அன்னா ஹசாரே யின் உழலுக்கு எதிரான உண்ணாவிரதப்போர் இந்தியா முழுவதும் பெரும் எழுச்சியினையையும் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியினையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அந்நியர்களின் படையெடுப்புகளையும் சுரண்டல்களையும் மீறி 1947 ல் சுதந்திரம் அடைந்தது முதல் கடந்த 64 ஆண்டுகளில் பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் அசுர வளர்ச்சி உலக வல்லரசுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் எந்த ஒரு அசாதரணமான சிக்கல்களையும்- பேரிடர்களையும் எதிர் கொள்ளும் ஆற்றல் அதிலிருந்து விரைவில் மீண்டு சகஜ நிலைக்குத் திரும்பும் இந்தியர்களின் மன உறுதி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல்வேறு மொழிகள்-கலாச்சாரங்கள் அனைத்தையும் தாண்டிய இந்தியர்களின் இதய இணைப்புகளும் பிற நாட்டவர்கள் மத்தியில் இந்தியாவிற்கு பெரும் மரியாதையினைப் பெற்றுத் தந்து கொண்டு இருக்கின்றன. நமது ஊர்களின் சாக்கடை நாற்றங்களை விட, குப்பை கூழங்களை விட நம் நாட்டவர்களின் இமாலய ஊழல்கள் பிற நாட்டவரை முகம் சுழிக்கவும் வைக்கின்றன.
மிகப்பெரிய ஜன நாயக நாடான இந்தியா கடந்த 64 ஆண்டுகளில் ஆட்சியாளர்களின் பங்களிப்பை விட பெருமளவில் தனி நபர்களின் முயற்சிகளாலேயே- பங்களிப்புகளாலேயே இன்று வல்லரசு இலக்கை நோக்கி வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் இருக்கின்ற மிகப்பெரிய பலமே “சகிப்புத் தன்மை” என்பது தான். அதே சகிப்புத் தன்மை என்கிற பல்மே இன்று மிகப்பெரிய பலவீனமாகிப்போனதும் ஒரு துரதிஷ்டமே.
50 ரூபாய் லஞ்சம் வாங்கும் சாதாரண அரசு அதிகாரிகள் முதல் 50 ஆயிரம் கோடி லஞ்சம் வாங்கும் மிகப்பெரிய அரசியல் வாதிகள் வரை அனைவரையும் சகித்துக் கொள்கிறான். அதன் விளைவு இன்று சுகாதரமான குடி நீர்- சுகாதாரமான உணவு- வசிப்பிடம்- ஆரோக்கியமான சுற்றுப்புறச் சூழல்- தன்னுடையப் பாரம்பரியத்தையும் சுய ஒழுக்கத்தையும் போதிக்கும் கல்வி- சாலைகள்- மருத்துவ வசதிகள்- அடிப்படை வசதிகள் போன்றவை கிடைக்காமல் அவதிப்படுகிறான். அதனையும் அவன் சகித்துக் கொள்வதும் மிகப்பெரிய கொடுமை. பெரிதாகக் கனவு காணாவிட்டால் அதுவும் குற்றமே என்று
அப்துல்கலாம் சொல்லிக்கொண்டிருப்பதைச் சரியான புரிதலில் சாமன்யர்களுக்குக் கொண்டு போய் சேர்க்கும் கடமை ஒவ்வொரு கல்வியாளனுக்கும் சமூக சிந்தனையாளனுக்கும் இருக்கிறது. தன்னுடைய உரிமைகள் கூட அவனுக்குத் தெரிவதில்லை. அதனை எடுத்துச் சொல்லவும் இங்கு ஆட்கள் இல்லை. அவனது அடிப்படை உரிமைகளை செய்து தர வேண்டிய பணம் இன்று லட்சம் கோடிகளாய் வெளி நாட்டு வங்கிகளில் தூங்கிக் கொண்டிருக்கிறது. நூறு பேரின் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கத் தேவையான பணம் ஒருத்தனின் வசதிக்காகப் பயன் படுகிறது என்றால் அதில் பெரிய இழப்பு- பாதிப்பு இல்லை. ஆனால் உணவு-உடை-உறைவிடம் ஆகிய அடிப்படை வசதிகள் கூட இன்றித் தவிக்கும் கிட்டத்தட்ட 40 கோடி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணம் சில பேர்களின் வங்கிக் கணக்குகளில் இருப்பது வெட்கக்கேடு. அப்படிச் சேர்த்த பணம் எங்கிருந்து வந்தது 100 ரூபாயில் ஆரம்பித்து ஆயிரம், லட்சம் , கோடியாக உயர்ந்து இன்று லட்சம் கோடியைத் தொட்டு விட்ட லஞ்சம் மற்றும் கமிஷன் பணங்களே அவை. மக்களது அடிப்படை உரிமைகளை நிறைவேற்றுவதற்காகச் செலவிடப்பட வேண்டிய பணம் அது. தன் ஜாதிக்காரன் – தன் மதத்தைச் சேர்ந்தவன் – தன் பகுதியைச் சேர்ந்தவன் – என்கிற அடிப்படையில் மட்டுமே சிந்தித்து ஆக்கப்பூர்வமான அறிவும் – தொலை நோக்கு சிந்தனையும் – நம் பாரம்பரியங்களின் மீதும் நம்பிக்கையும் இல்லாத ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்ததும் இந்த இக்கட்டான நிலைக்கு இரு காரணம்.
உண்மையைச் சொல்லப்போனால் இந்தியாவின் 120 கோடி மக்கள் தொகையுமே இன்று சுகதாரமான சுற்றுப்புறம் என்கிற அடிப்படை வசதிகள் இன்றித் தவிக்கிறது. இதில் அந்த உழல் பேர்வழிகளும் அடக்கம் என்பதுகூடவா ஊழல் அரசியல்வாதிகளுக்கும் ஊழல் அதிகாரிகளுக்கும் தெரியவில்லை.?
எதுவுமே நிரந்தரம் இல்லாத இந்த உலகில் நிரந்தரம் இல்லாத அற்ப விஷயங்களை அடைவதற்கானப் பயணம் மட்டும் நிரந்தரமாக நடந்து கொண்டிருக்கிறது. பிறக்கும் ஒவ்வொருவனும் ஒரு நாள் செத்துப் போகத்தான் வேண்டியிருக்கிறது. அப்படிச் செத்துப்போகும் போது தான் சம்பாதித்த சொத்தும் – நகைகளும் – பணங்களும் தன் கூடவா வரப்போகிறது. அல்லது நாம் சாவதற்கு முன் செத்தவர்கள் எவரேனும் அவையனைத்தையும் கொண்டு சென்றதாகச் சரித்திரம் இருக்கிறதா..? இதனை ஏன் பகுத்தறிவு ஏற்க மறுக்கிறது. அப்படியானால் பகுத்தறிவு என்று பிரகடணப்படுத்தப் படுவது உண்மையில் பகுத்தறிவுதானா என்கிற சந்தேகம் வருகிறது. பிறப்பில் இருந்து இறப்பு வரை நீ என்ன சாதித்தாய்..? சாதனைகள் என்பது சுய நலம் சார்ந்ததாகிப் போனதும் ஒரு வெட்கக்கேடு. ஆட்சியாளர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் புலவர்களும் கல்வியாளர்களும் ஆட்சியாளர்களது தவறுகளைத் தைரியமாகச் சுட்டிக்காட்டாமல் இருந்ததும் நமது துரதிஷ்டமே. சுட்டிக்காட்டாமல் விட்டு விட்டதையும் தாண்டி ஆட்சியாளர்களே தங்கள் தவறினை உணர்ந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கூட ஏற்பட்டு விடாத அளவிற்கு அவர்களைப் புகழ்ந்து பாடி தங்களது காரியங்களைச் சாதித்துக் கொள்வதில் தான் குறியாக இருந்தார்கள்.
விவசாயம் – கல்வி – மருத்துவம் – அறிவியல் – வாழ்க்கை முறைகள் – இலக்கியம் – இதிகாசம் – ஆன்மீகம் என்று அனைத்து துறைகளிலும் எவரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லாது தனக்கென ஒரு தனித்தன்மையுடன் இந்தியா திகழ்ந்து கொண்டிருக்கிறது.
நாட்டை நேசிக்கின்ற, என் நாட்டின் மீது நம்பிக்கை இருக்கின்ற ஒவ்வொரு சராசரி இந்தியனுக்கும், நாளை உலகை ஆளப்போகிற சக்தி – பேரழிவுகளிலிருந்து இந்தப் பிரபஞ்சத்தைக் காக்கும் சக்தியாக இந்தியா விளங்கப்போகிறது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை ஆட்சியாளர்களிடம் இல்லாதது நமக்கு மிகப்பெரிய அவமானம்.
வெளி நாட்டுப் பயணிகளிடம் பேனாவுக்கும் – செண்டுக்கும் கையேந்தும் அறியாத வயதில் இருக்கும் சிறுவர்களைப்போன்றே இந்தியா என்கிற மாபெரும் சாம்ராஜ்யத்தை ஆளும் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். சுண்டைக்காய் அளவில் இருக்கும் நாட்டிலிருந்து என்றாலும் சரி கடந்த 200 வருடங்களுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக இருந்தாலும் சரி அங்கிருந்து வரும் ஆட்சியாளர்களிடம் 5000 ஆயிரம் ஆண்டு பாரம்பரியமும் கலாச்சாரமும் கொண்ட இந்தியாவை ஆளும் ஆட்சியாளர்கள் கை கட்டி நிற்பதும் அவர்களிடம் பொருளாதார உதவிகளுக்குப் பிச்சை கேட்பதும் இந்தியாவை நேசிக்கும் ஒவ்வொரு இந்தியன் மனதினையும் புண்படுத்துவதாகவே இருக்கிறது. என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில் என்கிற வரிகள் ஆட்சியாளர்கள் அறிவில் ஏறாததும் துரதிஷ்டமே.
அந்தப்பிச்சைக்காசுல எனக்கு சாப்பாடு வாங்கித்தரவேண்டாம் என்று ஊழல் அரசியல் வாதிகளின் தாய் – மனைவி –மகன் -மகள் – பேரக்குழந்தைகள் – உறவினர்கள் – நண்பர்கள் – தொண்டர்கள் – அந்த அரசியல் வாதிகளைப்போற்றி எழுதும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் கோபித்துக் கொள்ளாததும் துரதிஷ்டம் ஆகிப்போனது. அந்தச் சராசரி சுய நல மனிதர்கள் கோபித்துக் கொள்ளவில்லை என்றால் என்ன என் அன்னை பாரதமாதா கோபித்துக் கொண்டாள் போலும்!! அதன் விளைவு, இந்தியாவில் இருக்கும் வளங்களைப் பிறர் குறைந்த செலவில் அபகரிக்க விட்டு விட்டு அதன் லாபத்தில் சிறுதுளியினை அவர்களிடமே கடனாகக் கையேந்திப் பிச்சை எடுத்து என் தேசத்தில் செலவிட முனைந்தது முழு அளவில் வெற்றி பெறாமல் அந்தப்பணம் ஊழல் அதிகாரிகளின் -அரசியல்வாதிகளின் கைகளிலும் அவர்களது வங்கிக் கணக்குகளிலும் கோடி கோடியாகக் கொட்டிக் கிடக்கிறது.
சுதந்திர இந்தியாவின் அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற தன்மையாலும் திடமான முடிவுகள் எடுக்கத் தைரியம் இல்லாததாலும் வெளி நாடுகளில் இருந்து கடனாக வாங்கிய பிச்சைப் பணமும் உள் நாட்டு வளர்ச்சியினை சுரண்டிய பணமும் ஊழல் அரசியல்வாதிகளின் வங்கிக் கணக்கை அதிகரித்துக் கொள்ளத்தான் என்பது இன்று உள்ளங்கை நெல்லிக்கனி போன்று அறியப்பட்டதாகி விட்டது.
10 வருடங்களுக்கு முன்பு வெளி வந்த ஒரு திரைப்படத்தில் இந்தியாவின் கடனை அடைக்க தன் பங்கான மூவாயிரத்துச் சொச்ச ரூபாயை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்தான் அந்தப் படத்தின் கதாநாயகன். இன்று அது முப்பாதாயிரத்துச் சொச்சமாக உயர்ந்திருக்கிறது. ஒவ்வொரு குடிமகனின் மீதும் அந்தக் கடன் அவன் விரும்பாமலே அவன் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.
கடனை அடைக்கவே முப்பதாயிரத்துச் சொச்சம் தேவைப்படுகிறது என்றால் ஒவ்வொரு தனிமனிதனுக்குமான உணவு-உடை-உறைவிடம்-கல்வி-வேலை-சாலை-மருத்துவம் என்று அவனது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற மேற்கொண்டு சில ஆயிரங்கள் தேவைப்படுகின்றன.
அந்தப்பணம் இருக்கத்தான் செய்கிறது ஆனால் ஒரு சிலரால் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வாழும் நாளில் அவர்களுக்கும் உபயோகம் இல்லாமல் அவர்களது சந்ததிகளுக்கும் உபயோகம் இல்லாமல் பொது மக்களுக்கும் உபயோகம் இல்லாமல் டெபாசிட் செய்யப்பட்ட வங்கிகள் இருக்கின்ற ஏதோ ஒரு நாட்டிற்குப் பலனளிக்கப்போகிறது. சில பினாமிகளுக்கும் சென்றடையப்போகிறது.
திருடனாய் பார்த்துத் திருந்த வேண்டும், சாட்சிக் காரனின் கால்களில் விழுவதை விட சண்டைக்காரனின் கால்களில் விழலாம்.
இங்கே கொள்ளையடித்து வெளி நாட்டு வங்கிகளில் பணத்தைக் குவித்து வைத்திருக்கும் உயர்திருக்களின் பட்டியலைச் சேகரித்து நேர்மையான
அதிகாரிகள்- நேர்மையான அரசியல் வாதிகள் – சமூக ஆர்வலர்களின் முன்னிலையில் “பேச்சு வார்த்தை” நடத்தி அந்தப் பணங்களைத் திரும்பவும் கொண்டு வர வகை செய்வோம். எதிர்காலத்தில் லஞ்சம் வாங்குபவர்களைத் தண்டிப்பதற்காகக் கடுமையான தண்டனைகளை இயற்றுவதை விட, 1 ரூபாய் கூட லஞ்சமாகப் பெற மறுக்கும் மனோதிடமும் சேவை மனப்பான்மையும் கொண்ட அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் உருவாக்குவோம் முக்கியமாக லஞ்சம் கொடுத்தாவது காரியம் சாதித்துக் கொள்ள விழையாத குடிமக்களை – நாளைய சந்ததியினரை உருவாக்குவோம்.
அதற்கு இன்று அன்னா ஹசாரே போன்றவர்களின் பொது நலம் சார்ந்த போராட்டங்களுக்குத் தோள் கொடுப்போம். நம் தேசத்தை நாம் காப்பாற்றாமல் வேறு யார் காப்பாற்றுவார்கள்..?
-Vijay Anandh.K
Dear Friends, If you feel that its a worthy article I request you to send this links to your friends. Let us eradicate corruption. We can.
நண்பர்களே இந்தக் கட்டுரை சரியானது என்று நீங்கள் நினைத்தால் தங்களது நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள். ஊழலை முற்றிலுமாக ஒழிப்போம். நம்மால் முடியும்.
-Vijay Anandh.K





nice article…. true article too……
superb..anand
Hey vijay … i am not telling its wrong… its superb one.. even i hate corruption. still i am facing these kind of problem in my case… i am constructing one new house for changing my EB connection to commercial tarriff i am forced to give bribe to AE, FOREMAN, ESTIMATION FELLOW, LINE MAN.. EVEN .. Helper…
nice anand..