கலகலப்பு – விமர்சனம்

ஒரே கோப்பையில் ( Cup) பாதியளவு குளிர்ந்த காஃபியும் (Cold Coffee, Vimal – Anjali) பாதியளவு சூடான காஃபியும் (Hot Coffee, Shiva-Ooviya) குடிக்க ஆசையா? கும்பகோணம் மசாலா கஃபேக்குக் கிளம்புங்கள். அட அதற்காகக் கும்பகோணத்திற்கு டிக்கெட் வாங்க வேண்டாம், கலகலப்பு படத்திற்கு டிக்கெட் வாங்கினாலே அங்கே கொண்டு போய் இறக்கி விட்டுவிடுவார்கள். 2.30 மணி நேரம் நன்றாகச் சிரித்து மகிழ்ந்துவிட்டு வரலாம்.

குடும்பத்தின் நான்காவது தலைமுறையான விமல் – சிவா சகோதர்களுக்கு தங்களது குடும்பத்திற்குச் சொந்தமானதும் கும்பகோணத்தின் பாரம்பரிய உணவு விடுதியும் ,லால்பகதூர் சாஸ்திரி காபி குடித்த பெருமைபெற்ற மசாலா கஃபே யினை கட்டிக் காக்க வேண்டிய கடமை.

நகரின் முக்கியமான இடத்தில் அமைந்துள்ள அந்த இடத்தின் மீது இன்னொரு ஜவுளி வியாபாரிக்குக் கண். இன்ஸ்பெக்டரை இடைத்தரகராக்கி அதனை வளைத்துப் போடபார்க்கிறார்.

சுப்புவின் பலகோடி மதிப்புள்ள வைரக்கற்கள் பல கைகள் மாறி மசாலா கஃபே யைத்தேடி வருகிறது.

நடுவில் விமல் – அஞ்சலி – சந்தானம் என்று ஒரு முக்கோணக் காதல், சிவா – ஓவியா என்று ஒரு நேரடிக்காதல்.

மேற்படி நான்கு விஷயங்களுடன் மசாலாவைக் கொஞ்சம் தூக்கலாகவே கலந்து சுந்தர் சி தனது 25ஆவது படைப்பாக “ஒரே கப்புல ஹாட்&கோல்ட் காஃபி” யாகக் கொடுத்திருக்கும் படம் தான் கலகலப்பு.

சிரிக்க வைக்கவேண்டும் என்று முடிவு செய்து எழுதப்பட்ட திரைக்கதை. நடந்து முடிந்த 8வது சென்னை உலகத் திரைப்பட விழாவுக்குப் பிறகு எழுதப் பட்ட “முற்றிலும்” புதிய முதல் பாதி, அப்புறம் வழக்கமான இரண்டாவது பாதி என்று சுந்தர் சி – வசனகர்த்தா பத்ரி ஆகியோர் அசால்ட்டாகக் கதை பண்ணியிருக்கிறார்கள். தமிழன் மறந்து விட்ட அவனது உணவு முறைகள்+ மூலிகை உணவு வகைகளை இன்றைய இளம் தலைமுறையினருக்குச் சினிமா வாயிலாக ஊட்டியிருப்பதில், சுந்தர் சி க்கு ஒரு பெரிய சபாஷ்.

விஜய் எபினேசரின் இசையில் பாடல்கள் எல்லாமே சுவராஸ்யத்தைத் தருகின்றன. குறிப்பாக உன்னைப்பற்றி உன்னிடமே…., இவளுங்க இம்சை தாங்க முடியல இவளுங்க இல்லாமலும் இருக்க முடியல…. இ.. இ ..இ.. இ.. இ.. பாடலில் அஞ்சலி – ஓவியா அனுபவித்து ஆடியிருக்கிறார்கள். அந்த நாயைக் ( உண்மையாகவே நாயைத்தாங்க) காண்பிக்கும் போதெல்லாம் ஆட்டுக்கார அலமேலுவை ஒத்த பின்னணி இசை வாசித்திருப்பதில் ஒரு வசீகரம் தெரிகிறது.

படத்தில் சபாஷ் சரியான போட்டி என்று எடுத்துக் கொண்டால் சந்தேகமே இல்லாமல் அது சிவாவுக்கும் சந்தானத்திற்கும் தான்.
படத்தில் ஒரு கதாநாயகனாக இருந்தாலும் காமெடியனாக கலக்குகிறார் சிவா. காமெடியனாக இருந்தாலும் கதாநாயகன் ரேஞ்சுக்குக் கல்லா கட்டுகிறார் சந்தானம்.

கலகலப்பில் நடித்திருக்கும் எல்லோருமே காமெடியன்கள்தானே என்று ரசிகர்கள சந்தேகப் படக்கூடும். அந்த அளவிற்கு சுப்பு, ஜான்விஜய், மனோபாலா, சண்முகசுந்தரம், இளவரசு, நாளைய இயக்குனர் புகழ் கருணாகரன் என்று எல்லோருமே காமெடி (தான்) செய்திருக்கிறார்கள்.

25 வருடமாக அல்லது 50 வருடமாக ஒரு ஹோட்டலின் சுவையும் தரமும் மாறாமல் இருந்தால் அந்த ஹோட்டலுக்குப் பெருமை. 25 படங்களும் கிட்டத்தட்ட ஒரே ஃபார்முலாவில் கிட்டத்தட்ட சில காட்சிகள் கூட ஒத்துப் போகும் அளவிற்குப் படம் கொடுப்பது..?

நடுவில் திடீரென்று காணாமல் போய்விடும் வி எஸ் ராகவன் மாதிரியே கலகலப்பில் இந்தக் கேள்வியும் காணாமல் போய்விடுகிறது.

-Vijay Anandh.K

1 Comment

  1. நல்ல விமர்சனம்…

    உங்கள் இணையதளத்தின் செய்திகள் ஏராளமான வாசகர்களை சென்றடைய http://www.hotlinksin.com இணையதளத்தில் தொடர்ந்து உங்கள் இணையதளத்தின் செய்திகளை இணைத்திடுங்கள்

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks