நிஜமான நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டச் சிறுகதை – விஜய் ஆனந்த்.K
கெளஷியா , வாய்ப்பும் வசதிகளும் கிடைத்தால் இந்த சமுதாயத்திற்காக ஏதேனும் சாதனை புரியும் அளவிற்கு தன் வாழ்க்கையினை அமைத்துக் கொள்ளும் அன்பும் கடமையுணர்ச்சியும் கொண்ட 11 வயது சிறுமி. அவளது அப்பாவும் அம்மாவும் தெருமுனையில் தள்ளு வண்டியில் வாழைப்பழ வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். 500 ரூ வட்டிக்கு வாங்குவார்கள் 100 ரூ பிடித்தம் போக 400 ரூ கையில் வாங்குவார்கள் அதனை முதலீடாகக்கொண்டு பழங்கள் வாங்கி விற்பார்கள் அதில் வரும் லாபத்தில் தினம் 50 ரூ வட்டிக்காரனிடம் கொடுத்து 500 ரூ யையும் கழித்துவிடுவார்கள். கெளஷியாவிற்கு 5 ஆம் வகுப்பு பயிலும் ஒரு தங்கையும் இருக்கிறாள் அவள் பெயர் ஃபரிதா பொழுது சாயும் நேரத்தில் வருவார்கள் இரவு 10 மணியளவில் கடையைத் தள்ளிக் கொண்டு சென்று விடுவார்கள்.
வழக்கம்போல இட்லிக்கடையில் சாப்பிட்டு விட்டு அங்கு வந்து 10 ரூபாய்க்கு பழங்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருவேன். ஒரு நாள் கெளஷியா அங்கு இருந்தாள் ஃபரிதாவும்தான். அவர்கள் பெற்றோருக்குத் துணையாக வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் நான் பேச்சுக்கொடுத்தேன். நன்றாகப் படிக்கிறீர்களா? என்று கேட்டேன் ”ம்ம்ம்… நல்லா படிக்கிறேன்..” ஃபரிதாவிடம் இருந்து மட்டும்தான் பதில் வந்த்து கெளஷியா பதில் சொல்லாதது கண்டு காமெடி பண்ணுவதாக எண்ணிக்கொண்டு “ நீ சரியாப் படிக்கிறது இல்லையா..? அதனால்தான் பதில் இல்லையோ..” என்று கேட்டேன். ”இல்லை நான் படிப்பை நிறுத்தி ஒரு வருடம் ஆகிறது” என்றாள் ”ஆமாம்ப்பா நாங்க கஷ்டப்படுறமாம் அதனால ஸ்கூலுக்குப் போகமட்டேனுட்டா..வேலைக்குப் போறா” அவளது அம்மா.
கெளஷியா வைப் பார்த்து என்ன கேட்பது என்று யோசிப்பதற்குள் “ஒரு பியூட்டி பார்லர்ல வேலைக்குப்போறேன் 2500 ரூபாய் சம்பளம்”
”சரி எவ்வளவு படிச்சிருக்க?”
“5 ஆம் வகுப்பு”
“எவ்வளவு நாளா வேலைக்குப் போற?”
“1 வருடமாக”.
நான் காமெடி பண்ணவில்லை சரியான ஒரு மொக்கையப் போட்டிருக்கிறேன் என்று அப்பொழுதுதான் தெரிந்தது.
படிப்பை நிறுத்தி ஒருவருடம் ஆகிறது, வேலைக்குப்போயும் ஒரு வருடம் ஆகிறது படித்த்து 5 ஆம் வகுப்பு. 11 வயதில படிச்சது போதும் என்று நிறுத்திவிட்டு பெற்றோருக்குப் பாரமாக இருக்க விரும்பாமல் வேலக்கு போய் ரூ 2500 சம்பாதித்து விட்டு மாலை நேரங்களில் பெற்றோருக்குத் துணையாக பழ வியாபாரம். என் மண்டைக்குள்ள ஏதோ கடப்பாறைய விட்டுக்குடைஞ்ச மாதிரி இருந்துச்சு. ஏன்னா 37 வயசு ஆகுது சினிமாவுல உதவி இயக்குனர் சமீபத்துல வேலை செஞ்சு முடிச்ச படத்துல நான் வாங்கின சம்பளம் மாத சராசரி என்று எடுத்துக் கொண்டால் கெளஷியா வாங்குற ரூ 2500 ஐ விட மிகவும் குறைவு. உதவி இயக்குனர் கொஞ்சம் சம்பளம் அதிகமாகக்கேட்டால் ரொம்ப பேசுகிறாய் என்பார்கள் அவர்கள் பட்த்தில் கதாநாயகன் மட்டும் புரட்சிகரமாக படம் முழுவதும் வசனம் பேசுவார்கள். சரி இதனை வேறு ஒரு கதையில் பார்த்துக்கொள்ளலாம்.
அன்று வேறு எதுவும் பேசிக்கொள்ளாமல் வீட்டிற்குத் திரும்பிவிட்டேன்.
ரம்ஜான் பண்டிகைக்கு சில நாட்களே இருந்த நிலையில் வழக்கம் போலப் பழம் வாங்கச் சென்ற போது, அவர்கள் முஸ்லிம் குடும்பம் ஆதலால் ரம்ஜான் கொண்டாட்டங்கள் எப்படி இருக்கிறது என்று கேட்டுவிட்டேன். கெளஷியா மட்டும்தான் இருந்தாள் ”அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அதனால இந்த வருடம் ரம்ஜான் இல்லை”, தெளிவாக யாதார்த்தமாக கொஞ்சம் கூட வருத்த்த்தை முகத்தில் காட்டாமல் அவள் கூறியது என் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
பழம் வாங்கிவிட்டு வந்து விட்டேன்.
அடுத்த நாள் எனது தோழி என்னைப்பார்க்க என் வீட்டிற்கு வந்திருந்தாள் அவளிடம் கெளஷியா ஐப் பற்றி கூறியிருந்ததால் அவளை அறிமுகப்படுத்தும் எண்ணத்துடன் அந்த பழக்கடைக்கும் அழைத்து வந்தேன். எனது சமயோசிதப் புத்திக்கு ஒரு நன்றி செலுத்திக்கொண்டேன் ஏனென்றால் அந்தக் கடையில் இருந்த சில நொடிகளில் என் மனதில் ஒரு திட்டம் தோன்றியது.
திரும்பி வீட்டிற்கு வரும் வழியில் எனது தோழியிடம், ”வரும் வெள்ளி அன்று எனது பிறந்த நாள் அன்று கண்டிப்பாக ஒரு 1000 ரூபாய்க்குச் செலவு வைத்திருப்பாயே” என்றேன். ”ஆமாம் உங்களுக்கு புதுத்துணி எடுத்துத் தரலாம் என்றிருக்கிறேன்” என்றாள் அப்பாடா அவளும் அப்படி ஒரு எண்ணத்துடன் தான் இருக்கிறாள் என்று மனதிற்குள் சந்தோஷப்பட்டுக்கொண்டு, ”சரி அப்படின்னா எனக்காக ஒரு உதவி செய்யிறியா?” எனக்கேட்டேன், ”கண்டிப்பாக” என்று கூறினாள் கெளஷியா மற்றும் ஃபரிதாவைப்பற்றிக்கூறி அவர்கள் ரம்ஜான் கொண்டாட முடியாத நிலையில் இருப்பதையும் விவரித்து அவர்கள் இருவருக்கும் புத்துத்துணி எடுத்துத் தர முடியுமா என்று கேட்டேன். கொஞ்சம் கூட தாமதிக்காமல் ”சரி” என்று தலையாட்டிவிட்டாள் அன்று இரவே தி. நகர் சென்று இருவருக்கும் 700 ரூபாய் க்கு சுடிதார் வாங்கி கொண்டு கைதைப்பதற்காக கொடுத்து விட்டு நாளை அதனை வாங்கி அவர்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று கூறிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
துணிகளைக் கொடுப்பதற்காக பழக்கடைக்குச் சென்றால் கெளஷியா வையும் ஃபரிதாவையும் காணவில்லை அவர்களது அப்பா மட்டும்தான் இருந்தார்கள். அவரிடம் கான்கிரீட் வீட்டு மாடி ஒன்றில் இருந்த அவர்களது குடிசை வீட்டினை விசாரித்து கெளஷியா வீட்டு கதவைத்தட்டியவுடன் அவரது அம்மா திறந்தார்கள். வெளியே வந்த கெளஷியா அம்மா கெளஷியா பாசி மற்றும் சில கவரிங் வாங்க கடைக்குச்சென்றிருப்பதைக் கூறினார்கள். வெளியே வந்த ஃபரிதா என் கையில் புதுத்துணி இருப்பது கண்டு புரிந்து கொண்டு மகிழ ஆரம்பித்தாள். அவளது முழுமகிழ்ச்சியினைத் தாமதப்படுத்த விரும்பாமல் கெளஷியா இல்லாவிட்டாலும் பராவாயில்லை என்று முடிவு செய்து அவள் கைகளில் அதனைக்கொடுத்து ரம்ஜான் வாழ்த்துகள் கூறினேன். கிளம்பலாம் என்ற வேளையில் கெளஷியாவும் வந்தாள் நிலைமையை சட்டெனப்புரிந்து கொண்ட அவள் ஒரு சந்தோஷப்புன்னகையினை உதிர்த்தாள். அவளுக்கும் ரம்ஜான் வாழ்த்துகள் கூறி விட்டு திரும்பினேன். அந்த இருவரின் சந்தாஷத்தில் 2 – 3 ஆஸ்கார் வாங்கிய திருப்தி எனக்கு.
700 ரூபாயில் 3 ஆஸ்கார் வாங்கித் தந்த எனது தோழியினை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.






Enakum, Innum Silarukum ithupola Ennam Undu, But Palarakum Intha Ennam Varavenum….Antha Naal vegu tholaivil Illai….
grt vijay…..
great