெங்களூருவில் இருந்து வந்து அனூப் ராப் பாடல் ஒன்றைப்பாடியிருக்கிறார். பாடல் வெளியீட்டு விழா என்றாலே சத்யம் திரையரங்கங்கள் தான் சென்னை சினிமா ரசிகர்களின் நினைவிற்கு வரும். நியான் நகரத்தின் இசையும் அங்குதான் வெளியிடப்பட்டது. நடிகர் பிரசன்னா நியான் நகரம் நாவலை வெளியிட இயக்குனர் சேரன் பெற்றுக் கொண்டார். நியான் நகரத்தின் இசைத்தட்டினை ஸ்ரீராம் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய சேரன் திறமைசாலிகளை என்றுமே தூக்கிவிடவேண்டும். நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மூலக்கதைகளை எழுதித் திரைப்படமாக்கும் இயக்குனர்கள் எளிதில் முன்னணிக்கு வரமுடியவில்லை.அதேசமயம் வெளி நாட்டு சினிமாக்களைக் காப்பி அடித்து எளிதாக முன்னேறிவிடும் இயக்குனர்கள் தங்களை மேதாவிகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள், கோடிக்கணக்கில் சம்பளமும் வாங்குகிறார்கள். ஆனால் புத்திசாலி ரசிகர்கள் அவர்களை இனங்கண்டு கொள்வதால் வந்த வேகத்தில் வந்த வேகத்தில் காணாமலும் போய்விடுகிறார்கள். சொந்தமாக யோசிக்கும் படைப்பாளிகள் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் ஷம்மீர் கூட்டணி சொந்தமாகவும் மிகவும் புதுமையாகவும் சிந்தித்து வெளியிட்டு இருக்கும் நியான் நகர நாவலும் பாடல்களும் வெற்றி பெற வாழ்த்தும் அதே வேளையில் இந்த நாவலைத் தாம் படமாக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
நியான் நகரத்தில் வசிக்கும் வினய் கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் அவன் சிறுவனாய் இருந்து வாலிபன் ஆகும் வரையில் நடக்கும்ன் சம்பவங்கள் அனைத்தும் தன் வாழ்க்கையிலும் நடந்திருப்பதாகவும் கிட்டத்தட்ட என்னுடைய சுயசரிதையோ என்று நினைக்கத்தோன்றும் அளவிற்கு இருந்ததாக நடிகர் பிரசன்னா பேசினார். தமிழை தாம் மிகவும் நேசிப்பதாகவும் தமிழில் வரும் ழகரம், ரகரம் போன்றவற்றை தாம் என்றுமே தவறாக Pronounce செய்வதில்லை என்றும் பிரசன்னா பேச அரங்கம் முழுவதும் கிண்டல் சிரிப்புகள். நல்லபடங்களை மட்டுமே கொடுத்துக்கொண்டிருந்தால் வேலைக்காகது 3 வருடத்திற்கு ஒரு படம் தான் கொடுக்க முடியும் ஆகவே மற்றவர்களைப்போல தாமும் ஏனோ தானோ படங்களை ஒத்துக் கொண்டு வருடத்திற்கு 4 படங்களில் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்த நேரத்தில் தாம் நியான் நகரத்தைப் படித்ததன் மூலம் தன்னுடைய முடிவு தவறானது என்று உணர்ந்துவிட்டதாகவும் தனது கொள்கையிலேயே உறுதியாக இருப்பது என்கிற முடிவுக்குத் தாம் வந்து விட்டதாகவும் அந்த அளவுக்கு நியான் நகரம் என்னைப் பாதித்து விட்டது என்றும் பிரசன்னா பேசினார்.
பிரபல எழுத்தாளர் அசோகன் ஷம்மீர் அணியினரின் ஒவ்வொரு முயற்சியும் நியான் விளக்கின் ஒளி போன்று தொடர்ந்து பிரகாசிக்கட்டும் என்று வாழ்த்தினார்.
தனித்தனியா தங்களின் திறமையினைப் பயன்படுத்திக் கொண்டிருந்த போது கிடைக்காத அங்கீகாரம் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றிய போது எங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்று இந்த நாவலை எழுதிய ஷம்மீர் கூறினார், அதில் சிறப்பான ஒரு அர்த்தம் பொதிந்திருக்கிறது அல்லவா..?
ஷம்மீர், வசந்த், விஜய்கிருஷ்ணன், ரம்யா, பிரேம், ஆகியோர் எழுதிய பாடல்களுடன் பாரதியாரது வரிகளுளையும் பாடகர்கள் கிருத்திகா, அஜீஷ், சச்சின், அனூப் ஆகியோர் மேடையிலேயே பாடிக்காட்டினர்.
ரணம் சுகம் என்கிற வெற்றிகரமான நாவல்+ இசைக்குப் பிறகு இந்த வருடம் நியான் நகரம் நாவலை உயிர்மை பதிப்பகத்துடனும், கிளாரிட்டி ரிக்கார்ட்ஸுடனும் சேர்ந்து வெளியிட்டிருக்கிறார்கள்.
இதே சிந்தனையுடனும் திறமையுடனும் இருக்கும் இளைஞர்களுக்கு/புதியவர்களுக்கு கை கொடுக்கவும் பாதை அணியினரின் கைகள் காத்திருக்கின்றன.
நியான் நகரத்திற்குள் செல்லுங்கள் அதன் அழகை ரசியுங்கள், அங்கே இருக்கும் கதாபாத்திரங்களுடன் பழகுங்கள். பிரசன்னாவை பிரதிபலித்ததைப் போல அவர்கள் உங்கள் ஒவ்வொருவரையும் பிரதிபலிக்கக் கூடும்.




