Share

கர்ணனை மிஞ்சிய சுதா ரகுநாதன்!

தானத்தில் சிறந்தவன் என்று கிருஷ்ணனாலேயே அறியப்பட்டவன் கர்ணன். வில்வித்தையில் சிறந்தவன் அர்ஜுனன். இருந்தும் அவனுக்கு ஒரு பிரச்சினை. தாமும், தான தர்மங்கள் செய்கிறோம்…கிருஷ்ணன் எப்பொழுதும் தன் கூடவேதான் இருக்கின்றான். தன் கூடவே இருந்து கொண்டும் தான் செய்யும் தான தர்மங்களைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டும் தானத்தில் சிறந்தவன் கர்ணன் என்கிறானே! என்கிற பொறாமை. வில்வித்தையில் மட்டுமல்ல தான தர்மங்கள் செய்வதிலும் அர்ஜுனனே சிறந்தவன் என்று கிருஷ்ணன் அவன் வாயால் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறான்… இல்லை இல்லை பேராசைப்படுகிறான்.

கிருஷ்ணனிடம் சென்று முறையிடுகிறான். புன்முறுவல் பூத்த கிருஷ்ணனும் சரி ஒரு போட்டி வைத்து விடலாம் என்று முடிவு செய்து தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆன இரு மலைகளை உருவாக்குகிறான். ஒரு நல்ல நாளில் பொழுது புலரும் வேளையில் அர்ஜுனனை அழைத்து இன்று சூரியன் மறைவதற்குள் இந்த மலைகளைத் தானம் செய்து விடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான். அர்ஜுனன் மலையினை துண்டு துண்டுகளாக உடைத்து வரும் மக்களுக்கு வாரி வாரி வழங்குகின்றான். மக்களும் கூட்டம் கூட்டமாக “தானப்பிரபு கொடைவள்ளல் அர்ஜுனனுக்கு ஜே! “ என்று கோஷம் போட்டுக்கொண்டே வாங்கிச் செல்கிறார்கள்… அர்ஜுனனுக்கோ இறுமாப்பு தலைக்கேறுகிறது. இன்னும் வேகமாக கோடாலியால் மலையைத் தகர்க்கிறான், தானம் செய்கிறான். அப்பொழுதுதான் இன்னும் சில மணித்துளிகளில் சூரியன் மறைந்து விடப்போகிறது. ம்ம்ம்..இன்னும்..இன்னும்… நேரம் ஆக.. ஆக.. ஒருவருக்கு ஒரு கட்டி என்றில்லாமல் இரண்டு மூன்று…இப்படிஅள்ளி அள்ளிக் கொடுக்கிறான். சரி தங்கமலையையாவது வெட்டிக் கொடுத்திருக்கலாம். முதலில் வெள்ளி மலையை காலி செய்து விட்டு தங்கமலைக்கு வருவோம் என்கிற “அற்ப” புத்தியுடன் செயல் படுகிறான் அர்ஜுனன்.

“நிறுத்து… “கிருஷ்ணன் ஆணையிட நிமிர்ந்து சூரியனைத் தேடுகிறான் அர்ஜுனன். இப்பொழுது அது முற்றிலுமாக மறைந்து சில மணித்துளிகளாகிவிட்டது. நிமிர்ந்து பார்த்தால் மலையில் ஒரு மடுவளவு கூட அர்ஜுனன் தானம் செய்திருக்கவில்லை. வரிசைகட்டி நின்ற மக்களும் முணுமுணுத்துக் கொண்டே இடத்தைக் காலிசெய்கிறர்கள். தர்மப்பிரபு கோஷங்கள் மறைந்து, “ வந்துட்டான் தானம் செய்கிறேன்னு… காலையில் இருந்து கால் கடுக்க நின்றதுக்கு வயல்ல இறங்கி கொஞ்சம் களையாவது பிடுங்கியிருக்கலாம்…” என்று அங்கலாய்த்துக் கொண்டே கூட்டம் களைய களைய அர்ஜுனனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. இருந்தும் அகம்பாவம் விடவில்லை. உலகில் தலைசிறந்த வில்வித்தை வீரனான என்னாலேயே இந்த மலைகளில் இவ்வளவுதான் பெயர்த்து தானம் செய்ய முடிந்தது. கர்ணன் எம்மாத்திரம் என்று நினைத்துக் கொண்டான். கிருஷ்ணனும் எதுவுக் காட்டிக் கொள்ளவில்லை.

இன்னொரு நாள், அதே போல இரண்டு மலைகள் இப்பொழுது கர்ணன் அழைக்கப்படுகிறான். அவனுக்கும் அதே நிபந்தனை, சூரியன் மறைவதற்குள் இருமலைகளையும் தானம் செய்து விடவேண்டும். “அதற்கென்ன கிருஷ்ணா நீ நினைத்தாலே கொடுத்திருக்கலாம் என் மூலம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் பார்த்தாயா… நான் என்ன கொடுப்பினை செய்தேனோ…” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அந்த வழியாக இரண்டு பேர் வருவதைக் கவனிக்கிறான். “யாரங்கே இங்கே வாருங்கள் எனதருமை மக்களே…” என்று அன்போடு அழைக்க. இருவரும் வர அவர்களைப் பார்த்து கர்ணன், “இந்த மலையை நீங்களும்… இந்த மலையை நீங்களும் எடுத்துக் கொள்ளுங்கள்..” என்று ஒவ்வொருத்தரிடம் சொல்லிவிட்டு கிருஷணன் பக்கம் திரும்பி, “என்ன கிருஷணா என்னை அழைத்த வேலை முடிந்ததா நான் உத்தரவு வாங்கிக் கொள்ளவா..” என்று பணிவுடன் வணங்கி விட்டுச் சென்று விடுகிறான். அர்ஜூனன், ஈரேழு உலகத்திலும் வில்வித்தையில் அவனை அடித்துக் கொள்ள எவனும் கிடையாது. இப்பொழுது தொங்கிப் போன தலையுடன் கிருஷ்ணன் முன் நிற்கிறான்.

அப்புறம் என்ன நடந்தது என்று சொல்ல ஆரம்பித்தால் மகாபாரதக் கதையினை ஆண்டு  முழுவதும்   சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால், இப்பொழுது சமுதாய ஃபவுண்டேஷனின் 12 ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தின் சகாய் 2011 மாலைப்பொழுதுக்கு வருவோம். சமுதாய ஃபவுண்டேஷன் சார்பாக நடந்த எளிய, நெகிழ வைத்த சகாய் 2011 மாலைப் பொழுதில்  ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக் கழக மருத்துவ மனையின் குழந்தைகளுக்கான கேன்சர் பிரிவுக்கு 20 லட்சமும், பிரேம வாசம் என்கிற மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்கு 20 லட்சமும் ஆக 40 லட்சம் ரூபாயை முன்னாள் குடியரத்தலைவர் அப்துல்கலாமின் கைகளால் வழங்க வைத்து ஆனந்தப் பட்டார் சுதா ரகுநாதன்.

ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை சார்பாக டாக்டர் ஜூலியஸ் ஸ்காட்டும் பிரேம வாசம் சார்பாக மாற்றுத்திறனாளியும் MCA முடித்து விட்டு Bed பயின்று கொண்டிருக்கும் இந்திராவும் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் சமுதாயத்திற்குத் தன்னால் ஆன சேவைகளைச் செய்து வரும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளிக்கு சமுதாய ஃபவுண்டேஷனின் சாதனா விருதினை அப்துல் கலாம் வழங்கினார்.

கர்ணன் யாரோ இரண்டு வழிப்போக்கர்களைக் கூப்பிட்டு அவர்களுக்குத் தானமாக இந்த தங்கம் மற்றும் வெள்ளி மலைகளைத் தானம் செய்தால் யாருக்காவது பயனுண்டா என்றெல்லாம் சிந்திக்காமல் கணப்பொழுதில் தானம் செய்தான். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக சிறுவர்களுக்கான கேன்சரைக் குணப்படுத்தி இந்த சமுதாயத்தில் கேன்சர் இல்லாத சிறுவர்கள் என்கிற லட்சியத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் மருத்துவமனைக்கும், சமுகத்தால் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகளை அரவணைத்து அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் கொடுத்து அவர்களாலும் இந்த சமுதாயம் பயன்பெற முடியும் என்கிற நோக்கில் கடந்த 12 வருடங்களாக அரும்பெரும் தொண்டாட்டிற் கொண்டிருக்கும் பிரேமவாசம் அமைப்பிற்கும் இதுவரை தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதி மேலும் தொண்டுள்ளம் கொண்ட மற்றவர்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் என்று ஆகமொத்தம் 40 லட்சம் ரூபாயை ஆளுக்கு 20 லட்சம் ரூபாய்கள் என்று வழங்குகிறார் சுதா ரகுநாதன்.

கர்நாடக இசைக்கலைஞர் சுதா ரகுநாதன் நிச்சயம் கர்ணனை விட உயர்ந்தவர் தானே!

சுதா ரகுநாதனைப்போல இந்த சமுதாயத்திற்குத் தம் சக்திக்கும் மீறி சேவையாற்றிக் கொண்டிருப்பவர்கள் நம் தேசம் முழுவதும் நிறைந்து காணப்படுகிறார்கள். வெளியே தெரியாமல் அத்தகைய அரும்பெரும் சேவை ஆற்றிக் கொண்டிருக்கும் அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் இந்தச் செய்தியினை www.mysixer.com சமர்ப்பணம் செய்கிறது. சகாய் 2011 புகைப்படங்களை கீழ்க்கண்டத் தொடர்பில் கண்டு மகிழுங்கள் http://www.mysixer.com/?p=14981

-விஜய் ஆனந்த்.K

3 Comments on this Post

 1. azhaganaa velipaduthirukeenga..super vijay

  Reply
 2. santhikannan

  arumayana seithiya miga arumaya sonna nanbanukku nandrigal pala

  Reply
 3. சுதா ரகுநாதன் செஞ்சது நல்ல காரியம்தான்… ஆனால் கர்ணனை விட உயர்ந்தவர் என்று சொல்வதெல்லாம் ஏற்க கூடியதாக இல்லை. சுதாவுக்கு புகழ், பணம் எல்லாமே இருக்கிறது. அவர் டொனேஷன் கேட்டால் கொட்டி தருவார்கள். நீங்களோ, நானோ ரோட்டில் நின்று கொண்டு, கேன்சர் நோயாளிக்கு உதவி செய்யுங்கள்` என்று கேட்டால் பைசா தேறாது. அவரின் நல்ல உள்ளத்தை பாராட்டுகிறேன். அதே சமயம் கர்ணனுக்கு மேற்பட்டவர் என்பது ஒட்டவில்லை..

  Reply

Leave a Comment