அதி நவீன ஒலிச்சேர்ப்பில் அமீரின் ஆதிபகவன்

ஏ.ஆர்.ரஹ்மானின் ஏ.எம் ஒலிக்கூடத்தில் அதி நவீன ஒலி சேர்ப்புமுறை அறிமுகம்.

7.1 சுற்றொலி (Surround Sound) அமீரின் ஆதிபகவன் படத்தில் முதன் முதலாக

டால்பி மற்றும் ஏனைய சுற்றொலி சாதனங்களை வழங்குபவர்கள் 7.1 என்கிற அதி நவீன சுற்றொலிக் கோட்பாட்டுடன் களமிறங்கியிருக்கிறார்கள். அதனை தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக ஏ.ஆர்.ரஹ்மானின் ஏ.எம் ஒலிக்கூடத்தில் நிறுவுகிறார்கள். 7.1 சுற்றொலி தொழில் நுட்பத்தில் பதிவு செய்யப்படும் ஒலியானது இடது, நடு, வலது, இடது புறச்சுற்று, வலது புறச்சுற்று, இடது பின்புறச் சுற்று, வலது பின்புறச் சுற்று, மற்றும் ஒரு குறைந்த அலைவரிசை ( Left, Centre, Right, Left Side Surround, Right Side Surround, Left Rear Surround, Right Rear Surround and a LFE ( Low frequency enhancer channel -L,C,R,Lss,Rss,Lrs,Rrs,LFE) என்று 8 திசைகளில் ஒலிக்கும்.

5.1 சுற்றொலி தொழில் நுட்பத்தை விட இரண்டு திசைகளில் கூடுதலாகச் சுற்றொலியினைக் கேட்கலாம்.

இந்த தொழில் நுட்பம் மூலம் திரைப்படங்களை மேலும் லயப்பட்டு ரசிக்கலாம்.

டாய் ஸ்டோரி 3 என்கிற ஹாலிவுட் படத்தினைத் தொடர்ந்து இந்தியாவிலும் தம் மாரூ தம், ராக்ஸ்டார் போன்ற படங்களில் 7.1 சுற்றொலித் தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

தமிழில் இயக்குனர் அமீர் இயக்கும் ஆதிபகவன் படம் 7.1 சுற்றொலித் தொழில் நுட்பத்துடன் ஒலிச்சேர்ப்பு செய்யப்படும் முதல் படம் என்கிற பெருமையைப் பெறுகிறது.

7.1 சுற்றொலி 48 KHz சாதாரண தரத்திலும் , 96 KHz உயர்தரத்திலும் பதிவு செய்யப்படுகிறது.

இப்பொழுது காணப்படும் திரைப்படத் தொழில் நுடபத்திலேயே 7.1 சுற்றொலியில் ஒலிச்சேர்க்கைச் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் 70% திரையரங்குகள் நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருப்பதும் 7.1 சுற்றொலித் தொழில் நுட்பத்தினை உடனடியாகக் கையாளலாம் என்கிற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றன.

7.1 சுற்றொலித் தொழில் நுட்பத்துடன் முப்பரிமாண ஒலிச்சேர்ப்பு வசதிகளும் ஏ.எம் ஒலிக்கூடத்தில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட அனுபவம் பெற்ற ஒலிப்பதிவாளர் எஸ்.சிவகுமார் தலைமையில் சிறந்த தொழில் நுட்பக்கலைஞர்களுடன் கிளாமோர்கன் பல்கலைக்கழகத்தில் இசையில் முதுகலை பட்டம் பெற்ற 8 ஆண்டுகள் இந்தியாவிலும் லண்டனில் எஸ்.விஜய் ரத்னம் போன்றோரும் இணைந்து தமிழ் சினிமாக்களில் ஒலிப்புரட்சி செய்யக் காத்திருக்கிறார்கள்.

நமது படைப்பாளிகள் தங்களது படைப்புகளில் இத்தகைய நவீன ஒலிச்சேர்ப்புகளையும் சேர்த்து ரசிகர்களுக்கு புதுவிருந்து படைக்கலாம்.

-Vijay Anandh.K

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks