தானே புயல் தானே கடப்பது வரை எச்சரிக்கை

தானே புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 125 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறினார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன், தானே புயல் நிலவரம் குறித்து நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’தானே என்று பெயரிடப்பட்ட புயலானது மிக தீவிர புயலாக மாறி சென்னைக்கு தென்கிழக்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து நாகப்பட்டினம் முதல் சென்னை வரையுள்ள பகுதிகளில் கடலூருக்கு அருகே கரையை கடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, கடலூர்-புதுச்சேரிக்கு இடையே கரையை கடப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

கடல் கொந்தளிப்பாக இருக்கும் காரணத்தினால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாளை (இன்று) முதல் பலத்த காற்று வீச தொடங்கும். மணிக்கு 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசுவதற்கான வாய்ப்பு உள்ளது.

தானே புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 125 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்பு உண்டு. கடலில் அலையின் எழுச்சி அதிகமாக இருக்கும். கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் 30-ந் தேதி காலை புயல் கரையை கடக்கும்போது, அலையின் எழுச்சி இயல்பான நிலையைவிட ஒரு மீட்டர் அதிகமாக இருக்கும்.

மழையை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு. ஒருசில இடங்களில் 25 சென்டி மீட்டருக்கு மேல் அதிகபட்சமான மழை பெய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இந்த மிக தீவிர புயல் காரணமாக குடிசைகள் சேதமடைவதற்கான வாய்ப்புகள் உண்டு.

மின் இணைப்புகள் மற்றும் தொலைதொடர்பு இணைப்புகளும் சேதமடைவதற்கான வாய்ப்புகள் உண்டு. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்வது நல்லது’’ என்று கூறியுள்ளார்.

திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வசிக்கும் நண்பர்கள் உறவினர்களிடம் இந்தச் செய்தியினைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

-விஜய் ஆனந்த்.K

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks