பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் நீச்சல் பயிற்சியின் போது 4 ஆம் வகுப்பு மாணவர் ரஞ்சன் பலி. பலியான மாணவர் தமிழ் சினிமா இயக்குனர் ஆர் என் ஆர் மனோகரின் மகன் ஆவார்.
”மாசிலாமணி”, ”வேலூர் மாவட்டம்” ஆகிய தமிழ் திரைப்படங்களை இயக்கியவர் மனோகரன். வளசரவாக்கம் காந்தி தெருவில் வசித்து வருகிறார். இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு சினேகிதா (14) என்ற மகளும், ரஞ்சன் (10) என்ற மகனும் இருந்தனர். கே.கே.நகர் அழகிரிசாமி சாலையில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் சீனியர் செகண்டரி பள்ளியில் சினேகிதா 8ம் வகுப்பும், ரஞ்சன் 4ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இதில் நான்காம் வகுப்பு மாணவரான ரஞ்சன் நேற்று வழக்கம் போல நீச்சல் பயிற்சி செய்த போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்திருக்கிறார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கே.கே.நகர் போலீசார், நீச்சல் பயிற்சியாளர் ராஜசேகர், நீச்சல் குள பொறுப்பாளர் ரெங்கா ரெட்டி, உதவியாளர் அருண்குமார், விளையாட்டு ஆசிரியர் ரவிச்சந்திரன், துப்புரவு பணியாளர் ரவி ஆகிய 5 பேர் மீது கவனக்குறைவாக இருத்தல் (304 ஏ) என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
பின்னர் 5 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னையில் பிரபல கல்வி குழுமங்களில் ஒன்றாகத்திகழும் பத்மசேஷாத்திரி பள்ளியில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பதாலும் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பள்ளி நிர்வாகக் குறைபாட்டால் பலியாகிக் கொண்டிருப்பதும் சென்னையில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஞ்சன் நீச்சல் குளத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து அவனது தந்தை மனோகரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரஞ்சன் இறந்த செய்தியைக் கேட்ட அவர், ”எனது மகனை திரைப்படத்துறையில் பெரிய இயக்குனர் மற்றும் நடிகராக்கி அழகு பார்க்க நினைத்த எனக்கு அவனது சடலத்தை காட்டுகிறீர்களே? நான் என்ன செய்வேன்” என்று கதறினார்.
போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததே விபத்துக்குக் காரணம் என்று அறியப்படுகிறது.
எதற்கெடுத்தாலும் கட்டணம் வசூலிப்பதில் மட்டும் குறியாய் இருக்கும் கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் பாதுகாப்பு விஷயத்தில் முழுமையான அக்கறை காட்டப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
சீயோன் பள்ளி விபத்திலும், ஜேப்பியார் கல்லூரி விபத்திலும் அதன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டது போல பத்மசேஷாத்திரி குழுமத்தின் தலைவரும் கைது செய்யப்படலாம் என்கிற சூழ் நிலை ஏற்பட்டிருக்கிறது. சீயோன் பள்ளி விவகாரத்தில் நீதிமன்றமே தலையிட்டு வழக்கினை முடுக்கி விட்டது போல இந்தச் சம்பவத்திலும் நீதி கிடைக்க வேண்டும் எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகள் –இழப்புகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்பது தனியார் கல்வி நிறுவனங்களால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இரங்கல் செய்தி
“எங்களது கல்விக்குழுமங்களில் பயிலும் மாணவர்கள் அனைவருமே எங்களது குடும்ப உறுப்பினர்கள் தாம், அப்படி ஒரு குடும்ப உறுப்பினரை இழந்ததில் மிகவும் வருந்துகிறோம். மாணவர் ரஞ்சனின் இழப்பு மிகவும் அதிர்ச்சினை ஏற்படுத்தியிருக்கிறது. அன்னாரது குடும்ப உறுப்பினர்களுடன் நாங்களும் சேர்ந்து ரஞ்சனுக்கு மரியாதை செய்யும் விதமாக இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இந்த பேரிழப்பினைத் தாங்கும் சக்தியை வழங்க ஆண்டவனிடம் கேட்டுக் கொள்வதுடன், ரஞ்சனின் ஆத்மா சாந்தியடையவும் வேண்டிக் கொள்கிறோம்” என்கிற இரங்கல் செய்தியினை பத்மசேஷாத்ரி பாலபவன் குழுமம் வெளியிட்டிருக்கிறது.




