யுடியூபில் ராஜாவின் இசைத்தூறல்!

தமிழ் சினிமா விரைவில் தனது நுறாவது ஆண்டினை நெருங்கும் இந்த தருணத்தில் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் தமிழ்சினிமாவிற்கு வரவேற்பு கூடியுள்ளது.

அதற்குக் காரணமாக பல்வேறு இயக்குனர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் தமிழ்சினிமாவில் தோன்றி புதிதுபுதிதாக படைத்துக் கொண்டு தமிழ்சினிமாவை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் இளையராஜாவும் கெளதம் வாசுதேவ மேனனும் தங்களது துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவது உள்ளங்கை நெல்லிக்கனி.

அந்த வகையில் மேஸ்ட்ரோ இளையராஜாவும் ஸ்டைலீஷ் இயக்குனர் கெளதம் வாசுதேவ மேனனும் இணையும் முதல் படைப்பாக நீ தானே என் பொன் வசந்தம் வெளிவர இருக்கிறது.

இப்பொழுதுதான் என் இசையின் முதல் கட்டத்தைத் தொட்டிருக்கிறேன் என்று ஏற்கனவே சிகரங்களைத் தொட்ட இளையராஜா கூறியிருப்பதிலிருந்தே இந்தப் படத்தின் இசை எவ்வளவு சிறப்பானதாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இதோ அடைமழையாக இளையராஜாவின் இசைமழையினை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்குச் சிறு தூறலாக யுவன் ஷங்கர் ராஜா பாடியிருக்கும் சாய்ந்து சாய்ந்து என்னும் பாடலின் சில பகுதிகளை வரும் ஞாயிறு அன்று யூடியூபில் வெளியிட இருக்கிறார்கள்.

அடைமழையை அனுபவிக்க தூறலில் நனைந்து பழகவேண்டும் என்பதற்காக இருக்குமோ!

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks