வழக்கு எண் 18/9 – விமர்சனம்

சாதீ, அரசியல் செல்வாக்கு, அளவிற்கு அதிகமாகத் தவறான வழியில் வரும் பணம், சாதீக்காரனாக இருந்தாலும் பணம் வாங்கிக் கொண்டு (சாதிப்பற்று கொண்டவர்கள் கவனிக்க) கரிசனம் காட்டும் காவல்துறை அதிகாரி இந்த நால்வரும் சேர்ந்தால் சாமன்யனின் வாழ்க்கை எப்படிக் கேள்விக்குறியாகிறது என்பது தான் வழக்கு எண் 18/9.

படத்தின் ஆரம்பக்காட்சியில் நடக்கும் ஒரு விபத்து அதனைத் தொடர்ந்து விசாரணை என்று படத்தின் பெயருக்கு ஏற்றார்ப்போல வழக்கு எண் 18/9 ஐ விசாரித்து, உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப வைத்து விட்டு அப்பாவியைத் தூக்கி உள்ளே போடுவதும், அதன் பிறகு சேற்றில் முளைத்த செந்தாமரை என்று சொல்வோமே அதைப்போல சேரியில் உதித்த ஜான்சி ராணி லட்சுமி பாய் அல்லது தில்லையாடி வள்ளியம்மையாக – ஜோதி, பத்து லட்ச ரூபாய்க்கு ஆசைப்பட்டுத் தன் பதவியைத் தவறான முறையில் பயன்படுத்திய காவல்துறை அதிகாரி குமாரவேலைப் பழிவாங்குவதும் மிகவும் யதார்த்தமாக உணர்வுகளைத் தட்டி எழுப்பும் விதத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேலால் கையாளப்பட்டிருக்கிறது.

Dude என்று அழைக்கும் நண்பனை விட ஐயா ஏன்யா சோகமா இருக்கீங்கசப்பிட்டியாயா..? என்று அழைக்கும் நண்பன் சக்தி வாய்ந்தவனாகத் தெரிகிறான். அதுவும் கலைஞனாக வரவேண்டும் என்கிற கனவுகளைச் சுமந்து கொண்டு சென்னைக்கு வரும் சின்னசாமிக்கு சென்னையின் பிளாட்பாரம் தான் முதலில் ஆதரவுக் கரம் நீட்டுகிறது. அவனும் அவனுக்கு ஆதரவுக் கரம் நீட்டியவர்களுக்கு நன்றி விசுவாத்துடன் இருக்கிறான். அப்படி இருப்பதால் தான் சவக்குழியில் தள்ளப்பட்ட வழக்கு எண் 18/9 மீண்டும் தோண்டி எடுக்கப்படுகிறது. அதன் பிறகு தான் ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம் ஒரு நிரபராதி தண்டிக்கப் படக்கூடாது என்கிற கொஞ்சூண்டு நம்பிக்கையும் காப்பாற்றப்படுகிறது.

வேலுவின் குடும்பத்தினை காட்டும் காட்சிகள் இந்த சமுதாயத்தின் மீதும் அரசுகள் மீதும் படம் பார்ப்பவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. கந்து வட்டிக்குக் கடன் வாங்கி அந்த விவசாயி சேற்றுல இறங்க வேண்டும் என்று எந்த சட்டம் சொல்கிறது… பேசாம அந்த விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்று விட்டால் இங்கே இருக்கிற எல்லோருமே பிற நாடுகளிடம் உணவுக்காக பிச்சை எடுக்க ஆரம்பித்து விட வேண்டியதுதான். நெஞ்சைப் பிழியுக் காட்சி.

கந்தலாடைக்காரனுக்கும் காதல் வரும், வேலு- ஜோதிக்கு நடுவில் வரும் அந்தக் காதலும் ஒரு காவியம்தான்.

ஜோதி படம் முழுவதும் வந்தாலும் அதிகம் பேசாத ஒரு நேர்மையான கதாபாத்திரம் படம் முடிந்து வெளியே வரும் போது அவரைப் பற்றியே நினைக்க வைத்து விடுகிறார்.

தினேஷ்- ஆர்த்தி ஒருவரையொருவர் மாற்றி மாற்றி வாரிக்கொள்ளும் அக்மார்க் நகரக் காதலை அச்சுபிசகாமல் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அந்தக் காதல் முளைவிட்டுக் கிளைவிடும் காட்சிகள் அபாராம்… காதலுக்கு தினேஷ் ஊற்றும் ரசாயன உரம் அந்தக் காதலை முளையிலேயே கருகச் செய்து விடுகிறது. காமத்தில் முடியாத காதல் பாதியிலேயே முறிந்துவிடக் கிடைக்கும் தோல்வி அந்த ரசாயனத்தை அவள் முகத்திலும் ஊற்றும் அளவிற்கு வன்மத்தைத் தோற்றுவிக்கிறது.

இவர் நேர்மையான போலீசா, இல்லை லஞ்சம், சாதீ, அரசியல் அப்புறம் பெண்ணாசை போன்ற கயிற்றால் கட்டுண்ட போலீசா என்று ரசிகர்கள் சந்தேகப்படும் அளவிற்கு இன்ஸ்பெக்டர் குமாரவேலின் விறைப்பான ரியாக்‌ஷன் அவரது காக்கிச் சட்டை போலவே.

ஐயா பாலாஜி சக்தி வேல் அவர்களே…ஸ்டில் கேமராவை வைத்துதான் படம் பிடித்திருக்கிறீர்கள், தெரிகிறது. அதற்காக மினிஸ்டரின் வீட்டுக்குள் உண்மையாகவே அதனை மறைத்து வைத்து அவரது அன்றாடப் “பொதுமக்கள் சேவைகளை” படம் பிடித்திருக்கிறீர்களா என்ன..? அமைச்சரின் மூஞ்சியை பிலர் (Blur) ஆக்கின விதத்தில் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

ஆரம்பக்காட்சிகளில் அந்த பாலியல்தொழிலாளிக்கும் வேலுவுக்கும் இடையிலான உறவுகள்  வழக்காமான ஒன்றாகத் தான் இருப்பது போலத் தெரிகிறது, இருந்தாலும் இது ஒரு கண் திருஷ்டியே.

விக் வைத்துக் கொண்டு தன் பேத்தி வயதுடையவர்களைக் காதலித்துக் கொண்டிருக்கும் சக்திவாய்ந்த எல்லா ஸ்டார்களையும் கலாய்த்த விதம் அருமை.

ஸ்ரீ – வேலு, ஊர்மிளா மஹந்தா – ஜோதி, மிதுன் முரளி -தினேஷ், மனிஷா யாதவ் –ஆர்த்தி, முத்துராமன் – இன்ஸ்பெக்டர், சின்னசாமி – சின்னசாமி இவர்கள் எல்லோரும் புதுமுகங்கள் தான் என்று சொன்னால் யாரும் எளிதில் நம்புவார்களா என்று சொல்ல முடியாது.

தியேட்டர் வாசல்களில் ரசிகர்களைக் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்யத்தூண்டிய நடிகர்களுக்கு மத்தியில் முதல் முறையாக அவர்களின் மனதிலேயே கட் அவுட் வைக்கத் தூண்டும் நடிகர்களாக வழக்கு எண் 18/9 இல் நடித்த அனைத்து நடிகர்களும் இருக்கிறார்கள்.

விஜய் மில்டன் குறிப்பாகப் புதிதாக வரும் தயாரிப்பாளர்க்கு தன்னுடைய ஒளிப்பதிவினால் மிகவும் தன்னம்பிக்கை அளிக்கிறார்.

நட்சத்திரக் கவர்ச்சியையும், பிரமாண்டங்களையும் தாண்டி கதைதான் பிரமாண்டம் என்று புரிய வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சில இயக்குனர்கள் மத்தியில் நிஜமாகவேப் பிரமாண்டமாகத் தெரிகிறார் இயக்குனர் பாலாஜி சக்தி வேல்.

கமர்ஷியல் சூத்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர் லிங்குசாமிக்குள்ளும் கிளாசிக் படங்களைத்தான் உண்மையாகவே வெற்றிப் படங்களாக்கும் ரசிகன் ஒளிந்து கொண்டு இருக்க வேண்டும். அதனால் தான் இப்படி ஒரு படத்தை அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸால் தயாரிக்க முடிந்திருக்கிறது.

படம் பார்த்து விட்டு வேகவேகமாக வீட்டிற்குப் போய் உங்கள் வீட்டுக் குழந்தைகளின் கைகளில் உள்ள மொபைல் போனைப் பிடுங்கி எறிய வேண்டும் என்று நினைக்கத் தோன்றும். அதற்குப் பதிலாக அவர்கள் மீது நம்பிக்கை வைத்து ரீசார்ஜ் செய்வதற்குக் கொடுக்கும் காசுடன் வழக்கு எண் 18/9 படம் பார்க்க டிக்கெட் எடுப்பதற்கும் சேர்த்துக் கொடுத்து விடுங்கள், அதன் பிறகு எல்லாம் சுபமே.

திறமையாக வாதாடினால்தான் வழக்கில் ஜெயிக்க முடியும், தீர்மானம் எடுத்துக் கொண்டுப் போராடினால்தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். அதுதான் வழக்கு எண் 18/9 படம் சொல்கிற பாடம்.

-விஜய் ஆனந்த்.K

1 Comment

  1. shiva says:

    நடு ரோட்டில்,வெற்று உடம்பில் சவுக்கை வைத்து அடித்து அடித்து..ரத்தம் வழிய தட்டை ஏந்தி காசுவாங்வது போல இருகிறது,இந்த படத்தை பார்கும் போது,எவ்வுளவு நாள்தான் இப்படி அடித்தட்டு மக்களின் வாழ்க்கையின் நடைமுறை எதார்தத்தை சொல்கிறேன் என்ற பெயரில்….,என்னை இந்த படத்திற்கு அழைத்து சென்றவர்களுக்காக வேறு வழி இல்லாமல்..முடியும் வரை பொறுமை காக்கவேண்டிதாயிற்று..திரு.லிங்குசாமி அவர்கள் தயாரிப்பு திரு.பாலாஜி சக்திவேல் இயக்கம் என்பது மட்டுமே இந்த படத்தை பற்றி கொஞம் பேசவைத்தது…இந்த படம் பெற்றோர்களோடு சேர்ந்து பார்க்க கூடிய படம் அல்ல..mms பற்றி கொஞ்சம் தெரிந்த பெற்றோர்களுக்கு கூட இந்த படம் கூடுதல் பயத்தை தான் தருமே தவிற….வேரொன்றும் இல்லை..irritation :(

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks