நான் ஈ – விமர்சனம்

a Vijay Anandh.K’s review

அற்புதமான நடிகர் சுதீப், அழகுதேவதை சமந்தா இவர்களுடன் ஆச்சிரியப்படுத்தும் ஈ இந்த மூன்று கதாபாத்திரங்களை வைத்து அட்டகாசமான ஒரு பொழுதுபோக்குத் திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ் எஸ் ராஜமெளலி.

நானி, இது கதாநாயகன் பெயர் சமந்தா மீது அவர் வைத்திருக்கும் காதல் அழகோ அழகு. முயற்சி வெற்றி பெற்று காதல் கனியும் நேரம் சுதீப் அவரைக் கொன்று விடுகிறார். உடலுக்குத்தானே அழிவு, ஆத்மாக்களுக்கு அழிவில்லையே! நானி –யின் ஆத்மா அவரிடமிருந்து பிரிந்த அடுத்த வினாடியில் முட்டைக்குள் இருக்கும் ஈயின் உடலுக்குள் புகுந்து அடுத்த அவதாரத்திற்குத் தயாராகி விடுகிறது.

தொடர்ந்து சமந்தாவிற்கும் நானி தான் இப்பொழுது நான் ஈ யாக வந்திருக்கிறேன் என்று புரிய வைத்து அவருடைய ஒத்துழைப்புடன் சுதீப்பை கூண்டோடு வேரறுக்கிறது.

தமிழ்சினிமா ஏன் இந்திய சினிமா ரசிகர்களுக்கு நான் ஈ புத்தம் புதிய அனுபவம். அட்டகாசமான கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் என்று பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள்.

(நான்) ஈ சூப்பர்மேன் என்றால் சுதீப் சூப்பர் வில்லனாக வந்து மிரட்டுகிறார். பெரிய தொழிலதிபராக அவரது உடல்மொழி அதே நேரம் ஈயிடம் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தை அடடா…அட்டகாசமான கதாபாத்திரத் தேர்வு.

ஒரு ஈயால் என்ன செய்து விட முடியும் என்பதை கொஞ்சம் சினிமாத்தனங்களோடு காட்டியிருக்கிறார். மென்மையான ஈயின் கண்கள் மற்றும் கால்கள் அவை எளிதில் சேதமடைந்து விடாமல் இருக்க உறுதியான அதேசமயம் மிகவும் சிறிய கவசங்களைச் செய்து மாட்டியிருக்கிறார். அந்த மைக்ரோ கவசங்களை செய்ய ஈ வேறு யாரிடமும் சென்று விளக்கிக் கொண்டிருக்க முடியாது. அதற்காகவே கதாநாயகி சமந்தா ஒரு மைக்ரோ ஆர்டிஸ்ட் என்று அவரது பாத்திரத்தை வடிவமைத்து இருக்கிறார் இயக்குனர்.

சுதீப்,ஈயைக் குறிபார்த்துச் சுடவேண்டுமே அதற்காகவே அவரை துப்பாக்கி சுடுதலில் அதுவும் பறக்கும் பொருட்களைக் குறிபார்த்துச் சுடுவதில் கிலலாடி யென்று ஆரம்பக்காட்சிகளிலேயே காட்டும் விதம் அருமை.

ரசிகர்களுக்கு பொழுது போக்கு விருந்து படைக்கும் அதே நேரம் நாளைய திரைப்பட இயக்குனர்களுக்கு ஏன் சில இன்றைய இயக்குனர்களுக்கும் திரைக்கதை எழுதுவது எப்படி..? அதனை அப்படியே திரைக்குக் கொண்டு வருவது எப்படி என்று பாடம் நடத்தியிருக்கிறார்.

ஓபன் பண்ணா ஹீரோவோட காலைக் காட்டுகிறோம் என்று ஆரம்பிக்கும் “பாரம்பரியக் “ கதைவிவாதங்களுக்கு பிரியாவிடை கொடுக்க இதுவே சரியான தருணம் என்று நெற்றியில் அறைந்து சொல்லியிருக்கிறார். தவிர பொழுது போக்கு திரைப்படங்கள் என்று வரும் போது மனித உணர்வுகள் என்பதையும் தாண்டி விஞ்ஞானம் எந்த அளவிற்கு உதவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம்.

நானோ கார் – என்றால் சிறிய கார் என்று தான் பரவலாக அறியப்பட்டிருக்கும். அதற்குள் நானோ தொழில் நுட்பம் ஒளிந்திருக்கிற்து என்பது கொஞ்ம் படித்தவர்களுக்குத் தெரியும். நானோ தொழில் நுடபத்தை எப்படி திரைக்கதைக்குள் நுழைக்கலாம்..? கதாநாயகிகளுக்கு நானோ அதாவது மிகச்சிறிய உடை என்பது மட்டும் காலம்காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு சிறிய கதாபாத்திரம் ஈ, அது உபயோகப்படுத்தும் சிறிய ஆயுதங்கள் , இரண்டு மூன்று கதாபாத்திரங்களே என்கிற சிறிய நடிகர்கள் கூட்டணி, அளவான வசனங்கள் என்று சிறிய வார்த்தைகள் என்று எல்லாவற்றிலும் நானோ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இயக்குனர் எஸ் எஸ் ராஜமெளலியால் எடுக்கப்பட்டிருந்திருந்தாலும்  அன்லிமிட்டெட் – வானளவு பொழுதுபோக்கும் அற்புதமான திரைப்படம் பிவிபி சினிமாவின்  நான் ஈ.

டேபிளில் நம் முன் ஈ உட்கார்ந்தால் விரட்டி விடத்தான் தோன்றும் அதனை உற்றுக் கவனிக்கத் தோன்றாது. கவனித்தால் ஈ தன் முன்னங்கால்களை நாம் கைகளை வேகமாகத் தட்டிக் கொள்வதைப் போல தட்டிக் கொள்ளும். எஸ் எஸ் ராஜமெளலிக்கு அந்தக் கைகள் பிடித்துப் போய் ஈயுடன் கைகுலுக்கத் தோன்றியிருக்கிறது. இருவரும் இணைந்து ரசிகர்களையும் தங்கள் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

படம் போகிற வேகத்தில் ஒவ்வொரு பிறவியாக ஆத்மா பயணிக்கும் சரி அறிவும் பயணிக்குமா என்கிற கேள்வி எழ வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது.

...இலையில் சோறைப் போட்டு ஈயைத் தூர ஓட்டு என்பது போய்
இலையில் சோறைப் போட்டு ஈக்கும் கொஞ்சம் ஊட்டு என்று புதிய பாடல் உருவாகலாம்.

ஈ – Entertainment matters

-விஜய் ஆனந்த்.K

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks