மாற்றுத்திறனாளி இயக்குனரைப் பறந்து வந்து கெளரவித்த மோனிகா!

கேரளாவில் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராகத் திகழும் மோகனன் இயக்கத்தில் 916 என்ற மலையாளப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகை மோனிகா மாற்றுத்திறனாளியும் அறிமுக இயக்குனருமான டி.சாமிதுரை இயக்கத்தில் உருவாகியிருக்கும் குறும்புக்கார பசங்க படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் எப்படியும் கலந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் பிடிவாதமாக ஒரு நாள் அனுமதி வாங்கிக் கொண்டு கோழிக்கோட்டில் இருந்து சென்னைக்குப் பறந்து வந்திருந்தார்.

குறும்புக்காரப் பசங்களுடன்  உங்களுக்கு என்ன வேலை..? என்று கேட்டபொழுது…

குறும்புக்கார பசங்கள்ல ஒருத்தரா வர்ற ஹீரோ சஞ்சீவுக்கு நான் தான் ஜோடி… நானும் கிராமத்துக் குறும்புகள் நிறைந்த சிந்து என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்…

குறும்புக்கார பசங்க படப்பிடிப்பு எங்கே நடந்தது…?

முழுக்க முழுக்க கள்ளக்குறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பசுமையான இடங்கள்ல தான் முழுப்படமும் நடந்துச்சு… இயக்குனர் சாமிதுரை திட்டமிட்டபடி 45 நாட்களில் படப்பிடிப்பை நடத்தினார்… இதுல என்ன விஷேசம்னா, கள்ளக்குற்ச்சியில் ஒரு பாடலோ அல்லது சில காட்சிகளோ தான் மற்றவர்கள் எடுத்திருப்பார்கள்… குறும்புக்கார பசங்கதான் முழுக்க முழுக்க கள்ளக்குறிச்சியில்   எடுக்கப்பட்ட முதல் படம்…

கதாநாயகன சஞ்சீவுடன்  நடித்த அனுபவம்..?

சஞ்சீவ் நல்ல திறமையான நடிகர்… அவருடன் நடிப்பதை ஒரு போட்டியாக எடுத்துக் கொண்டுதான் நடித்தேன்… மற்றபடி படத்தின் பெயரில் தான் குறும்பு இருக்கிறதே தவிர நல்ல அன்பான டீம்…

ஒரு மாற்றுத்திறனாளி இயக்குனர் படத்தில் நடித்திருப்பது எப்படி இருந்தது..?

முதன் முதலாக இயகுனர் சாமித்துரையைச் சந்தித்த போது…இவர் எப்படி பண்ணப்போகிறார் என்கிற சிந்தனை எழுந்தது… ஆனால் அவரது கதை சொல்லும் திறமை.. நடிகர்கள் உட்பட.. அத்துனை பிரிவுகளையும் வேலை வாங்கிய விதம் என்னை வியக்க வைத்தது…மேலும் படப்பிடிப்புத் தளத்தில் அவர் ஒரு சிறந்த இயக்குனராக விளங்கினார்… அவரது புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையை அவரது இணை இயக்குனர்கள் மாரி மற்றும் சீனு ஆகியோரது மனித உழைப்பின் மூலம் வெளிப்படுத்தினார்…

அவரை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர் ரவிராஜனையும் பாரட்டியே ஆக வேண்டும்…

அழகில அறிமுகமானதிலிருந்து குறும்புக்கார பசங்க வரை அதே அழகியாகவே இருக்கிறீர்களே எப்படி..?

ஹா ஹா…. குறும்புக்கார பசங்கள்ல நான் மட்டும் இல்லை  எல்லா நடிகர்களையும் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளையும் ஒளிப்பதிவாளர் பாண்டியன் மிகவும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார்…

எப்பவுமே நான் அழகா இருக்கிறேன் என்று நீங்கள் கூறினால் அதற்குக் காரணம்  நான் எப்பவுமே உள்ளத்தை மகிழ்ச்சியாக வைத்திருப்பது தான் காரணம்… எனக்குக் கிடைத்த வாழ்க்கையை நான் மகிழ்ச்சியாகச் சந்திக்கிறேன்… ஒவ்வொரு வினாடியையும் மகிழ்ச்சியாகவே கடக்க ஆசைப்படுகிறேன்… என்னைப் பொறுத்துவரை அழகு வெறுமனே புறத்தோற்றம் சார்ந்ததல்ல… அது அகமகிழ்ச்சியில் விழைவது….

அட..அற்புதமாத் தமிழ்ல பேசுகிறீர்களே!

நான் பிறந்தது கேரளாவில் தான்… ஆனால் வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னையில் தானே!

சமீபத்தில் திரைக்கு வந்த வர்ணம் ,முத்துக்கு முத்தாக ஆகிய படங்களில் நல்ல வேடங்களில் நடித்திருந்தும் தமிழில் அவ்வளவாக உங்களைப் பார்க்க முடியவில்லையே!

நான் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து எனக்கு ஆத்ம திருப்தி அளிக்கும் படங்களில் மட்டுமே நடிக்கிறேன்… தவிர மலேசியத் தமிழ்ப் படம் ஒன்றில் நடித்திருக்கிறேன்….தொடர்ந்து கன்னடப் படம் ஒன்று…அப்புறம் கதைபறையும் போள் இயக்குனர் மோகனன் இயக்கத்தில் தற்சமயம் 916 என்ற மலையாளப்படம்… தமிழில் தான் இப்பொழுது குறும்புக்கார பசங்க வெளியாக இருக்கிறதே!

அது என்னங்க 916?

Purity of emotion and purity of love…அது தான் 916… எல்லாருமே மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் அது…

அடுத்த தமிழ்ப்படம்..?

அறிமுக இயக்குனர் பதமராஜன் இயக்கத்தில் மாசானி என்கிற படத்தில் நடிக்க இருக்கிறேன்… ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக நடிக்கவிருக்கிறேன்…மிகவும் சவாலான வேடம்… நிச்சயம் மோனிகா வை இன்னொரு தளத்திற்கு இட்டுச் செல்லும் படமாக அது இருக்கும்…

சொல்லி விட்டு கோழிக்கோட்டுக்குப் பறந்து விட்டார் மோனிகா.

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks