தண்ணீர்ப் போராளி பிரபாகரன்

-விஜய் ஆனந்த்.K

சுதந்திர இந்தியாவிலும் வா உ சி , பகத் சிங் மற்றும் ஜான்சி ராணி போன்று எத்தனையோ போராளிகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுடைய உயர்ந்த குறிக்கோளில் உறுதியாக இருந்து பல வருடங்களாகக் கனவு கண்டு அந்தக் கனவினை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் அன்றாடம் பத்திரிக்கைகளில் அவர்களைப் பற்றிப் படித்துக் கொண்டும் கேள்விப் பட்டுக் கொண்டும் தான் இருக்கிறோம்.

தன் 6 வயதில் அம்மாவின் ஒரு இடுப்பில் காலிக்குடமும் மறு இடுப்பில் தானுமாகக் குடி நீருக்காகத் தோட்டம் தோட்டமாக பயணித்தும் கிணறு மற்றும் போர்வெல்களைத் (ஆழ்துளைக் கிணறு) தேடிப்போய் வெறும் காற்றை மட்டுமே வாங்கி வந்து கொண்டிருந்த பிரபாகரனும் தனக்குள் ஒரு கனவினை விதைத்துக் கொண்டார்.

அது என்ன கனவு என்று அவரே சொல்கிறார், “என் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய விஷயத்தை சாதிச்ச உணர்வு இன்றைக்கு எனக்கு ஏற்ப்பட்டிருக்கு. அது எதனாலன்னா எங்க வீட்டுக்கு சொந்தமா எங்க நிலத்துலயே போர் (ஆழ்த்துளை கிணறு) அமைச்சு தண்ணீர் எடுத்துவிட்டிருக்கேன். அதான்., இது மற்றவர்களுக்கு சாதாரண விஷயமா இருக்கலாம் ஆனால் எனக்கோ என் குடும்பத்துக்கோ இது சாதாரண விஷயம் கிடையாது” என்று சொல்லிவிட்டு தனது சிறிய வயதுக்குச் செல்கிறார் பிரபாகரன்.

“காரணம் என்னன்னா ஒடுக்கப்பட்ட சமுகத்தில் பிறந்தோம் என்ற காரணத்திற்க்காகவே நாங்கள் குடிக்கின்ற தண்ணீருக்கு கூட கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு மேல் உரிமையிலந்துதான் வாழ்ந்திருக்கிறோம்… தண்ணீருக்காக எங்க அம்மா ஒவ்வோரு பண்ணையார் வீட்டுக்கும் குடத்தை எடுத்துக் கொண்டு அழைந்ததும் காடுகளில் வீணாப்போகும் தண்ணீரைப் பிடிப்பதற்கே அவர்களிடம் கேஞ்சவேண்டும் என்கிற நிலையும் ஒரு சமயத்தில் மாறியது. எங்கள் தொகுதி எம்.எல்.ஏ, 4 வீடுகள் மட்டுமே இருந்த போதிலும் எங்களுக்காக போர் போட்டுக் கொடுத்தார். அதுவும் அவருடைய வெற்றிக்கு எங்கப்பா உழைத்தாருங்குற காரணத்துக்காகத்தான்… அதன் பிறகு வருகிற அனைத்து தேர்தல்களிலும் அவர் எவ்வளவு அயோக்கியத்தனம் பண்ணினாலும் அவருக்கேத்தான் ஓட்டு போடும், எங்க குடும்பம்.

அந்த போரிலும் தண்ணீர் எடுக்கும் பாக்கியம் நீண்ட நாட்களுக்கு எங்களுக்கு கொடுத்து வைக்கல.. சில நாட்களிலே அந்த ஆழ்த்துளை கிணறுக்கு அருகில் இருக்கிற காட்டுக்காரன் அந்த போர் என்னோட நிலத்துலத்தான் இருக்கு., அதனால அது எனக்குத்தான் சொந்தமுன்னு கேஸ் போட்டுட்டான். அது மட்டும் இல்லாம அந்த போருக்கு அவன் காட்டு வழியா போன பாதையும் அடைச்சுட்டான்… பிறகு என்ன செய்ய “பழைய குருடி கதவதொறடிங்குற..” கணக்கா பழையபடிக்கு குடத்த தூக்கிக்கிட்டு காடு காடா அழையிற நிலைமைதான்…

ஆனால் இதுல ஆச்சிரியமான விஷயம் என்னன்னா.. அப்போ, எனக்கு 6 வயசுத்தான் இருக்கும் அப்பவே எப்படியும் நாம ஒரு போர் போட்டுடனுமுன்னு எங்க அம்மாக்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பேன்…. நான் விளையாடற விளையாட்டே போர் வண்டி விளையாட்டாத்தான் இருக்கும்… பல நாள் என்னோட கனவுல எங்க வீட்டுக்கிட்ட பெரிய பைப்புல தண்ணீ ஊத்துற மாதிரியே வரும். கனவுல வர்ற தண்ணி தாகம் தீர்க்குமா..? என்ன..? ஆனா அந்தக கனவ நனவாக்கணுங்கிற வெறி மட்டும் எனக்கு இருந்திக்கிட்டு இருந்துச்சு… கிட்டத்தட்ட 18 வருஷம் ஓடிப்போச்சு…அந்தக் கனவு மட்டும் எனக்குள்ள இருந்துகிட்டே இருந்துச்சு…

இவ்வளவு காலம் கடந்த பிறகு இன்றைக்கு நானும் ஒரளவுக்கு சம்பாதிக்குறேன் சொந்தமா போர் போடலாமுன்னு வேலையத் தொடங்கினேன்… முதல் சிக்கல், எங்க வீட்டுல பாரம்பரிய(முட்டாள்தனமான) முறைப்படித்தான் தண்ணீர் பாக்கணுமுன்னாங்க… (பாலகுச்சு, தேங்காய் , போல்ட்டுநட்டு, சொம்புதண்ணீ இதகள வெச்சு பாக்குறது) உடன்பாடு இல்லைன்னாலும் அவங்க விருப்பப்படியே விட்டுட்டேன்… ஒரு இடத்தை பார்த்து போர் போட்டோம்… 700 அடி ஓடியும் தண்ணீ ஒரு சொட்டுக் கூட வரல அத்தோட நிறுத்திட்டோம்… ரூபாய் 75000 செலவு., வீடே துக்க காரியம் நடந்த இடமாட்டம் அவ்வளவு சோகம். ஏன்னா 20 வருட கனவு வீணாப்போ போச்சில்ல…

ஆனா நான் நம்பிக்கைய இழக்கல… எங்க வீட்டுல எல்லாரும் இப்படி நடந்துருச்சேன்னு திங்கட்கிழமை சாமி கேட்க குலதெய்வம் கோயிலுக்குப் போனாங்க.. அதேசமயம் நன்பர் ஒருவர் மூலமா மேக்கர் மூலமா (அறிவியல் ரீதியா) தண்ணீ பார்த்து அன்றைக்கே போர்வெல் வண்டிய வரவழைச்சு எங்க வீட்டாளுங்க திரும்பி வர்றதுக்குள்ள போர ஒட்ட ஆரம்பிச்சுட்டேன்…. அது என்னடான்னா மறுபடியும் 700 அடி ஓடியும் ஒரு சொட்டு தண்ணீ வரல. நானும் மனச விட்டுட்டேன்.

சரின்னு நண்பர் கிட்ட, இருந்த பணத்தை கையில கொடுத்துட்டு பைக்க எடுத்துட்டு சோகமா மனசு போன பக்கம் போனேன். ஒரு 5 நிமிடத்தில் அழைப்பு… நண்பர்கிட்டயிருந்து. என்னடான்னா, “தண்ணீ வந்துடுச்சு வாடான்னு…” கத்துனான். நானும் வேகமா வீட்டுக்கு வந்து பார்த்தேன். உண்மையாலுமே தண்ணீர் வந்திடுச்சு எனக்கோ அடக்க முடியாத சந்தோஷம் 800 அடிக்கு மேல ஓட்டவே முடியல அவ்வளவு தண்ணீ. சரின்னு வண்டிய கழட்டிய உடனே மோட்டர் பைப்பெல்லாம் ஏற்பாடு செஞ்சு… எறக்க ஆரம்பிச்சுட்டோம். ஏன்னா எங்க அம்மா வர்றதுக்குள்ள தண்ணீ எடுத்துடனும் அந்த வெறியில நைட்டெல்லாம் விளக்கு வச்சுக்கிட்டே வேலை பார்த்தோம். காலையில 9.00 மணிக்கு மோட்டார் மூலம் தண்ணீ எடுத்துட்டோம். ஆனா… எங்கம்மா அதுக்குள்ள வந்துட்டாங்க அம்மா முகத்துல இருந்த சந்தோஷம் இருக்கு பாருங்க., அத நான் இதுவரைக்கு பார்த்ததில்லைங்க… எனக்கே வாழ்க்கையில பெருசா சாதிச்ச மாதிரி ஒரு உணர்வுங்க…” பெருமிதம் பொங்க சொல்லி முடிக்கிறார்  பிரபாகரன், Bore – இல் வென்ற தண்ணீர்ப்போராளி என்று இவரை அழைத்தால் மிகையாகாது.

இந்த மகிழ்ச்சியை தனது ஃபேஸ்புக் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டார். அதுவும் “உங்களோட பகிர்ந்துக்கணுமுன்னு தோணிச்சு அதான்… என்னோட பிறந்த நாளுக்கு கூட பல பேர் என்ன வாழ்த்துனீங்க… அது எனக்குப் பெருசா தெரியல… ஏன்னா என்னோட பிறந்த நாளை இதுவரைக்கும் கொண்டாடியதில்லை… ஆனா., இதுக்காக எனக்கு வாழ்த்து சொன்னீங்கன்னா கட்டாயம் நான் மகிழ்ச்சியடைவேன்..” என்கிற கிராமத்து யதார்த்தத்துடன் கூடிய வேண்டுகோளுடன்.

அங்கே, 700 அடி ஆழத்துல அவர் ஊரில்  போட்ட போர் வெல்லில் (ஆழ்துளைக்கிணறு)   தண்ணீர் வந்தது. ஆனால் அவரது பதிவினைப் படித்து முடித்தவுடன், ஐந்தடி உயரத்தில் இருந்து எனக்கு இயல்பாகவே கண்ணீர் வந்தது. உடனே அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்தினேன்.  “உங்களுக்குப் பலர் தண்ணீர் தரமறுத்ததாகச் சொன்னீர்கள்… இன்று உங்களிடம் தண்ணீர் என்று குடத்தைத் தூக்கிக் கொண்டு வந்தால் கொடுப்பீர்களா..?” என்று கேட்டேன். “ நிச்சயமாக்கொடுப்பேன்… ஏன்னா குடிதண்ணீருக்காக எங்கள் குடுமபமும் நானும் பட்ட கஷ்டம் கொஞ்ச நல்லமல்ல… அந்தக் கஷடங்களை அனுபவிச்சவன் நான்…தண்ணீரும் காற்றும் இந்த உலகத்தில் எல்லோருக்கும் சொந்தம்… நிச்சயமாகக் கொடுப்பேன்..” என்று கூறினார் அந்த உதாரண இளைஞன் தண்ணீர்ப்போராளி பிரபாகரன். சேலத்தில் டெக்ஸ்டைல் டிசைனிங் தொழில் செய்து வரும் பிரபாகரனுடன் நீங்களும் நட்பு பாராட்ட வேண்டுமா..? தொடர்பு கொள்ளுங்கள் 9003647006.

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks