முல்லைப் பெரியாறு விவகாரத்தில் புதிய அணை ஏதும் கட்டத் தேவையில்லை எனவும் இருக்கும் அணையைப் பலப்படுத்த பக்கவாட்டுச் சுவர் எழுப்புவதே போதுமானது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
தமிழகத்தை வறட்சிப் பிரதேசமாக மாற்றிவிடத் துடிக்கும் சில சுயநல கேரளா அரசியல் தலைவர்களின் அணை உடைந்து விடும் அதனால் கேரள மக்களுக்கு ஆபத்து என்று கேரள மக்களிடையேயும் மத்திய அரசிடமும் தவறான பிரச்சாரங்களை முன் வைத்து தமிழக நீராதாரத்திற்கு உலைவைக்கப் பார்க்கிறார்கள். இதனால் வெகுண்டெழுந்த தமிழர்களின் முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணை சம்பந்தமாக முன்னாள் குடியரசுத்தலைவரும் இந்தியாவின் அணு ஆயுத பலத்தை உலகுக்கு நிரூபித்தவருமான அப்துல் கலாம் ஆக்கப்பூர்வமான யோசனையை பிரதமரிடம் முன்வைத்துள்ளார்.
இது குறித்து மன்மோகன் சிங்குக்கு அப்துல்கலாம் எழுதியுள்ள கடிதத்தில், முல்லைப் பெரியாறு பிரச்னையால் இரு மாநில உறவும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. இரு மாநில மக்களும் அமைதி காத்து, தேசிய ஒருமைப்பாட்டை நிலை நாட்ட வேண்டும்
கேரளாவுக்கு அதிக மின்சாரம், தமிழகத்துக்கு அதிக தண்ணீர், இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான அணை பாதுகாப்பு, இந்த மைய கருத்தைக் கொண்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு பதிலாக, அணையை பலப்படுத்தும் வகையில், தற்போதுள்ள அணையில் 162 அடி உயரத்துக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம். நாட்டில் உள்ள அனைத்து அணைகள், புதிதாக அமையும் அணைகள் இவற்றின் கட்டுப்பாடுகளையும், பராமரிப்பையும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும்.அப்போதுதான், நதிகள் இணைப்பு போன்ற நடவடிக்கைகளின் போது, எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்கும் என்று தனது யோசனையை கடிதத்தில் அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே அணையின் நீர்மட்டத்தை குறைப்பது சம்பந்தமாக கேரள அரசு தொடுத்த வழக்கினை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி
செய்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழ்நாட்டுக்கு நீதி கிடைக்கும், தன்னலம் கருதாமல் பிறர் நலன் கருதி தரணியெல்லாம் செழிக்கச் செய்யும் தமிழர்களுக்காகப் பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையும் முழு உரிமையும் என்கிற நம்பிக்கை மத்தியிலும் மற்ற மாநிலங்களிலும் உள்ள நடு நிலையாளர்கள் மற்றும் தேசியவாதிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
-விஜய் ஆனந்த்.K




