ரம்யா! சமீபத்தில் வெளிவந்த ‘தடையற தாக்க’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கதாநாயகிகளுக்கு அக்கா, தோழி, கதாநாயகர்களுக்கு அண்ணி, அக்கா வேடங்களுக்கு மிகவும் பொருத்தமானவர் ரம்யா.அவருடன் ஒரு நேர்காணல்.
இளமையும் , அழகும் கொட்டிக்கிடக்கிறதே! அடுத்தது கதாநாயகிதானே?
சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஏகப்பட்ட போட்டிகள் இருக்கிறது. அப்படியே ஒரு படத்தில் அறிமுகமானாலும் அந்த வாய்ப்பை தொடர்ந்து தக்க வைத்துகொள்வதற்கு சாமர்த்தியத்தைவிட, அதிர்ஷ்டமும் அவசியம் வேண்டும். என்னை பொறுத்தவரை எனக்கு கேரக்டர் ரோல் கிடைத்தால் அதிலேயே என் திறமையைக் காட்டுவேன்.
சினிமாவிற்கு வந்தது எப்படி?
நான் எம்.ஏ. பப்ளிகேஷன்ஸ் படித்துள்ளேன். மாடலிங் துறையில் எனக்கு ஆர்வம் அதிகம். அங்கியிருந்து அப்படியே சின்னத்திரைக்குள் நுழைந்தேன். ‘இது ஒரு காதல் கதை’ நான் அறிமுகமான முதல் சீரியல். யார் இந்த பொண்ணு? என்று கேட்குமளவிற்கு என் நடிப்பு முத்திரைக்கு பெரிய களமாக அமைந்தது அந்த சீரியல். அதை தொடர்ந்து கரு. பழனியப்பன் சார் இயக்கி நடித்த ‘மந்திரப்புன்னகை’ படத்தில் கதாநாயகனின் சின்ன வயது அம்மாவாக நடித்தேன். எல்லோராலும் பாராட்டப்பட்ட அந்த கேரக்டர் மூலம் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. கெளரவமான துணைக்கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம் ஆகையால் சில வாய்ப்புகளைத் தவிர்க்க வேண்டியதாகிவிட்டது.
தடையறத் தாக்கவில் உங்களது அனுபவம்..?
‘தடையற தாக்க’ படம் பார்த்தவர்கள் அத்தனை பேரும் என்னை அடையாளம் கண்டு கொண்டு பாராட்டுகிறார்கள். அந்தப் படத்தில்
வில்லனை ஒரு ஆட்டுதொட்டியில் சந்திப்பது போன்று ஒரு காட்சி வரும். அந்த காட்சியை ஒரிஜினல் ‘ஆட்டுதொட்டி’ பகுதியில் 3 நாட்கள் படமாக்கினார்கள். அப்படியொரு இடத்தை நான் பார்த்ததே கிடையாது. ஆனாலும் மிகவும் சிரமப்பட்டு நடித்தேன்.
அருண் விஜய்க்கும் இந்தப் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. எனக்கும் அப்படி இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.
தற்போதைய படங்கள்..?
தற்போது ‘கண்டுபிடி கண்டுபிடி’ எனும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் சீமான் சார் ஜோடியாக நடித்துள்ளேன். ஒரு திருமண மண்டபத்திற்குள் நடக்கும் கதை. இதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியள்ளார் இதன் இயக்குனர். ‘கண்டுபிடி கண்டுபிடி’ விரைவில் ரிலீசாக உள்ளது. பாலுமகேந்திரா சார் இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்காத ஒரு புதுப்படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறேன். தமிழ் சினிமாவின் கேமரா கவிஞரும், மிகப்பெரிய இயக்குனருமான அவர் படத்தில் நடிப்பதை மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன்.
எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை..?
எனக்கு யாராவது ‘வில்லி’ வேடம் கொடுத்தால் அதில் கண்டிப்பாக கலக்குவேன். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்.
வில்லத்தனமும் வேண்டும் கதாநாயகியின் அழகும் வேண்டும் என்று நினைக்கும் படைப்பாளிகள் ரம்யாவை அணுகலாம்.
-விஜய் ஆனந்த்.K




