அந்த நாய் என்னைத் தப்பா நினைச்சுக்கிச்சு – Vijay Anandh.K

பழைய வீட்டுக்காரவங்க திடீரென்று, “எங்களுக்கு வீடு வேணும் 3 மாசத்துல காலிபண்ணிருங்க”ன்னு சொல்லி 2 மாசம் முடிஞ்சுருச்சு. நிறைய வீடு பாத்தாச்சு, எங்க “பட்ஜெட்” க்கு எதுவும் செட்டாகல. புறாக்கூண்டு மாதிரி நங்கநல்லூருல உள்ளே ரொம்பதள்ளி ஒரு புதுவீடு காமிச்சார் புரோக்கர். அந்த வீடு எங்க பட்ஜெட்டுக்கு உள்ளதான் என்றாலும் வீடு ரொம்ப சின்னதா இருந்ததால வேண்டாம்னு சொல்லிட்டேன்.

“டேய்… இந்த மாசம் நாம வீட்டைக்காலி பண்ணலைன்னா அப்புறம் ஹவுஸ் ஓனர் ஏதும் சொல்லப்போறாங்கடா” என்று அம்மா சொல்ல.  “நாம்பாத்துக்கிறேன்… நல்ல வீடு கெடய்க்கும்” என்று சொல்லிவிட்டு புரோக்கர்கூட பைக்குல வரும்போது சும்மாதான் பேச்சுக்கொடுத்தேன். “அண்ணா, புது வீடெல்லாம நமக்கு வேண்டாம்… நெறய சம்பாதிச்சு சொந்தமா கட்டுற நிலை வரும் போது புது வீட்டில பால்காய்ச்சிக்கொள்ளலாம்… இப்போதைக்குக் கொஞ்சம் பழசா இருந்தாலும் பரவாயில்ல… ஆஞ்சநேயர் கோவில் பக்கத்துலயே பாருங்கண்ணா..” என்று சொல்ல.  “அம்மாதான் அண்ணாச்சி ( நான் அவர அண்ணான்னு சொன்னதக் காதுல வாங்கினாரேன்னே தெரியல)  புது வீடுன்னு சொன்னவுடனே ஓகே பார்க்கலாம்னு சொன்னாங்க…12வது தெருவுலயே ஒரு டபுள் பெட்ரூம் வீடு இன்னும் 10 நாள்ல காலியாகுது உங்க பட்ஜெட்டுக்குள்ளதான் வரும்..என்ன கொஞ்சம் பழசா இருக்கும் பாத்திரலாமா..?” என்று கேட்க.

முதல்ல அதைச்செய்ங்க என்று கூறிவிட்டேன். அடுத்த நாளே அந்த வீட்டைப்பார்க்க, எனக்கு ரொம்ப புடிச்சுப்போச்சு… அம்மாவுக்கும் தான். அந்த வீடு இப்போ இந்த வீடு ஆகிப்போச்சு. அதாவது இந்தக்கதையை இந்த வீட்டுல இருந்துதான் எழுதிக்கொண்டு இருக்கேன்.

நாலு நாலு வீடுகள் கொண்ட ரெண்டு பிளாக்குகள். எங்க வீடு நுழைஞ்சவுடனேயே இடது பக்கம் கீழேயே இருக்கு. அம்மாவுக்கு ரொம்ப வசதியாப்போச்சு. மாடி எதுவும் ஏறி எறங்க வேண்டாம்ல..  முதல் ரூமை அம்மா எடுத்துக்கிட்டாங்க… உள்ளே தள்ளி ஒரு ரூம் அதை நான் எடுத்துக்கிட்டேன். பெரிசா ரெண்டு ஜன்னல் நல்ல வெளிச்சம் மற்றும் காற்றோட்டம். சூப்பரா இருந்துச்சு. கம்யூட்டர செட் பண்ணிட்டு இண்டெர்நெட் கனெக்‌ஷன் மாத்திக் கொடுக்க 2 நாளாச்சு.

வேலை நேரம் போக மத்த நேரங்கள்ல சாட்ல வரும் நண்பர்களிடம் நாங்க வீடு மாறினதைச் சொல்லியாச்சு. எக்சாட்டா எங்கடா வரும் என்று கேட்டவர்களிடம். கூகுள் மேப்ல 12வது தெருன்னு போட்டு சர்ச் பண்ணா ஒரு விஷயம் எனக்கு ரொம்ப ஆச்சிர்யமா இருந்துச்சு. ங்கொய்யால எங்க பிளாட்டயே போட்டோ எடுத்துப் போட்டு வைச்சுருக்காய்ங்க…அட இன்னொரு விஷயம் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் எங்க வீட்டுக்கு  நேர் எதிரே இருந்தது. அப்படியே அந்த மேப்பின் லிங்கை காப்பி பண்ணி சாட்ல பேஸ்ட் செய்து இதுதாண்டா எங்க வீடு என்று சொல்ல நண்பர்களுக்கு மிகவும் சந்தோஷம்.

“அம்மா இங்க வாயேன்..இதோ பாரு… நம்ம வீடு.. தெரியுதா.. இந்த புளூ கலர்ல பெயிண்ட் அடிச்சுருக்கு பாரு..இது அவங்க வீடு..இந்தா கீழ நம்ம வீடு” என்று காட்ட… “ஆத்தாடி இண்டர் நெட்டுல என்னமுலாம் பண்ணிருக்காய்ங்க..” என்று அம்மாவும் ஆச்சிரியப்பட்டாங்க.. “இங்க பாரும்மா ஆஞ்சநேயர் கோயில்  நம்ம வீட்டுக்கெ நேரே இருக்கு பாரு” என்று சொல்ல… “பாத்தியா அவரோட பார்வையிலே வீடு கெடச்சுருச்சு பாரு” என்று மேலும் ஆச்சிரியப்பட ஆரம்பித்தவர்களை விட்டால் ரொம்ப பேசிக்கொண்டே இருப்பார்கள் என்று கருதி…  “போம்மா போம்மா… எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு” என்று அவர்களை அங்கே இருந்து கெளப்பி விட்டு விட்டு சாட்ல பிசியாகி விட்டேன்.

கரெண்ட் போயிருச்சு. ஜன்னல்லாம் நல்லா திறந்து வைச்சேன். அங்கே எனக்கு இன்னொரு அதிசயம். அமேசான் காட்டில் இருந்து ஒரு 3 கிரவுண்ட் அப்படியே கேக் கட் பண்ற மாதிரி கட் பண்ணி எஙக வீட்டுக்குப் பின்னால கொண்டு வந்து வச்சா எப்படி இருக்கும் அந்த மாதிரி 3 கிரவுண்டல அழகான காடு. நெறய மரங்கள். விதவிதமான வண்ணதுப்பூச்சிகள்… மைனா… அப்புறம் அது என்னன்னே தெரியல கெளதாரி மாதியும் இருக்கு பருந்து மாதிரியும் இருக்கு… அப்புறம் குயில்…அணில்… சில நேரங்கள்ல கிளிகள்… போதாக்குறைக்கு வீட்டை விட்டுத் துரத்திய வயதானவர்களைப்போன்றே அனாதையாக விடப்பட்ட ஒரு வயதான பொமேரியன் வகை  நாய், அந்தக்காடுக்குள்ள அங்குமிங்கும் போகும் போது ஒரு சிங்கம் உலாவுகிற மாதிரியே இருக்கும். ஆஹா சூப்பர்ப்… லைவ்வா ஜியாகரபிக்கல் சானல் பார்க்கிற மாதிரியே ஒரு ஃபீலிங்… ஆனாலும் ஒரு சின்ன குறை. சுத்தியும் வசிப்பவர்கள் குப்பைகளை அங்கே வீசி வீசி ஒரு மினி குப்பை மேடாகவும் இருந்தது. அதைச்சுற்றி இருக்கிற எல்லா வீடுகள்லயும் போயி இனிமேல் இப்படி குப்பைலாம் போடாதீங்க.. நம்ம எல்லோருக்குமே அதனால பாதிப்புதான் என்று சொல்லிவிட்டு வந்தாச்சு. சிலர் புரிந்து கொண்டார்கள். சிலர் மன்னிப்பு கூடக்கேட்டார்கள். ஒரு சிலர் அவனை நிறுத்தச்சொல் நான் நிறுத்துறேன் என்று நாயகன் வசனம் பேசினார்கள்.

சரி அதை விடுங்க…

அந்த மினி அமேசான் காட்டுல இருந்து வரும் பல்வேறு வகையான சத்தங்கள் என்னைப் பல நேரங்கள்ல ஒரு சிறுவனாக மாற்றிவிடும். அப்படித்தான் அன்றும் ஒரு விநோத சத்தம் கேட்டுச்சு. இது பறவைகளின் சத்தம் இல்லையே?. ஏதோ முணங்குவது போல இருந்தது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கும் போதுதான் தெரிந்தது ஒரு நாய் குட்டிகளை ஈன்றுள்ளது என்று. தொடர்ந்து ஒரு 20 நாட்கள் அந்தச் சத்தத்தையும் கவனிக்க ஆரம்பித்தேன். கண் திறக்காத நிலையில் வரும் முணங்கல் சத்தத்தில் இருந்து கண் திறந்தவுடன் வரும் க்கீ க்கீ… சத்தம் வரை அதுவும் அழகாக இருந்தது.

கொஞ்ச நாள்ல குட்டிகள் வீட்டுப்பக்கம் வர ஆரம்பித்தன. மொத்தம் 5 குட்டிகள். இப்போ அந்தக் காட்டுல உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிச்சிருச்சு. அஞ்சுல ஒண்ணு மட்டும் சவளப்பிள்ளை மாதிரி கொஞ்சம் நோஞ்சனா இருந்துச்சு. ஒரு நேரம் சோறு வைக்க ஆரம்பிச்சேன். மோர் சாதம் பிணைஞ்சு லேசா குழம்பு ஊத்தி வைச்சேன் அஞ்சும் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தன.  நான்  வீட்டில் இல்லாத நேரங்களில் அம்மாவும் அதுங்களுக்குச் சாப்பாடு வைக்க ஆரம்பித்தார்கள்.

சில நேரங்களில் இரவு வீட்டிற்குத் திரும்பும் போது பிளாட்பார்ம் கடையில 2-3 புரோட்டா நல்லா பிச்சுப்போட்டு லேசா சால்னா ஊத்திப் பார்சல் வாங்கிட்டு வந்து போடுவேன். அப்புறம் ஐந்தும் எங்க வீட்டுக்குள்ள வர ஆரம்பிச்சுது. அம்மா சொன்னாங்க, “நம்மளாலலாம் தொடர்ந்து வளர்க்க முடியாது. அட்டைப்பெட்டில வைச்சு எங்கயாவது கொண்டு போயி விட்டுட்டு வந்துரு”  “இல்லம்மா புளுகிராஸ்ல சேத்திடலாம் ..” என்று சொல்லி விட்டு போன் செய்ய ஆரம்பித்தேன்… லைன் போகுது யாரும் எடுக்க வில்லை. அதுல இருக்கிற நல்ல துறுதுறுப்பான கருப்புக்குட்டி இதையெல்லாம் கவனிச்சும் கவனிக்காத மாதிரி ரியாக்‌ஷன் கொடுத்துக்கிட்டு இருந்துச்சு.

ஒரு நாளைஞ்சு நாள் போச்சு… கரெக்ட்டா சாப்பாட்டு நேரத்துக்கு அஞ்சும் வீட்டுகே வர ஆரம்பிச்சுருச்சு… அப்படியே வாலை ஆட்டிக்கிட்டு கழுத்து வலிக்கிற மாதிரி நிமிர்ந்து என்னைப் பாத்துச்சுங்க… “சரி இன்னைக்கு வச்சுருவோம் நாளைக்குக் கொண்டு போயி விட்டுர்றா..” என்று சொல்லிக் கொண்டே அம்மா நிறையவே சாப்பாடு வைத்தார்கள். ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்காம சமத்தா சாப்பிட்டுச்சுங்க…

அடுத்த நாள், அம்மா, காலைல சாதம் வைக்கல. டிபன் செய்து சாப்பிட்டோம். சாப்பிட்டு விட்டு இண்டெர்நெட்ல வந்து உக்காந்துட்டேன். திடீரென்று அஞ்சும் ஞாபகம் வந்தது, சாதம் வைக்க நேரம் ஆகும் சே..என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும் போதே வாலை ஆட்டிக்கொண்டு வீட்டிற்குள்ளேயே வந்துருச்சுங்க… ஒரு ஐடியா தோணுச்சு… ரொம்ப நாளைக்கு அப்புறம் அதுங்களுக்காகத்தான் கடையில போயி  பிஸ்கட் பாக்கெட் வாங்கி வந்தேன். எங்கள் வீட்டு முன் இருந்த முற்றத்தில் அந்த பிளாட்டில் வசிக்கும் குடித்தனக்காரர்கள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்… அங்க வைச்சு சீன் போடவேண்டாம் என்று கருதி… ச்சூ..ச்சூ… என்று அழைக்க, அஞ்சும் என்னை நம்பிப் பின் தொடர்ந்து வந்துச்சுங்க… காம்பவுண்டுக்கு வெளியே அழைத்துச் சென்று பிஸ்கட்டுகளைப் போட்டேன். புது டிஷ்ஷா இருக்கே என்று நினைத்துக் கொண்டு ஆசையோடு சாப்பிட்டன.

வீட்டுக்குள்ள வந்து என் வேலையைப் பார்க்க ஆரம்பிச்சேன். திடீரென்று கீச் கிச்சுன்னு ஒரே அலறல் சத்தம்… வெளியே ஓடி வந்து பார்த்தா குப்பை அள்ள வருபவர் ஏற்கனவே 3 குட்டிகளைப் பிடித்து சாக்குப்பைய்க்குள்ள போட்டிருக்கிறார். ஹல்லோ என்னங்க…ஏன் பிடிக்கிறீங்கன்னு கேட்டேன். எங்கள் தெருவில் இருக்கும் சில பெரியவர்கள் அந்தக் குட்டிகளைப்பிடித்து வேறு எங்காவது கொண்டு போய் விடச்சொல்லிக் காசும் கொடுத்திருக்கிறார்கள்.கொஞ்சம் மனசுக்குக் கஷ்டமாத்தான் இருந்துச்சு… ஆனாலும் அங்கே அமைதியாக இருப்பதைத் தவிர வேறு வழி தெரியல. இதோ நாலாவது குட்டி நான் இருக்கேன்னு தைரியமா வந்திருக்கக்கூடும் லபக்குனு பிடிச்சு அதையும் சாக்குக்குள்ள போட்டுட்டாரு. அஞ்சாவது குட்டி மட்டும் பிடி கொடுக்கவே இல்லை. ஷண நேரத்தில் சுதாரித்துக் கொண்டு அமேசான் காட்டிற்குள்ளே சென்று ஒளிந்து கொண்டது. அவரால் பிடிக்க முடியவில்லை. சரி இதை அப்புறம் பிடித்துக் கொள்ளலாம் என்று அவர் சென்று விட்டார்.

அமேசான் காட்டுக்குள்ள அது எங்க இருக்குன்னு நானும் பார்வையாலேயே தேடினேன். காணோம். ச்சூ..சூ..ச்சூ என்று நாக்கைச் சுழற்றிக் குரல் கொடுத்தேன் …ம்ஹூஹுங்…வரவேயில்லை.

அதற்கு அடுத்து 2 நாட்கள் என் வேலைல பிசியா இருந்துட்டதால… அந்தக் குட்டியின் ஞாபகம் இல்லாமலே போயிருச்சு.

திடீரென்று பெரிய நாய் குரைக்கிற சத்தமும் அதைத் தொடர்ந்து குட்டி நாய் அலறல் சத்தமும்… ஜன்னல் வழியா எட்டிப்பார்த்தேன். அந்தக் குட்டி  இரண்டு நாளாகச் சாப்பிடவில்லை போல, மெலிந்திருந்தது. தாயிடம் பால் குடிக்க வர அது கடித்து விரட்டியிருக்கிறது. தாயும் ஏதோ மனசு சரியில்லாத மாதிரியே இருந்தது. இருக்காத பின்ன அஞ்சுல நால பிடிச்சுட்டு போயிட்டான்ல… சரி நாமளாவது ஏதாவது கொடுக்கலாம் என்று பார்த்தால் வீட்டுல ஒண்ணும் இல்ல. மறுபடியும் கடைக்குப்போயி 2 பிஸ்கட் பாக்கெட் வாங்கிட்டு வந்தேன். ஜன்னல் வழியாவே ஒவ்வொன்னா தூக்கிப் போட்டேன். குட்டி நாய் ஆசையா ஓடி வர மறுபடியும் ஆக்ரோஷமாகக் குரைத்து அந்தத் தாய் விரட்ட குட்டி பயந்து ஒதுங்கியிருச்சு.

தாய்க்குப் போட்டபிறகு குட்டி இருந்த இடத்துக்கே சென்று வைத்தேன். ஆனால் அது திங்கவில்லை. மோந்து பார்த்து விட்டு பிஸ்கட் என்று தெரிந்த உடனே விலகிச் சென்று விட்டது. அப்போதான் கவனித்தேன் அது அந்தத் துறு துறு குட்டி நாய். ஆஹா… கடைசியா இந்தப் பிஸ்கட் சாப்பிட்ட போதுதானே நம்ம கூடப்பிறந்தவய்ங்களையெல்லாம் கடத்திட்டுப்போனாய்ங்க… இவன் தான் அன்னிக்கும் பிஸ்கட் வைச்சான். இன்னிக்கும் வைக்கிறான். பிஸ்கட் மேட்டரை ஏற்கனவே அதன் தாயிடம் சொல்லியிருக்கக்கூடும் அதனால் தான் அந்த பிஸ்கட்டை நீ சாப்பிட வேண்டாம் என்னதான் நடகுதுன்னு பார்ப்போம் என்று அந்தத் தாயே முழுவதுமாகச் சாப்பிட்டு இருக்கக்கூடும்.

இப்பொழுது அந்தத் தாய் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தது. தன் புள்ளகுட்டிகளைக் கடத்திட்டு போனதுக்கு நான் தான் காரணம் என்று அது என்னை சந்தேகப்பட்டு  இருக்கக்கூடும். அதன் பார்வை என்னை லேசாகப் பயமுறுத்தியது. அந்தக் குட்டிங்களோட அப்பனுங்கள கூட்டிட்டு வந்து நம்மள ஒரு வழி பண்ணிருமோ என்றெல்லாம் நினைக்கத் தோன்றியது.  ஏன்னா சின்ன வயசுல நாய் கடிச்சு தொப்புளைச் சுத்தி ஊசி போட்ட அனுபவம் எனக்கு இருக்கு. அதுவும் எங்க கடி வாங்கினேன் தெரியுமா..? என் இடது பக்கக் காதுல! சாதாரண நாயா இருந்ததால லேசா ஒரு கடியோட போச்சு… அதுவே அல்ஷேசன் மாதிரி நாயின்னா காதே போயிருக்கும்… அப்புறம் நானும் ஒரு தோடுடைய செவியன் ஆகியிருப்பேன். அதாவது  “ஒருத்தோடுடைய” செவியன்.

எதுக்கு வம்புன்னு ஜன்னலைச் சாத்திட்டு உக்காந்து வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்… அடுத்த நாள் அந்தக் குட்டி மட்டும் தனியா இருந்துச்சு. மறுபடியும் பிஸ்கட் வைச்சேன்… சாப்பிடல… கொஞ்சம் மோர் சாதம் வைச்சேன்…. உடனே சாப்பிடாம.. நான் போயிட்டனா.. என்று கவனித்து அருகில் வந்து லேசா கொறித்தது…. அஞ்சு குட்டிகள் இருக்கும் போது ஆளாப்பறந்து சாப்பிடும்… ஆனால் தனியா அதுவும் பயத்தோட மற்றும்  சந்தேகத்தோட சாப்பிட்டதால கொஞ்சமா கொறிச்சுட்டு நிறையா மிச்சம் வைச்சுட்டுப் போயிருச்சு.

அப்புறமப்புறம் நான் வரும் போதெல்லாம் பயந்து ஓட ஆரம்பிச்சுருச்சு… எனக்குப் புரிஞ்சு போச்சு…  “அந்த நாய் என்னை தப்பா நினைச்சுக்கிச்சு”ன்னு.

சினிமாவுல சாதிக்கணும்னு இத்தனை வருஷமா முயற்சி செஞ்சுக்கிட்டு அம்மாவையும் ரொம்ப கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்கேன். சரியாப் புரிஞ்சுக்காம அவரவர் ஸ்டேட்டஸுக்குப் பயந்து பழைய நண்பர்கள் விலகிப்போயிட்டாங்க. தன் கடமையை மறந்து தன் இயலாமைக்கு என்ன சாக்கா வைச்சுட்டு என் அப்பனும் என்னைப்புரிஞ்சுக்காம ஒதுக்கி வைச்சுட்டான்… பார்த்து 11 வருஷம் ஆச்சு…

அந்த மனுஷப்பயலுக என் ஆத்மார்த்தமான விருப்பத்தைத் தெரிஞ்சுக்காம தப்பா  நினைச்சுக்கிட்டதால வராத வருத்தம் அந்த சின்ன நாய்க்குட்டி தன் கூடப்பொறந்தவங்களைப் புடிச்சுட்டுப் போனதுக்கு நான் தான் காரணம் என்று என்னைத் தப்பா நினைச்சுக்கிட்டதால எனக்கு வந்துச்சு.

விட்டுப்போன உறவுகளும் நட்புகளும் நான் யாருன்னு என் இயக்கத்தில் ஒரு படம் வரும் போது புரிஞ்சுப்பாங்க… அவர்கள் புரியணும்கிறதுக்காக மட்டும் நான் படம் இயக்கப்போவதில்லை. அது வேற…

ஆனா இந்தச் சின்ன நாய்க்குட்டிக்கு நான் எந்த தப்பும் பண்ணலைன்னு  எப்படி புரிய வைக்கப்போறேன்…?

—————————–

Like mysixer.com on FB for more interesting updates and unlimited Tamil Cinema news/honest-interesting  reviews/Trailers

நடிகை திரிஷாவுக்கு இந்தக் கதை சமர்ப்பணம்.

இது 100% நிஜமாக நடந்த சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கொஞம் பெரிய சிறுகதை . தெரு நாய்களைப் பாதுகாக்கும் அமைப்பான BETA அமைப்பினரின் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் நடிகை திரிஷாவுக்கு இந்தச் சிறுகதை சமர்ப்பணம். அவர் உண்மையிலேயே தெரு நாய்களிடம் பரிவுடன் நடந்து கொள்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-Vijay Anandh.K

கதையில் இருக்கும் குறை நிறைகளை kvijayanandh@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.

நன்றி!

22 Comments

  1. santha says:

    super vijay….oru nidharsanamana nijathai arumaiyai vadivamaithu…ettramo or irakkamo illamal appadiye koduthu irukirai…unnaiyum serthu than indha kadhayil…..un vida myrachi thirai ulagil mattum alla andha kutti nayidamum vetri perum enbathil endha ayyamum illai….

  2. kiruthika says:

    nice sir

  3. kiruthika says:

    ella storysum start ahurapo oru oorla ….. anga … inga… oru maram. ipdi lam start pannuvanga…….. but direct ah story ku varradhu nalla move………………
    then….. indha short story la kadhai kulla kadhai irukura madhiri vachurukuradhu… plus point……………
    but repeated ah sadham vachen … soru vachen,,,,,, nu thirumba thirumba varradhula edhachu change vachurukalam………………
    dogsoda mind read pandra madhiri vachadhu plus point…………
    verum dog pathi dhan kadhai…. neenga matum dhan oru character ah involve ahureeenga… mother character konjam commy than….. when compared to ur character………. irundhalum story bore adikavaeee illa………………………
    read pandradhuku nalla irundhuchu………………….

    thats all

    • mysixer says:

      ///but repeated ah sadham vachen … soru vachen,,,,,, nu thirumba thirumba varradhula edhachu change vachurukalam………………//// ஒரு தடவைதான் நான் சாதம் வைச்சிருபேன்னு வரும்… இன்னொரு தடவை அம்மா வைக்கிறாங்க்/// ஆனால் தங்களுடைய கமென்ட் மிகவும் நேர்மையாக இருப்பதாகவே எனக்குப் படுகிறது… 100% சரியாகப்புரிந்து கொண்டு விமர்சனம் செய்திருக்கிறீர்கள்…
      நன்றி

  4. Akila Palani says:

    Very Nice Mr.Vijay Sir…i guess you r writing after a long time..

  5. saravanan says:

    vijay, ennaachu? un manavethanai purikirathu, manam thalarnthuvidathe,
    ontru purinthu kol, un arukil irukkum naai thaan unnai thappaaga ninaikkirathu, unnai pirintha naaikal unnai eppothavathu ninaiththkkondu thaan irukkum. unnai paarththaal kandippaaga nantriyai kaattum.
    ”Wish u all success in cine field”
    ”God bless you”

  6. vasumativaasan says:

    wow..arumai vijay..
    ungal manathai ungal paarvaiyaal unarthungal. athu purinthukollum. manitharagalai vida naigal saalachchiranthathu. naanum oru naai kuttyai valarkiren. unmaiyileye nam ennangalai purinthukollum.
    vaazhthukkal. melum ezhuthungal. ungalukku thunai neengaley…athai maravaatheergal. ungalai nesikka aarambiyungal, thaanaga unagalai nesikkum nabargalai senthippeergal. all the best.

  7. Saravana Ganesan says:

    Marvelous

  8. Moogambigai says:

    Migavum arumayaana Kurungkadhai.Ungal unarvai azhaghaga milira vaithirukireergal.

    Paaratukkal

  9. shalini says:

    arumaiyana kathai.. iruthiyil vazhkaiudan oppidamal athai vasagargalin karpanaiku vitu irunthaal innum alagaga irunthirukum

  10. apitha sabapathy says:

    Hi Vijay….kadhai arumaya irundhadhu!!! naayin vilagal parviyavida uravu vatathil mel ungallukku irundha kovamum vetripera vendum endra veriyum en manathai thottadhu.. ungalluku enna kandipagha oru thalam kathurikiradhu adhai neengal adiyum naal vegu doorathil illai…vazthukal!!!…

  11. Vaidehi says:

    விஜயானந்த்,
    நான் உங்களிடம் இவ்வளவு எதிர்பார்க்கவில்லை. முதலில் பார்த்தபோது சிறிது வித்தியாசமாக தெரிந்தீர்கள். ஒரு சாதாரணமான SBI Insurance advisor ஆக தெரியவில்லை. இப்போதுதான் அது புரிகிறது.
    வாழ்த்துக்கள்.
    உங்கள் சிறுகதை மிகவும் அருமை. என்னுடைய பிளாட் மட்டும் எனக்கு அதில் சிறப்பாக தெரியவில்லை. அதற்கும் மேலே அந்த கதையில் எனக்கு சில ஒற்றுமைகள் உள்ளது. பிற்பாடு ஒருசமயம் உங்களுக்கு தெரிவிப்பேன். அது ஒரு சிறுகதையாக உங்களிடமிருந்து ஒளிரும் என்பதில் எனக்கு நிச்சயம் தெரியும். உங்கள் கனவுகள் நனவாக ஆஞ்சனேயர் கண்டிப்பாக துணையிருப்பார்.
    வைதேஹி

  12. Sarath says:

    Really Nice.. good. keep it up..

  13. ushaa says:

    arumai arumai
    enna oru feeling
    nera paaththadhu polairukku
    ஆனா இந்தச் சின்ன நாய்க்குட்டிக்கு நான் எந்த தப்பும் பண்ணலைன்னு எப்படி புரிய வைக்கப்போறேன்…? super varigal kannil neer varavazhaithta varigal

    keep it up

    —————————–

  14. saran says:

    super sir..

  15. subasreemohan says:

    Hi This is Too Good.

  16. tamizh selvi says:

    super vijay…aazhamaana varigal

  17. Roshan Ravichandran says:

    Apt title and very nice content. It arrested my heart. Superb!

  18. Karthik Selvan says:

    hi anna…
    Neenga nalla kathai soldrenga.I mean unga kathaya padikarapo nalla follow panna mudiyudu.Kathiyin nadai romba nalla amaindirukku.Ovoru paragrapum padatoda oru scene madiri irukku.
    Super anna …
    Idu madiriye neraya eludunga :)
    Good luck…

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks