தமிழனை கெளரவிக்கும் மலையாள சினிமா

ஃபேஸ்புக் இன்று இன்னுமொரு விக்கிபீடியாவைப் போல தகவல் களஞ்சியமாக மாறிக்கொண்டு வருகிறது. எனது நண்பர்கள் வட்டத்தில் இல்லாவிட்டாலும் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்கிற முறையில் நாகர்கோயிலைச் சேர்ந்த ஜெயன் மைக்கேலின் ஃபேஸ்புக் குறிப்பில் படித்து ரசித்த இந்த செய்தியினை நமது வாசகர்களுக்காகப் பிரசுரிக்கிறேன். நன்றி Jeyan Micheal (ஜெயன் எம். ஆர்)

- விஜய் ஆனந்த்.K

Usthad Hotel – Malayalam movie

உஸ்தாத் ஹோட்டல் ஒரு மலையாளப்படம் மட்டுமல்ல ஒரு ஒப்பற்ற  தமிழனைப் பற்றிய நினைவூட்டலும் கூட.

ஒரு கடற்கரை ஓரம் உஸ்டாக் என்ற பெயரில் ஹோட்டல் வைத்திருக்கும் முஸ்லீம் பெரியவரின் மகனுக்கு, நான்கு பெண் குழந்தைகளுக்கு பிறகு ஐந்தாவதாக பிறக்கும் ஆண் குழந்தையாக அறிமுகமாகிறான் ஹீரோ.

அம்மாவை இழந்த மகனையும் மகள்களையும் அழைத்துக் கொண்டு வெளிநாடு செல்கிறார். நல்ல கோடீஸ்வரன் ஆகிறார்.

அம்மா இல்லை என்றாலும் தனது உடன் பிறந்த அக்காக்களின் பாசத்தால் எந்த குறையும் இல்லாமல் வளர்கிறான். அக்காக்காளின் பாசத்தால் என்னமோ அவன் சிறு வயதிலிருந்தே சமயலறையில்தான் அதிகமாக பொழுதை கழிப்பதாக அமைகிறது. அதுவே அவனுக்கு போக போக சமையல் கலைமேல் ஆர்வத்தை ஏற்படுத்தி விடுகிறது.

அம்மா இல்லாமலும், எந்த வருத்தம் இல்லாமல் வளரும் அவன் தன் அக்கா நால்வரும் திருமணமாகி சென்றதும் முதல் முறையாக தனிமை படுத்தப்படுகிறான். அப்பொழுது அவனிடம் மேல் படிப்பை தொடர சொல்லி அப்பா கேட்க அப்பாவிடம் எம்.பி.ஏ படிக்க செல்வதாக பொய் சொல்லிவிட்டு சமையல் படிப்பை படிக்க சுவிச்சர்லாந்திற்கு செல்கிறான்.

படிப்பை முடித்துவிட்டு தனது அப்பாவுடன் கேராளாவிற்கு வருகிறான். அங்குதான் அவன் பொய் சொல்லி கேட்டரிங் படித்தது தெரிய வருகிறது. கோபத்தில் அப்பாவின் ஆசையான 5ஸ்டார் ஹோட்டல் கட்டும் வேலையை அவனிடம் திணிக்க முயற்சிக்கிறார். ஆனால் அவன் தனது சமையலில் வேலை கிடைத்திருப்பாகவும், மீண்டும் இந்தியாவை விட்டு செல்ல விரும்புவதாகவும் கூற இருவருக்கும் சண்டை அதிகாமாகிறது. அப்பாவின் வார்த்தைகளால் உடைந்து போன அவன் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

தனது பாஸ்போட்டை அப்பாவிடமிருந்து வாங்கும் வரை உஸ்டாத் ஹோட்டல் முதலாளியான தனது தாத்தாவிடம் தஞ்சம் புகுகிறான்.

அவன் பயணம் அங்கிருந்து ஆரம்பிக்கிறது. “நாம சாப்பாடு போட்டா, வயிறு மட்டும் நிறஞ்சா போதாது…மனசு நெறையணும்…” இப்படி ஆரம்பித்து சமையல் என்றால் என்ன என்பது முதற்கொண்டு அவனுக்கு சமையல் கலையை ஒரு அனுபவமாக சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கிறார். தன் தொழிலாளிகளுக்கு என்னென்ன தேவையோ அதெல்லாம் முடிந்தவரை நிறைவேற்றும் தன் தாத்தா, மாதம் மாதம் மதுரைக்கு அவர் வருமானத்தின் ஒரு தொகை பணத்தை அனுப்பிவைக்கிறார். அது யாருக்கு செல்கிறது என்ற யாரிடமும் சொல்ல மறுக்கிறார்.

இதற்கிடையில் உஸ்டாத் ஹோட்டல் அருகில் இருக்கும் ஒரு ஸ்டார் ஹோட்டலில் வேலை, சாப்பாட்டில் புது முயற்சி, காதல், உஸ்டாக் ஹோட்டலை காப்பாற்ற முயற்சி என்று நகருகிறது திரைப்படம்.

தனது தாத்தவுடன் சேர்ந்து ஒரு நல்ல நிலமைக்கு ஹோட்டலை கொண்டு வரும் நேரம் அவனுக்கு மீண்டும் வெளிநாட்டில் வேலை கிடைக்க அதை தன் தாத்தாவிடம் சொல்கிறான். தன் பாஸ்போட்டை எப்படியாவது தன் அப்பாவிடமிருந்து வாங்கி தரும்படி கேட்கிறான். தன் பேரம் தன்னை விட்டு செல்கிறான் என்றதும் அந்த பெரியவருக்கு மாரடைப்பு வருகிறது.

மருத்துவமனையில் படுத்திருக்கும் தாத்தா “நீ வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன் மதுரைக்கு சென்று இந்த மாதம் கொடுக்க வேண்டிய பணமும் அத்துடன் இந்த குறிப்பையும் கொடுத்து விட்டு வா…” என்று அவர் தன் பேரனை மதுரைக்கு அனுப்புகிறார்.

நாம் எல்லாம் மறந்து போன ஒருவரை நினைவுபடுத்துகிறது மீதி படம், ஒரு தமிழனாக இதை நினைவு படுத்த வேண்டியது என் கடமையாக தோன்றியது.

உங்களுக்கு நினைவிருக்கும் மதுரையை சேர்ந்த கிருஷ்ணன். Mysixer.com has already published an article on Krishnan. Kindly  go to this link http://www.mysixer.com/?p=56

மீண்டும் கதைக்கு வருவோம். மதுரைக்கு வரும் காதாநாயகன், அவரை பார்க்கிறான். அவர் என்றால் மேல சொன்ன கிருஷ்ணன் என்றே வைத்துக்கொள்ளுங்கள்.

தனது தாத்தாவின் கடிதத்தை அவரிடம் கொடுக்கிறான். அதை வாங்கி அவர் பார்க்கிறார். அதில்” நான் என் பேரனுக்கு எப்படி சமைக்க வேண்டும் என்று கற்று கொடுத்துவிட்டேன். ஏன் சமைக்க வேண்டும் என்று நீதான் கற்றுதர வேண்டும்” என்று எழுதி இருக்கிறது. அதிலிருந்து மீதி அரைமணி நேர படத்திலும் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நிற்கிறது.

ஒரு குழுவை வைத்துக்கொண்டு சமைக்கும் கிருஷ்ணன், காதாநாயகனை அழைத்துக் கொண்டு பிச்சைக்காரர்கள், உணவிற்கு வசதியில்லாதவர்கள் இருக்கும் ஒவ்வொரு பகுதியாக செல்கிறார். உணவு பரிமாறுகிறார். இதை ஆச்சரியமாகப் பார்க்கும் அவனிடம் சொல்கிறார் கிருஷ்ணன், “நானும் தாஜ் ஹோட்டலில் ச்செப்-ஆக பணிபுரிந்து வந்தவன்தான். என்னை மாற்றியவர் அவர்…” என்று ஒருவரை சுட்டிக்காட்டிவிட்டு மீண்டும் தொடர்கிறார். “ஒரு நாள் பசி…பசினால சாப்பிட உணவு இல்லாமல் மனித கழிவே அவர் சாப்பிட்டு கொண்டு இருப்பதைப் பார்த்தேன். நொந்து போனேன். அன்று முடிவு செய்த்தேன், இனி இதுதான் என் வேலை என்று….”

அப்படியே அன்று முழுவதும் முடிகிறது. அடுத்த நாள் “நீ சமை” என்று அவனிடம் சொல்கிறார். அவன் செய்த உஸ்டாக் ஹோட்டல் பிரியாணியுடன் ஒரு மன நோய் குன்றிய குழந்தைகள் வாழும் விடுதி ஒன்றிற்கு அவனை அழைத்து செல்கிறார். அங்கு உணவு பரிமாறுகிறார். குழந்தைகள் கண்கள் கலங்க நன்றி சொல்கிறார்கள். அவன் கண்களும் நிறைகிறது. மனது கனத்துடன் மீண்டும் தன் உஸ்டாத் ஹோட்டலுக்கு வருகிறான். அங்கு ஹோட்டல் கதவு பூட்ட பட்டு கிடக்கிறது. காரணம் அறிந்து மீண்டும் ஹோட்டலை திறக்கிறான். அவனுடன் தன் தந்தையும் சேர்ந்து கொள்கிறார்.

பொறுப்பை தன் பேரனிடம் ஒப்படைத்து விட்ட நம்பிக்கையின் அந்த வயதான் தாத்தா தூரத்தில் புனித பயணம் சென்று கொண்டிருக்கிறார்,திரைப்படம் முடிகிறது.

ஒரு பாடலில் பணக்காரன் ஆகும் கதைகள் மாறி இப்பொழுது ஒரு பாடலில் முதலமைச்சர் ஆகும் கதைக்கு நம் தமிழ் சினிமா சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாம் மறந்து போன ஒரு வாழும் தமிழ் தியாகியை நினைவு படுத்திய அந்த மலையாள பட இயக்குனருக்கும், கதாநாயகனாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன் டல்கியூர் சல்மான் Dulquer Salmaanக்கும் (Mammootty’s son), தாத்தாவாக நடித்த மூத்த கலைஞன் திலகனுக்கும் நெஞ்ச்சை நிமிர்த்தி ஒரு பெரிய சல்யூட்.

- ஜெயன் எம். ஆர்

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks