தப்பெல்லாம் தப்பே இல்லை – கவிஞர் அஸ்மின்

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக அறிமுகமாகும் நான் படப் பாடல்கள் வெளியீட்டு விழா திரயுலக ஜாம்பவான்களின் வாழ்த்து மழையோடு சத்யம் திரையரங்கில் நடந்தது.

விஜய் ஆண்டனியின் இசைப்பயணத்தைப் பொறுத்தவரையில் அவருக்கு இது 25 ஆவது படம். அதே நேரம் ஒரு தயாரிப்பாளராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகும் முதல் படம். மறைந்த ஒளிப்பதிவாளர் –இயக்குனர் ஜீவாவின் மாணவர் ஜீவா சங்கர் இயக்குனராகியிருக்கும் முதல் படம். இத்தகைய பல சிறப்புகளைப் பெற்ற “ நான்” திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடந்தது.

எஸ் ஏ சந்திரசேகர், கே.பாக்யராஜ், ஆகியோர் வெளியிட்ட நான் திரைப்பட பாடல்களை இசையமைப்பாளர்கள் சார்பாக (சங்கர்) கணேஷ் பெற்றுக் கொண்டார்.

விஜய் ஆண்டனியைப் பற்றிய கமல்ஹாசனின் அறிமுக மற்றும் வாழ்த்துரையுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. தமிழ்சினிமா அல்லது இலக்கியத்துறை என்கிற வகையில் விஜய் ஆண்டனிதான் மூத்த குடும்பத்தைச் சார்ந்தவர் என்றால் அது மிகையாகாது. ஆம்., தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்தரம் என்கிற நாவலை எழுதிய வேதநாயகம் பிள்ளையின் நான்காவது தலைமுறை வாரிசு விஜய் ஆண்டனி என்பது உலக நாயகனின் வீடியோ வாழ்த்துச் செய்தி மூலம் இன்று உலகத்திற்கே தெரிய வந்தது. பிரதாப முதலியார் சரித்திரம் 1857 இல் எழுத ஆரம்பிக்கப்பட்டு 1879 இல் வெளியான முதல் புதினம் ஆகும். விஜய் ஆண்டனியின் முன்னோரான மயூரம் வேத நாயகம் பிள்ள அவர்களால் எழுதப்பட்ட பிரதாப முதலியார் சரித்திரம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.

http://www.mysixer.com/?p=18814 See the gallery of Naan Audio Launch

தொடர்ந்து குஷ்பூ, ராதிகா சரத்குமார் நான் படத்தின் கதா நாயகிகள் ரூபா, அனயா மற்றும் விவா ஆகியோர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.

மிகவும் சரளமாக இனிய தமிழில் வாழ்த்துரை வழங்கிய குஷ்பு, “ தன்னம்பிக்கையும் தைரியமும் இருப்பவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றிபெறுவார்கள். விஜய் ஆண்டனிக்கு அவை இருக்கின்றன. டிரையலர் மற்றும் பாடல்களைப் பார்க்கும் போது தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.  எனது கணவர் சுந்தர்சி இயக்கும் படங்களில் தயாரிப்பு என்று எனது பெயர் இருந்தாலும் முழுக்க முழுக்க அவரது உழைப்பில் தான் அந்தப் படங்கள் உருவாகும். அதைப்போலவே இந்தப் படத்தின் வெற்றி முழுவதும் முழுக்க முழுக்க விஜய் ஆண்டனியையேச் சாரும்..வாழ்த்துகள்..” என்று பேசினார்.

ராதிகா சரத்குமார் பேசும்போது, “ஒளிப்பதிவாளர் ஜீவாவின்  நேர்த்தி ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது…ஜீவா சங்கருக்கு வாழ்த்துகள்… சினிமாவில்  மட்டும் தான் நாம் இங்கேயே கற்றுக் கொண்டதை பயன்படுத்தி இங்கேயே வேலை செய்து இதனாலேயே பயனும் அனுபவிக்கிறோம்… அதனை விஜய் ஆண்டனி அற்புதமாகச் செய்திருக்கிறார்..” என்றார்.

தயாரிப்பாளர் சங்கத்தலைவர் எஸ் ஏ சந்திரசேகர் பேசும் போது, “பசங்க  நாம என்னதான் அறிவுரை சொன்னாலும் பொறுமையாக் கேட்டுக் கொள்வாங்க… ஆனால் அதைப் பின்பற்ற மாட்டாங்க.. எதைச் செய்ய வேண்டாம் என்று நாம் சொல்வோமோ அதைச் செய்து காட்டுவதில் அவர்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம்… அப்படித்தான் எனது மகன் விஜயும் எனது மகனைப்போன்ற விஜய் ஆண்டனியும்… விஜய் ஆண்டனியை நான் அறிமுகப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன்..” என்று வாழ்த்தினார்.

விஐபி, ஆளவந்தான் படங்களில் கதா நாயகர்கள் காண்டாக்ட் லென்ஸ் அணிவது போல் காட்சிகள் வைத்திருந்தும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து விளம்பரங்களில் தாம் பயன்படுத்தத் தவறியதைக் குறிப்பிட்ட கலைப்புலிதாணு விஜய் ஆண்டனியை வாழ்த்தினார்.

நான் ஆணையிட்டால்…,  நான் நன்றி சொல்வேன்.., நானாக நானில்லை தாயே…என்கின்ற நான் வரும் பாடல்களின் சில வரிகளைப்பாடி தனது வாழ்த்துரையை ஆரம்பித்த இசையமைப்பாளர் கங்கை அமரன் , நெஞ்சாங்கூட்டில் நீயே…, கரிகாலன் காலைப்போல… என்கின்ற விஜய் ஆண்டனியின் பாடல்களையும் பாடிக்காட்டி வாழ்த்தினார்… அத்தோடு புதிது புதிதாக பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்துவதோடு அவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகளும் வழங்க வேண்டும் என்றும் விஜய் ஆண்டனி ஒரு கதா நாயகனாக  நடிக்க ஆரம்பித்து விட்டாலும் இசையமைப்பாளராகவும் தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஹன்சராஜ் சக்சேனா வாழ்த்துரை வழங்கும் போது வந்திருந்த சிறப்பு விருந்தினர்களின் பெயர்களை வரிசையாகப் படிக்க ஆரம்பித்தவர் நிறுத்தி, “என் பிரச்சினை எனக்கு..இதுல யாரு பேராவது விட்டுப்போச்சுன்னா ஒரு வருஷம் கழித்து என்மேலே கேஸ் போட்டுருவாங்க…” என்றதும் அரங்கில் சிரிப்பலை. தொடர்ந்து மனம் விட்டுப் பேசிய அவர், “20 ஆண்டுகள் சினிமாவில் இருக்கிறேன்… இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள்… பத்திரிக்கையாளர்கள் என்று யாரையாவது புண்படுத்தியிருந்தால் உங்களது வீட்டுக்குழந்தையாகக் கருதி பொறுத்துக் கொள்ளுங்கள்..” என்று கேட்டுக்கொண்டார். தன்னுடைய நீண்ட அனுபத்தின் உதவியுடன் சாக்ஸ் பிக்சர்ஸ் என்கிற திரைப்பட வெளியீட்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்திருப்பதையும் மேடையில் அறிவித்தார்.

இயக்குனர் – நடிகர்- இசையமைப்பாளர் எஸ்ஜே சூர்யா பேசும் போது, “ எவ்வளவு கோடிகள் வைத்திருந்தாலும்  நமக்குப் பிடித்ததைச் செய்தால் தான் உண்மையான மகிழ்ச்சி… அந்த வகையில் விஜய் ஆண்டனி தனக்கு பிடித்த இசையமைப்பாளர் வேலையைச் செய்து  வெற்றிபெற்றிருக்கிறார். தனக்குப் பிடித்த தயாரிப்பாளர், கதா நாயகன் வேலைகளிலும் இறங்கியிருக்கிறார். நிச்சயம் அதிலும் வெற்றி பெறுவார்..” என்று வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர்கள் பரத்வாஜ், சபேஷ் முரளி, சுந்தர் சி பாபு, விஜய் எபினேசர், ஸ்ரீகாந்த் தேவா மற்றும் விஜய் ஆண்டனியின் நெருங்கிய நண்பரான தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் தங்கள் துறையில் இருந்து கதாநாயகனாக மாறியிருக்கும் விஜய் ஆண்டனியை மிகவும் பாராட்டி வாழ்த்தினார்கள்.

முத்தாய்ப்பாகப் பேசிய இயக்குனர் கே.பாக்யராஜ் தனது மகன் சாந்துனு பேசிய, “சிலர் நடிக்க வந்த பிறகு பிடித்தமானவர்களாக மாறுவார்கள்… பிடித்தமானவர்களே நடிக்க வந்தால் அது சம்திங் ஸ்பெஷல்… எங்களுக்குப் பிடித்த விஜய் ஆண்டனி நடிக்க வருவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று” என்பதை வழிமொழிந்ததுடன் தான் 15 வருடங்களுக்கு முன்பாக இந்து முஸ்லீம் காதல் கதை ஒன்றை எடுக்க முயன்று முடியாமல் போனது பற்றி தனக்கே உரிய நகைச்சுவைப் பாணியுடன் பேசினார்.

தயாரிப்பாளர்  வெங்கட்ரமணி கூறியதைப் போல தனது தாய் தமக்காகப் பட்ட கஷ்டங்களை நினைவு கூர்ந்த விஜய் ஆண்டனி இன்று தமது கஷ்டங்களை தனது மனைவியு  பங்கிட்டுக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

மிகவும் பிரமாண்டமாக  நடைபெற்ற  நான் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்கள் தேனப்பன், அபிராமி ராமநாதன், டி சிவா, பாடலாசிரியர் விவேகா, இயக்குனர்கள் பார்த்திபன், லிங்குசாமி,ராஜா மற்றும் எடிட்டர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நான் பட ஆடியோ உரிமையை ஜெமினி குழுமம் வாங்கியிருக்கிறது. ஜெமினி குழுமத்தைச் சேர்ந்த சரண்யா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

விழாவில்  இலங்கையைச் சேர்ந்த கவிஞர் அஸ்மின் எழுதிய தப்பெல்லாம் தப்பே இல்லை என்கிற பாடலும் பிரியன் எழுதிய மக்காயேல மக்காயேல என்ற பாடலும் திரையிடப்பட்டன. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி யும் கதா நாயகன் விஜய் ஆண்டனியும் போட்டி போட்டு தங்களது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

-விஜய் ஆனந்த்.K

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks