பையா, வேட்டை மற்றும் வழக்கு எண் 18/9 போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த திருப்பதி சகோதரர்கள் – லிங்குசாமியின் அடுத்த படமாகவும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாகவும் வளர்ந்து வருகிறது கும்கி. வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றிபெற்றதும் பல விருதுகளை வாங்கிக் குவித்த படமான மைனா படத்தை இயக்கிய பிரபு சாலமன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
மற்றொரு சிறப்பம்சமாக, நடிகர் திலகத்தின் பேரனும் – நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு இந்தப் படத்தில் களமிறக்கப்படுகிறார்.
மைனா வுக்குப் பிறகு இசையமைப்பாளர் டி இமான் கும்கி படத்திற்காக பிரபு சாலமனுடன் கைகோர்த்திருப்பது படத்தின் எதிர்பார்ப்பினை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கடினமாக உழைத்து , காடு மலை என்று படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கும் நிலையில் கும்கி படத்தின் பாடல்கள் வெளியிடப்பட இருக்கின்றன.
வரும் 26 ஆம் தேதி உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக்கொள்கிறார். நடிப்புச் சக்ரவர்த்தி சிவாஜியின் மூன்றாவது தலைமுறை நடிகரான விக்ரம் பிரபுவின் அறிமுகப் படமாக கும்கி விளங்குவதால் நிகழ்ச்சியில் முன்னணித் திரையுலக ஜாம்பவான்கள் திரளாகக் கலந்து கொள்கிறார்கள்.




