‘வழக்கமான பல்லவியை’ப் புரட்டிப்போட்ட ‘ஆரோகணம்’!
ஆரோகணத்தின் ‘ஆன்ட்டி க்ளைமாக்ஸ்’!
‘‘தமிழ் சினிமாக்கள், உலகம் முழுவதிலும் அலைகளை ஏற்படுத்தி வருகின்றன’’ & ‘ஆரோகணம்’ படத்தைப் பார்த்ததும், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடமிருந்து வந்த முதல் கருத்து இதுதான். படத்தைப் பார்த்த மற்ற முன்னணி இயக்குநர்கள் மற்றும் வெற்றிப்படங்களைத் தரும் இன்றைய இளம் இயக்குநர்கள் அனைவரின் கருத்துக்களும் இயக்குனர் சிகரத்தின் கருத்தை ஒட்டியே இருந்திருக்கின்றன.
திருவனந்தபுரத்தில் இப் படத்தைத் திரையிட்டபோதும்,மலையாளப் படவுலகின் குறிப்பிடத்தகுந்த பிரபலங்கள், ‘தமிழ் சினிமாக்களின் புத்தம்புதுமையும் புதுமையான உத்திகளும், எப்போதுமே முத்திரை பதிக்கத் தவறுவதில்லை‘ என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்கள்.
படத்தின் பிரத்யேகக் காட்சியைப் பார்த்த பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்துகொண்டிருக்கும் வேளையில், ‘ஆரோகண’த்தைப் பார்வையிட்ட தணிக்கைத் துறை அதிகாரிகளும் வரிவிலக்குக் குழுவினரும் ‘சமூகத்துக்கு இது போன்ற திரைப்படங்கள்தான் இப்போது தேவை’ என்ற தங்களின் உண்மையான உணர்வைப் பதிவு செய்திருக்கின்றனர்.
இதன் பிறகு ஆரோகணத்தின் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நடந்த திக் திக் திக்…அனுபங்களை அவரே சொல்கிறார்.
“அமைதியாகவும் மனநிறைவோடும் நான், வரிவிலக்குச் சான்றிதழை எதிர்நோக்கிக் காத்திருந்தேன்.
இது நடந்து 3 வாரங்கள் ஆகியும் அந்தத் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வராமல் போகவே, என்னைக் கவலை அரிக்க ஆரம்பித்தது. அந்த அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் பெறவேண்டுமானால், அவர்களைக் ‘கவனித்தால்’தான் வேலை நடக்கும் என்பது போன்ற வதந்திகளும் எச்சரிக்கைகளும் என் கவலையை இன்னும் அதிகரிக்கச் செய்தன.
ஏற்கெனவே பார்த்துப் பார்த்து சிக்கனமாய் நான் போட்டிருந்த பட்ஜெட்டில், காரணமே இல்லாமல் ஒரு பைசா செலவழிப்பதைக் கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியாத நிலை..!
என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்த நான், எனது வழியிலேயே சென்று விஷயங்களைக்கையாள்வது என்று முடிவெடுத்தேன்.
லஞ்ச ஒழிப்புத் துறையில் பணிபுரியும் என் நண்பர்கள் சிலருடன் தொடர்புகொண்டபோது, அந்த லஞ்ச லாவண்ய அதிகாரிகளை நான் எப்படியெல்லாம் தந்திரமாகக்கையாளவேண்டும் என்ற அறிவுரைகளை அள்ளி வழங்கினார்கள்.
ஆனால் ஒருவர் மாற்றி ஒருவரைக் குறைசொல்லிக் கொண்டிருக்காமல், நானே களத்தில் இறங்கிப் பார்த்துவிடத் தீர்மானித்தேன். எனவே, ஒரு நாள் காலையில் கிளம்பி, எழிலகத்தில் இருக்கும் வணிகவரித் துறை அலுவலகத்துக்குச் சென்றேன்.(‘இந்தியன்’ படத்தின் ஏதோ ஒரு காட்சியில் நடிப்பது போன்ற உணர்வு எனக்கு!).ஆனால், அங்கே நடந்ததே வேறு! மிகவும் ஆச்சர்யப்படத்தக்க வகையில் எனக்கு அன்பான வரவேற்புகிடைத்ததுடன், வரிவிலக்கு சான்றிதழுக்காக வந்த ‘ஆரோகணம்’ கோப்பு, அந்த வணிகவரித் துறை அலுவலகத்தில் அரை மணி நேரத்துக்கு மேல் தங்கவில்லை என்றும், உடனேயே கையெழுத்தாகி, அடுத்த நடவடிக்கைக்காக தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்டு விட்டது என்றும் தகவல் சொல்லப்பட்டது.
‘அப்பாடா.. இனிமேல் கவலைப்பட வேண்டாம்!’‘ & என்ற நிம்மதிப் பெருமூச்சு என்னிடம்.ஆனால் அந்த நிம்மதி வெகு நேரம் நீடிக்கவில்லை. ‘செகரட்டரியேட்லதான் கண்டிப்பா வாங்குவாங்க..’.‘ஒரு சூட்கேஸைக் கொண்டு போய்க் காட்டும் வரையில் உங்க ஃபைல் அங்கேயிருந்து மாதக்கணக்கில் நகரவே நகராது’, ‘அங்கே உள்ளே என்ன நடக்குதுன்னு யாருக்குமே தெரியாது’.. இப்படியான ஏராளனமான பயமுறுத்தல்கள் மீண்டும் வர ஆரம்பித்தன.
‘இதை விடக் கூடாது.. என்னதான் ஆகுதுன்னு பார்த்துடணும்’ என்ற உறுதியோடு, நான் தலைமைச் செயலகத்துக்குப் படையெடுத்தேன். அங்கிருந்த பணியாள் ஒருவர், எனக்கு இணைச்செயலரின் அறையைக் காண்பித்தார். அவரைப் பார்க்கும்போதே நல்ல மனிதராகத் தெரிந்தது. நான் வந்த விஷயத்தைச் சொன்னதும், சிறிது குழப்பமாகப் பார்த்தார் இணைச்செயலர். நான் இன்னும் விளக்கமாக, ‘‘இங்கே இன்னின்ன படத்துக்கு இவ்வளவு தொகை கொடுக்கப்படவேண்டும்’’ என்று நான் கேள்விப்பட்ட கணக்கு விவரத்தைக் கூறியதும்,
அவர் ‘சட்’டெனத் தூக்கிவாரிப் போட்டவராக நிமிர்ந்தார்.
அந்தக் குற்றச்சாட்டுகளை அவசரமாக மறுத்த அவர்,என்னை செயலரின் அறைக்கு அழைத்துச் சென்றார். செயலரின் உதவியாளர், மிகவும் சிநேகிதமான தோற்றம் கொண்ட நடு வயதுப் பெண்மணி. எனக்கு வாழ்த்துச் சொன்ன அவர், என்னைப் பற்றிய விவரங்களை செயலரிடம் தருவதற்காக ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தருமாறு கோரினார். பசியோடும், களைப்போடும், விரக்தியோடும் இருந்த நான், முற்றிலும் கலங்கிய நிலையில், ‘‘லக்ஷ்மி ராமகிருஷ்ணன், நடிகை, திரைப்பட இயக்குநர் மற்றும் இல்லத்தரசி’’ என்று ஒரு சீட்டில்அவசரமாகக் கிறுக்கி அவரிடம் கொடுத்து செயலரிடம் தரச் சொன்னேன். அடுத்த 2&வது நிமிடத்தில்அழைப்பு வந்தது. செயலரின் அறைக்குள் நுழைந்தேன்.. அங்கே நாற்காலியில் கண்ணியமான தோற்றத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார் அவர். பண்புள்ள, மரியாதையான அவருடைய தோற்றத்தைப் பார்த்ததுமே எனக்கு பயமின்றி அவரிடம் எல்லாம் சொல்லலாம் என்று தோன்றியது. அவரிடம் சகஜமாக என்னால் பேச முடிந்ததால், நடந்த எல்லாவற்றையுமே விளக்கமாகச் சொன்னேன்.
நான் சொல்லி முடித்த உடனே, முகத்தில் எந்த விதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல், தனது துறைக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் திட்டவட்டமாக மறுத்தார் அவர். என்னுடைய ஃபைல் அங்கே வந்ததிலிருந்து, அதற்கு அடுத்தகட்டமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இப்போதைய அதன் நிலைமை.. என்று அனைத்து விவரங்களையும் தயாராக வைத்திருந்தார். அந்த ஃபைல் தற்போது அமைச்சரிடம் இருப்பதாகவும், அதைப்பற்றி அமைச்சரிடம் தான் நினைவு படுத்துவதாகவும் உறுதிபடக் கூறினார். மேலும், ‘ஆரோகணம்’ திரைப்படம், ‘யு’ சர்டிஃபிகேட் மற்றும் தமிழ் தலைப்பு போன்ற வரிவிலக்கு பெறுவதற்கான எல்லாவிதமான தகுதிகளையும் பெற்றிருப்பதால், வரிவிலக்குக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் உறுதியளித்தார்.
அடுத்து அவர் பேசும்போது, தங்களுடைய துறை லஞ்சம் அற்றது என்றும், அங்கே பணிபுரியும்ஒவ்வொருவரும் சுத்தமான கரங்களுடன் பணிபுரிவதாகவும் கூறினார். அவர் பேசுவதையே கேட்ட நான், சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்துவிட்டேன்.. அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதை
எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஓர் அரசு அதிகாரி எவ்வளவு ஆணித்தரமான நம்பிக்கையோடு தன் துறையைப் பற்றிப் பேசுகிறார்! நான் வாயடைத்துப்போனேன்.
நான் கேள்விப்பட்ட வதந்திகள் எல்லாம் அந்தச் சில நிமிஷங்களில் ஒன்றுமில்லாமல் போயின. உடனே நான் நினைத்ததை அவரிடம் சொன்னேன்.. ‘நல்லவேளை.. எனக்கு உண்மையைப் புரியவைத்தீர்கள்.. உங்களைச் சந்தித்தது, என் கண்ணைத் திறந்துவிட்டது போல் இருக்கிறது’’ என்று நன்றி சொல்லிவிட்டு, அவருடைய நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்ள விரும்பாமல் கிளம்பிவிட்டேன்.
ஓர் அரசு அலுவலகத்திலிருந்து, ஓர் அரசு அதிகாரியுடனான இனிமையான சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்தபோது, மிகவும் பயங்கரமாகச் சித்திரிக்கப்படுகின்ற சில விஷயங்கள், அருகில் சென்றால் உண்மையிலேயே அப்படி இல்லை என்ற விடியல் வெளிச்சம் எனக்குள்ஏற்பட்டது!
‘இது இப்படித்தான்..!’ என்று வழிவழியாக நமக்குள் உருவாக்கி வைத்திருக்கும் சில பிம்பங்களை விட்டு வெளியே வரவேண்டிய நேரம் இது.. உண்மையைக் கண்டறிய நாமே தேடிச் செல்வோமானால்.. யார் கண்டது..? அங்கே நாம் காண்பது முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு பிம்பமாகவும் இருக்கலாம்!
பின்குறிப்பு: எனது அடுத்த திரைப்பட முயற்சிக்கு, இதையே அடிநாதமாக வைத்துக்கொள்ளலாமா எனப்பரிசீலித்துக் கொண்டிருக்கிறேன்”
என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்
தர்மனின் பார்வைக்கு அனைவரும் நல்லவர்களாத் தெரிந்தனர் என்றும் துரியோதனின் பார்வைக்கு அதே மக்கள் கெட்டவர்களாகத் தெரிந்தனர் என்றும் புராண காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டிருக்கிறோம். மேலும் சான்றிதழ் வாங்குவது முதல் வரிவிலக்குப் பெறுவது வரை நாம் இடைத்தரகர்களைச் சார்ந்திருந்தால் அரசு அதிகாரிகளின் பெயரைச் சொல்லி அந்த இடைத்தரகர்கள் சம்பாதிக்கக் கூடும்.
இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் தான் சந்தித்த அனுபவங்களை அப்படியே பதிவு செய்ததன் மூலம் நேர்மறைச் சிந்தனைக்கு வித்திடுகிறார். அந்தச் சிந்தனை தான் இன்றைய சமுதாயத்திற்குத் தேவை, அவரது ஆரோகணம் படம் இன்றைய சமுதாயத்திற்குத் தேவை என்று அதனை பார்த்த இயக்குனர்களும், அதிகாரிகளும் சொன்னதைப் போல.
- விஜய் ஆனந்த்.K
Enjoy Audio Launch news and gallery of Arokanam at http://www.mysixer.com/index.php?s=Arokanam




