ஈரம் சுடும் – ஜான்

ஜான், தூத்துக்குடி மாவட்டம் மாரமங்கலம் என்னும் சிறிய கிராமத்தில் விவசாயக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் இளங்கலை பட்டம் வாங்கியவர். தொடர்ந்து பத்திரிக்கை மற்றும் சினிமாத்துறையில் தனக்கு இருந்த அலாதி பிரியத்தால் சென்னைக்கு வந்து பத்திரிக்கையாளராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்துத் தொடர்ந்து பல முன்னணி மக்கள்தொடர்பாளர்களிடம் உதவியாளராக இருந்து இன்று அவரே ஒரு முன்னணி மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து கவிதைகள், கட்டுரைகள் என்று எழுதிக் கொண்டிருப்பவர். தனக்கென ஒரு வலைப்பூத்தளத்தையும் அமைத்துக் கொண்டு பல வாசகர்களைக் கட்டிப்போட்டவர். பாரதி கண்ட புதுமை மனிதனாக தன் இல்லாள், இரண்டு பெண்குழந்தைகளுடன் அவர்களுக்குச் சம உரிமைகள் கொடுத்து வாழ்த்து வருபவர்.    இவருக்கு இருக்கும் நட்பு வட்டமும் மிகவும் பெரியது. அவரது Facebook profile id “Eearam Sudum”

இதோ அவரது கல்லூரி காலத்தில் எழுதிய ஒரு கவிதை www.mysixer.com வாசகர்களுக்காக…

பாத்தி பாத்தியாய் பாசம்
அம்பாரம் அம்பாரமாய் அன்பு
திட்டு திட்டாய் கருணை -இவை
கரைபுரளும் களம் காண வேண்டும்..

அவை எங்கிருந்தாலும்
பறக்க வேண்டும்.
காடு மலையேனும்
கடக்கவேண்டும்

முக்கால் காசுக்கு
முகம் தேடும் நட்பு வேண்டாம்.
கால் நிமிட கால தாமதத்துக்கு
கழண்டுகொள்ளும்
அன்பு வேண்டாம்.

ஆயிரம் ஜென்மம் கழியினும்
உலகமே நீயென உயிர் சொல்ல வேண்டும்.
பேச்சேயின்றி
அன்பு மூச்சி மட்டும் விடவேண்டும்.

முக்தி கொண்டு
முகம் மறக்க வேண்டும்- அந்த
அன்புச் சக்தி மட்டும்
சகலமாய் ஆட்கொள்ள வேண்டும்.

எங்கே அந்த ஜீவநதிகள்
கால் பரப்பிக் கிடக்கின்றன?
எங்கே ஓடுகின்றன அந்த
தேனும் பாலுமான தேக நதிகள்?

எங்கிருந்தாலும்
அங்கு செல்ல வேண்டும்..
“அன்பே என் முகவரியாய்
தொலைந்து போகவேண்டும்!!”

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks