அரவான் படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது அழகன் படத்தில் வரும் ஒரு டயலாக்தான் ஞாபகம் வருகிறது. நாம் வேற எங்கேயாவது பிறந்திருக்கலாம்டா என்று சொல்லிக் கொண்டே வரும் ஒரு குழந்தை நட்சத்திரம் கடைசி காட்சியில் “டேய் நாம உண்மையிலேயே வேறு எங்கோதான் பிறந்திருக்கோம்டா..” என்று சொல்லுவான். சிலபடங்களைப் பார்த்துவிட்டுத் தமிழ்சினிமாவை வேறு தளத்திற்குக்கொண்டு சென்ற படம் என்று சொல்லிக் கொண்டு வந்திருக்கிறோம். அரவான் உண்மையாகவே தமிழ் சினிமாவை வேறு தளத்திற்குத் தான் கொண்டு போயிருக்கிறது.
காடுகளிலும் மலைகளிலும் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து கொண்டிருந்த நம் பாட்டன் முப்பாட்டன்களைக் கண்முன் கொண்டு வருகிறது சு வெங்கடேசனின் கதை. களவுக் கூட்டத்தில் இருந்து காவல் கூட்டத்திற்கு வாக்கப்பட்டுப் போனவளின் வாரிசு தன் தாய் வீடான களவுக் கூட்டத்தையும் கெளரவமான காவல் கூட்டமாக மாற்றுகிறது என்பது தான் அரவானின் ஒரு வரிக்கதை.
ஒரு இடத்திற்கு கொஞ்சம் மெதுவாகப் போகவேண்டுமென்றால் நாம் என்ன செய்வோம்? நடந்து செல்வோம். வேகமாகச் செல்லவேண்டுமானால் பைக்கிலோ, பஸ்ஸிலோ, டிரையினிலோ செல்வோம். நமது பாட்டன்களுக்கு வேகமாக ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டுமானால் ஒரே வழி, ஓடுவதுதான். அதுவும் எப்படி குதிகால் தரையில படாம பிடறியில் படும் அளவிற்கு வேகமாக ஓடவேண்டும். எதில் ஓட வேண்டும் என்பது இன்னும் சுவராஸ்யம்… கட்டாந்தரைகளிலும், கற்களிலும், பாறைகளிலும், மண்ணிலும், முள்ளிலும் ஓட வேண்டும். ஓடுகிறார்கள், அதற்கானத் திடகாத்திரமான உடம்புகளோடு. காவலோ, களவோ உறுதியான சிந்தனைகளோடும் வாழும் அவர்களுக்கு அது மிகவும் சாதாரணம். கொம்பூதி அணியும், காவல்காரனாக வரும் கரிகாலன் அணியும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். மலை உச்சியில் அவர்கள் ஓடிக்கொண்டிருக்க பிரமிப்பின் உச்சியில் நாம்.
18 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நமது யதார்த்ததத் தமிழுடன் ஒட்டிப்போய்விடுகிறது. கலப்படமில்லாத மலைத்தேனைப் போல அந்தத் தமிழும் ஆங்கிலக் கலப்பில்லாமல் சுத்தமாக, சந்தமாக இல்லா விட்டாலும் சத்தமாக அதாவது வலுவானதாக இருக்கிறது.
ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுள் மீது நமக்கிருக்கும் பக்தியில் நாம் ஒரு பைத்தியக்காரனைப் போல தோன்றினால் கடவுளுடன் நாம்
நேரடித்தொடர்பை ஏற்படுத்திக் கொண்டோம் என்று அர்த்தம் என்று சொல்லுவார். அதைப்போல கலை மீது ஒரு முத்தின பைத்தியம் பிடித்த ஒரு நடிகனாக பசுபதி. மெதுவாக சத்தமில்லாம நடந்து வேட்டையாடுவது எப்படி என்று பூனைக்கே கற்றுக் கொடுப்பார்கள் போலிருக்கிறது அந்த அளவிற்கு களவில் ஒரு லாவகம். அவரது நடை உடை பாவனைகளில் நம்மை வசப்படுத்தி விடுகிறார் மட்டுமல்லாமல், கூட இருப்பவர்களுக்கும் அந்த பைத்தியக்காரத்தனத்தைப் பாய்ச்சி விடுகிறார். குறிப்பாக ஆதிக்கு. ஆதி புகுந்து விளையாடியிருக்கிறார். அந்த உடற்கட்டு மற்றும் கதாபாத்திரத்தின் அடி ஆழத்திற்குச் சென்று ஆர்ப்பாட்டமான ஒரு பரிணாமத்தை வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு நிச்சயமாக ஒவ்வொரு ரசிகனையையும் சொக்க வைக்கும்.
தன்ஷிகா அந்த மலைக்கிராமத்துக்கே உரிய முகபாவனை, முடிவெடுப்பதில் தீரம் என்று அற்புதமான கதாபாத்திரத்தேர்வு. அவரது வசன உச்சரிப்பில்-குரலில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமே என்று தோன்றுகிறது. குறி சொல்லும் சிமிட்டியாக அர்ச்சனா கவி அற்புதம்.
உழைப்பு என்றைக்குமே வீண் போகாது. சிலருக்கு உடனே பலன் கிடைக்கும், சிலருக்கு நாளைக்கு வேறு சிலருக்கோ சில நாட்களில் கழித்து. ஆனால் கரிகாலனுக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளில் கழித்து ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. அதுவும் நம் கால மகேந்திரன் என்று அறியப்படும் மிகப்பெரிய இயக்குனர் வசந்தபாலனிடமிருந்து, காவல்காரனுக்கே உரிய மிடுக்கும் கம்பீரமும் அருமையாகக் கர்ஜித்து இருக்கிறார்.
சிங்கம்புலி ஒரு வரப்பிரசாதம், திருமுருகனும் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
அருணாக்கொடி யாருடையது என்று கண்டுபிடிப்பதற்காகத் தான் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட அத்தனை ஆண்களின் இடுப்பையும்
மனதில் கொண்டுவந்து சரியான இடுப்பை, ஆளைக் கண்டுபிடித்துக் கூறும் தேவதாசி குஞ்சரத்தம்மாளாக ஸ்வேதா மேனன். அந்தக் காட்சி “செம” கற்பனை.
சில இடங்களில் வசனங்கள் நம்மை வாய்பிளக்க வைக்கின்றன. உதாரணத்திற்கு “சாகாத மனுஷன் எவன்னு சொல்லு ..கட்டிக்கிறேன்..” என்று தனிஷ்கா பேசுமிடம். சில இடங்களில் வசனங்களில் பெரிய வறட்சியும், கதாபாத்திரத்தின் தன்மைகள் மாறுபடும் அளவிற்கும் இருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியதாக இருக்கிறது.
இந்தப் படத்தை நான் கமலாத்தியேட்டரில் பார்க்கும் போது இடைவேளையில் John Carter என்கிற ஒரு ஹாலிவுட் படத்தின் டிரையலுரும் காண்பிக்கப்பட்டது. அப்படி ஒரு பிரமாண்டமான படத்தின் டிரையலரைப் பார்த்து விட்டு திடீரென நாம் பார்த்துக்கொண்டிருக்கும் படங்களைப் பார்க்கும் போது ரசனையில் ஒரு ஜம்ப் இருக்கும். அரவான் பார்க்கும் போது அந்த ஜம்ப் எனக்கில்லை. ஏனெனில் அந்தப் பிரமாண்டத்தில் காட்சியமைப்பில் சற்றும் குறைவில்லாத படமாக அரவான் இருந்தது.
பாறைகளின் மீது கட்டியிருக்கும், கதவுகளில்லாத சொர்க்கங்கள் போன்று தோற்றமளிக்கும் மண்வீடுகளில் போய்ச் செட்டிலாகி விடலாமா என்று எண்ணத்தோன்றுமளவிற்கு விஜயமுருகனின் கைவண்ணம் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. காவலர்கள் குடியிருப்பில் வீடுகள் கதவுகளுடன், கள்வர்கள் குடியிருப்பிலோ வீடுகள் கதவுகள் இல்லாமல். முரண்பாடான சுவராஸ்யம்.
சில காட்சிகளில் இது நம்மூருதானா என்கிற அளவிற்கு மிகவும் அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்.
ஒருவரைப் புகழ வேண்டும் என்பதற்காக வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது. கடந்த காலங்களில் புகழப்படுபவரைப் பார்த்து புகழ்பவர் பேசுவார், “அடுத்தமுறையும் தலைவர்தான்” என்று. என்னடா நாம தான் இப்படிப் புகழலாம் என்று நினைத்தால் அவர் பேசிவிட்டாரே என்ன செய்வது என்ற சிந்தனையிலேயே கடகடவென ஒருவர் வருவார், வந்து, “அடுத்தமுறை மட்டுமல்ல அவரது 100வது வயதிலும் தலைவர்தான்” என்று டபார்னு ஒரு குண்டைத்தூக்கிப் போட்டுவிட்டு செல்வார். புகழப்படுபவருக்கு யதார்த்தம் தெரியும் ஆதாலால் ஒரு புன்முறுவல் பூத்துக்கொள்வார். எதற்கு இந்த சீன் ஞாபகம் வருகிறது என்றால் அரவான் படத்திற்கு இசையமைத்த கார்த்திக் தான் அடுத்த ஏ ஆர் ரஹ்மான் என்று ஒரு புண்ணியவான் பேசியதும் இதைப்போல் தானா என்று தோன்றுகிறது. மன்னிக்க வேண்டும், இந்தப்படத்தின் பலகீனங்களில் பின்னணி இசையும் ஒன்று. சில டூயட் பாடல்களுக்குக் கத்தரி போட்டு விட்டுத் தனியாக ஆல்பம் போல் வெளியிட்டிருக்கலாம். படத்தொகுப்பிலும் நேர்த்தியில்லை. நாம் ஏன், இன்னொருத்தருடைய இடத்தைப் பிடிக்க முயன்று, தோற்றும் கொண்டு இருக்க வேண்டும்??? அடுத்த புரூஸ் லீயாக வரவிருப்பமில்லை முதலாவது ஜாக்கிசானாக வரவேண்டுமென்பதே எனது லட்சியம் என்று சொன்ன ஜாக்கிசானின் வாக்கினை இன்றைய இளைஞர்கள் வேதவாக்காக எடுத்துக் கொள்ளவேண்டும்.
தான் சாகப்போவது தெரிந்தும் பரவாயில்லை இவன் மூலம் ஒரு வாரிசாவது பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கும் தன்ஷிகாவுக்கும்
ஆதிக்கும் இடையே நடைபெறும் ஊடல் அது ஒரு முக்கியமான காட்சி என்கிற அளவில் எவ்வளவோ சிரத்தை எடுத்து காட்சிப்படுத்தியிருக்கலாம். கொலைகாரனைக் கண்டுபிடிக்கும் ஆதியின் துப்பறியும் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
பலி ஆள் சின்னானுக்குப் பதிலாகத் தான் வீரணனைக் காவு வாங்கியாச்சே, திரும்பவும் சின்னானையும் பலி வாங்கத்துடிப்பது எதற்காக? அது அவர்களது ஊரின் பெரிய ஆம்பிளைகளின் முடிவுதான் என்கிற நிலையிலும் அதற்கான காரணம் வலுவானதாக இல்லை.
இறுதிக்காட்சிகளில் அரவானா, ஜீசஸ் கிறிஸ்டா என்று எண்ணத் தோன்றுகிறது. நீண்ட தாடியுடன் கூடிய ஆதியின் முகமும் அதற்குக் காரணமாகிவிடுகிறது.
அஞ்சலி, மற்றும் தேவதாசி, பாளையக்காரியாக வருபவர்களின் உடைகள் இன்றைய காலகட்ட உடைகளுடன் ஒத்துப்போவது ஒரு சறுக்கலே. அதுதான் ஆலும் வேலும் பல்லுக்குறுதின்னு கண்டுபிடிச்சவய்ங்களே நாமதானே? அப்புறம் ஏன் எல்லாத்துக்குமே பற்கள் அவ்வளவு கறை பிடித்துப் போயிருக்கிறது?
படம் முழுவதும் பெரும்பாலான காட்சிகளில், ஒவ்வொரு பிரேமிலும் 200 – 300 பேர் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அந்த மலைப்பிரதேசங்களில், வெயிலில் அத்துனை நடிகர்களுடன் அதற்குச் சமமான எண்ணிக்கையில் தொழில் நுட்பக் கலைஞர்களையும் அழைத்துச் சென்று கொண்டு போய் 100 நாட்களுக்கும் மேலாகத் தங்கியிருந்து முழுப்படத்தினையும் முடித்து வந்திருக்கும் இயக்குனர் வசந்தபாலனையும் தயாரிப்பாளர் சிவாயையும் அவர்களுக்கு ஒத்துழைத்த அத்தனை பேரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
85 வருடத்தமிழ் சினிமா வரலாற்றில் மிகச் சவாலான கதைக்களம் மற்றும் காட்சியமைப்புகளுடன் வந்திருக்கும் படங்களுள் அரவானும் ஒன்று என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
கரடுமுரடான பாறைகள் சூழ்ந்த மலைமுகடுகளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் வசந்தபாலனின் உளி இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ஆஸ்கார் விருது பெறும் முதல் தமிழ்ப்படம் என்கிற பெருமையை அரவான் தட்டிச்சென்றிருப்பான்.
சிந்தனையும் படைப்பும் இளமையும் புதுமையுமாக இருக்கலாம் ஆனால் தொழி நுட்பங்களுக்கு அனுபவத்தோடுதான் கைகோர்க்க வேண்டும் என்கிற பாடத்தையும் அரவான் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறான்.
விஜய் ஆனந்த்.K





அருமையான பார்வை..
படம் அருமை.. எல்லா படத்துக்கும் திரைக்கதை முக்கியம்.. இந்த படத்துக்கு +பாய்ண்ட். திரைக்கதை.. இறுதில அரவான் “ இயேசுவுக்கு ஒப்பிட்ட மாதிரி இருந்துச்சு..அருமை..இயேசுவும் ஊருக்காக தான் உயிர் துறந்தார்.. பலியானார்.. அதே போல தான் அரவான். இறுதில அது தான் மனசுல பட்டுது. இப்படி ஒரு படம் தமிழ் சினிமாக்களின் வரலாறுல முதல் இடம் பிடிக்கும்.படத்துக்கு பாடல்களுமே தேவையானது தான்..தேவையான மெட்டுக்கள்.ஆனால் ஏத்த மெட்டுக்கள்னு சொல்ல முடியல..நிலா நிலா பாடல்ல ஒளிப்பதிவு பாடல தூக்கீடுச்சு.. அவ்ளோ அருமை.. ஒவ்வொரு காட்சிகள்லயும் ஒரு வெறி தெரிஞ்சுது.. அருமை..
உங்க விமர்சனம் நல்லா இருக்கு சார்.. நான் எப்பவுமே படம் பார்க்குறதுக்கு முன்பே கமண்ட் பண்ணிடுவேன்..முதல் முறையா படத்த பாத்துட்டு கருத்து சொல்றேன்..எல்லா காட்சியையுமே நீங்க சரியா பாத்திருக்கீங்க.. சரியான விமர்சனம் … இறுதிக்காட்சிகளில் அரவானா, ஜீசஸ் கிறிஸ்டா என்று எண்ணத் தோன்றுகிறது. நீண்ட தாடியுடன் கூடிய ஆதியின் முகமும் அதற்குக் காரணமாகிவிடுகிறது.” நீங்க குறிப்பிட்டிருந்த இந்த வரிக்காகவே நான் படத்த பாத்தேன்.. உண்மை…
அரவான் படம் பார்த்தேன் மற்றும் உங்கள் விமர்சனம் படித்தேன். இரண்டும் மிகவும் அருமை. வசந்தபாலனின் முழு உழைப்பு படித்தில் தெரிந்தது. ஒளிபதிவாளார் சித்தார்த் கைவண்ணம் பிரமிக்கும்வண்ணம் உள்ளது. ஹாலிவுட் இணையாக நாமும் எடுக்க முடியும் என்பதை நிருபித்து உள்ளனர் . அதுவும் இரவு நேரத்தில் கேமரா மலைகளில் , காடுகளில் , கற்களில் மற்றும் மேடு பள்ளங்களில் நம்மையும் சேர்த்து இழுத்து கொண்டு ஓடுகிறது. கதை களம் இரு வேறுபட்ட பிரிவினருக்கிடையே நடைபெறும் சம்பவங்கள் என்றாலும் அதனை படமாகிய விதம் அருமை அருமை. ஆனால் இது இந்தகால இளைஞர் மற்றும் இளங்கிகளை கவருமா என்பது தெரியவில்லை. 18 ஆம் நூற்றாம் ஆண்டில் நடைபெறும் கதையில் ஆங்கிலேயர்களின் பிடியில் நாம் இருந்த காலம் என்பதற்கான அறிகுறிகள் விடுபட்டு போயுள்ளன. நடிப்பில் ஆதி புதிய பரிமாணம் எடுத்துள்ளார். அந்த தாசியாக நடிப்பவர் சிறிது நேரமே வந்தாலும் அந்த நாக்கை சுழற்றியபடி பேசுவது அருமை. நிலா நிலா பாடல் வெகு நாட்களுக்குப்பிறகு ஒரு அருமையான பாட்டை கேட்ட திருப்தி கிடைத்தது. ..பலி ஆளாக ஒருவன் கொடுக்கப்பட்ட பிறகும் ஏன் திரும்பவும் ஆதி பலி கொடுக்கபடுகிறார் என்பதற்கான கேள்விக்கு பதில் இல்லை. களவு செய்ய போகிரிகவர்களின் கொள்கையை “எங்கவூரு” பாட்டில் அழகாக கூறியுள்ளார். அதுவும் அதில் வரும் “இரத்த்தம் பார்க்க மாட்டோம் கன்னி பெண்ணை தொட மாட்டோம் ” என்ற வரிகள் அருமை. ஒன்றிண்டு குறைகள் இருந்தாலும் இந்த காலத்தில் வந்த படங்களில் “அரவான்” தனி இடம் பெறுகிறான்.
நேர்மையான பார்வை
நேர்த்தியான விமர்சனம்…
Vimarshanam padam parkka thoondukirathu…
அரவான்! உண்மையிலே அருமையான படம்..!