நரேந்திர மோடியைக் கவர்ந்த நந்தா

அமெரிக்கா தந்த அடையாளமும் நரேந்திர மோடி தந்த நற்சான்றிதழும் – நடன இயக்குநர் ஜி.வி.நந்தா

சாதாரணமானவர்கள் வாய்ப்புகளைத் தேடிச் செல்கிறார்கள். ஆனால் புத்திசாலிகளோ வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

இதில் இரண்டாவது ரகம்தான் நடிகர் நடன இயக்குநர் ஜி.வி.நந்தா.

ஆரம்பத்தில் வாய்ப்புகளுக்கானத் தேடல்களில் ஈடுபட்டவர், ஒரு கட்டத்தில் தன் தகுதியை வளர்த்துக் கொண்டு ஆளுமையை விசாலப்படுத்திக் கொண்டார். அதன்பிறகு வாய்புகள் இவர் கதவுகளைத் தட்டத் தொடங்கி விட்டன.

அப்படி வந்த வாய்ப்புதான் அண்மையில் வந்துள்ள ‘மாலை பொழுதின் மயக்கத்திலே’ படத்தின் நடன இயக்குநர் வாய்ப்பு.

மேலும் அகில இந்திய அளவில் அறியப்படுகிற நடனக்கலைஞர் – நடன இயக்குநர் வாய்ப்பும் இவரைத்தேடி வந்திருக்கிறது.

குஜராத் முதல்வர் நரேந்திரமோடி திறமைசாலி இந்திய இளைஞர்களுக்கு இவரை உதாரணப்படுத்தியிருக்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறார். மோடியின் அழைப்பின் பேரில் விரைவில் அமெரிக்க சென்று குஜராத்துக்காக ஒரு கலைப்படைப்பை உருவாக்க இருக்கிறார்.

தேடுபராக இருந்தவர் தேடப் படுபவராக மாறிய விந்தை என்ன ? மாற்றிய வித்தை எது ? அதை நந்தாவே கூறுகிறார்.

“படிப்பு, நல்ல வேலை என்கிற கனவோடு வளர்க்கப்பட்டவன் நான் தப்பித்தவறிக் கூட சினிமா பக்கம் போய்விடக் கூடாது. சினிமா நினைப்பே உனக்கு இருக்கக் கூடாது என்று சொல்லிச் சொல்லி வளர்த்தார்கள். அதனால்தான் பிசியோதெரபி படித்தேன். ஆனாலும் பூர்வ ஜென்ம பந்தம் – மரபு வழி தொடர்பு என்று ஒன்ரு இருக்கத்தானே செய்யும் ?என் தாத்தா பெயர் எம்.எல்.லட்சுதிபதி. கருப்பு வெள்ளை காலத்திலேயே மாகாபாரதம், ராமாயணம், அலாவுதீன் அற்புத விளக்கு, அலிபாபாவும் 40 திருடர்களும் போன்ற படங்களைத் தயாரித்தவர். பிற்காலத்தில் அவருக்கு ஏற்பட்ட நஷ்டமே சினிமாத்துறையை குடும்பம் வெறுக்கக் காரணமானது “ என்கிறார்.

சிறு வயது முதல் நடனத்தின் மீது தணியாத ஆர்வம் நந்தாவுக்கு பதிமூன்று வயது முதல் நடனம் ஆடத் தொடங்கினார். ஜான் பிரிட்டோ நடன குழுவில் சேர்ந்து ஆடினார்.ஆடிக்கற்றார், கற்றும் ஆடினார். இந்த ஆர்வம் பல்வேறு மேடைகள், ஊர்கள், நாடுகள் என்று நந்தாவைக் கொண்டு போனது.

தான் ஆடிய குழுவில் தலைமை நடனக் கலைஞராக உயர்ந்த இவரது தனித்துவ அடையாளம் இனம் காணப்பட்டது. அதுவும் அமெரிக்கரால் என்றால் நம்ப முடியவில்லைதான்.

இவரது திறமையக் கண்ட அமெரிக்கத் தூதரகத்தினார் “இந்த மேற்கத்திய நடனத்தின் ஆழ அகலங்களை அமெரிக்கா சென்று கற்றுக் கொள்ள விரும்புகிறாயா ? “ என்று கேட்டுள்ளனர். விருப்பம் உண்டுதான் ஆனால் அமெரிக்காவெல்லாம் சென்று கற்றுக் கொள்ள தன் குடும்பச் சுழல் இடம் தராது என்று கூறியிருக்கிறார். “செலவு எல்லாவற்றையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்” என்றிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் கலாச்சார பரிவர்த்தனைகளில் வெளிநாட்டு திறமைசலிகளுக்கு அமெரிக்க கலைகளைக் கற்றுக் கொள்ள இடம் அளிக்கும் திட்டம் உள்ளது. அதன்படி இந்திய அளவில் கலந்து கொண்ட மூவரில் இவரும் ஒருவர். டெல்லி, மும்பையிலிருந்து தலா ஒருவர்.

நடனப் பயிற்சிக்காக அமெரிக்கா சென்றவர், வாஷிங்டன், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் என்று பல இடங்களில் பயிற்சி பெற்றார். 2006ல் சென்றவர் ஆறே மாதங்களில் பல ஆண்டு அனுபவத்தைப் பெற்று வந்திருந்தார். இவரது கற்றுக் கொள்ளும் வேகத்தைப் பார்த்த அமெரிக்கர்கள் “Indian are very fast” என்று பாராட்டியுள்ளனர்.

தாயகம் திரும்பிய நந்தா ஜான்பீட்டர் குழுவில் மீண்டும் இணைந்து ஆடி வந்தார் ஏராளமான மேடைநிகழ்ச்சிகளில் பங்கேற்றார். திரைக்கலைஞர்களுக்கு நடனமும் கற்றுக் கொடுத்து வந்தார். இவரிடம் விக்ரம் முதல் ஜெயம்ரவி, சிம்பு, தனுஷ் போன்ற பல நட்சத்திரங்களும் பயிற்சி பெற்றுள்ளார்கள்.

நடனத்தில் இவருக்கிருந்த தனியார்வத்தைக் கண்டு வியந்த நடிகர்கள் பலரும் இவரை சினிமாவில் நடிக்கத் தூண்டியுள்ளார்கள். தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் சினிமாவில் நுழையக் கூடாது என்பது இவரது கொள்கை. எனவே பாண்டியன், வீரா மாஸ்டர்களிடம் ஸ்டண்ட் பயின்றார், ஜிம்னாஸ்டிக்கும் கற்றார், ஆறுமாதம் தேடல்கள். இதற்கிடையே பல நடன நியகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தவறவில்லை.

விஜய் டிவியின் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ? போட்டியில் பங்கு பெற்றார். ஒன்றரை ஆண்டுகள் பரபரப்பு. இந்தக் காலக்கடடத்தில் வந்த சினிமா வாய்ப்புதான் ‘புகைப்படம்’ . செல்வராகவன் உதவியாளர் ராஜேஷ்லிங்கம் இயக்கிய படம்.

சென்னையிலிருந்து மும்பை போனவர். அங்கு பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சிகளில் ஆடினார். உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். டிவி ஷோக்கள் வெளிநாட்டு நிகழ்ச்சிகள் என்று ஆட்டம் தொடர்ந்தது.

‘கலர்ஸ்’ டிவியின் இந்தியாவின் திறமைசாலி (Talented Indian) விருது பெற்றார். இந்திய சாதனையாளர் புத்தகமான Indian Book of Record ன் சிறந்த படைப்புத் திறனுள்ள நடன இயக்குநர் விருதும் பெற்றார்.

நந்தாவின் திறமையைக் கேள்விப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, குஜராத் உருவான 50வது ஆண்டுவிழாவில் நடனம் வடிவமைத்துக் தரும்படி கேட்டுகொண்டார். அதன்படி 2000 நடனக் கலைஞர்கள் பங்கேற்க 2 லட்சம் பேர் முன்னிலையில் நடந்த அந்த நடன நிகழ்ச்சியை வடிவமைத்தார். அது மோடிக்குப் பிடித்து விட்டது. நடனத்தின் பின்பலத்தில் திரையில் இவர் காட்சிகளாக வடிவமைத்திருந்த பின்னணிக் காட்சிகள் பார்த்தவர்களை மிரள வைத்தது. இவரை மேடைக்கு அழைத்த முதல்வர் மோடி “நாட்டின் எதிர்காலம் இப்படிப்பட்ட இளைஞர்கள்தான் “ என்ற பாராட்ட பார்வையாளர்கள் கரவொலியால் அதிர வைத்தனர்.

மும்பையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த போது வந்த வாய்ப்புதான் “வாடா போடா நண்பர்கள்’ படம்.

நான் நடித்த இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் நிறைய கற்றுக் கொடுத்தது என்கிறார்.

விஜய்டிவியின் ‘அடுத்த பிரபுதேவா யார் ? போட்டியில் மட்டுமல்ல தெலுங்கு இந்தியில் நடந்த இதுமாதிரிப் போட்டிகளிலும் ‘ரன்னர் அப்’ பாகவே இரண்டாமிடம் பெற்றார். இது இவரை மேலும் தூண்டியிருக்கிறது.

நடிப்பா, நடன இயக்கமா? என்றால் நல்ல வாய்ப்பு எதுவென்றாலும் ஓகே’ என்கிறார் நந்தா.

அந்த வகையில் வந்த நடன இயக்குநர் வாய்ப்புதான் நாராயண் நாகேந்திர ராவ் இயக்கிய ‘ மாலை பொழுதின் மயக்கத்திலே’ இப்படத்தில் ஒரு நடன இயக்குநராக தனியாளுமையும் படைப்பாற்றலும் காட்ட முடிந்தது என்கிற திருப்தி இவருக்கு. ‘ ஓ பேபி கேர்ள்’ பாடலுக்காக இவர் அமைத்த நடனம் பார்த்து பல புதிய படவாய்ப்புகள் வந்துள்ளன.

“எனக்கு கதாநாயகன், வில்லன் என்கிற பாகுபாடு இல்லை. நல்ல நடிகன் என்கிற நோக்கத்தில்தான் என் தேர்வு இருக்கும் என்னை வேலை வாங்கும்படியான இயக்குநரிடமே பணிபுரிய விருப்பம் “ என்கிறார் ஜி.வி.நந்தா.

படை திரட்டிக் கொண்டு போருக்குச் செல்பவன் தோல்வியடந்ததில்லை. திறமையை வளர்த்துக் கொண்டு திரைக்களம் புகுந்தவர்களுள் தோற்றதும் இல்லை.

நடன இயக்குனராக,கதா நாயகனாக இன்று இந்தியாவே திரும்பிப் பார்க்கும் திரைப்பட இயக்குனராக உயர்ந்திருக்கும் பிரபுதேவாவைப் போல் நந்தாவும் சிகரம் தொடக் காத்திருக்கிறார் நந்தா.

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks