Share

அர்த்தநாரி விமர்சனம்

a K.Vijay anandh review

இந்தியாவை அச்சுறுத்தும், அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் , குழந்தைத் தொழிலாளர் என்கிற விஷ(ய)த்தைக் கதைக் கருவாக்கி ஒரு ஆக்‌ஷன் படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

கிராமத்தில்  ஏழ்மையில் வாடும் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளை  அடிமாடுகளைப் போல் விலைக்கு வாங்கி , நகரங்களில் பேக்கரி, மர அறுவை நிலையம், கல்குவாரிகள்  என்று வேலைக்கு அனுப்பும் கும்பல்.  இன்னும் ஒரு படி மேலே போய், சர்வதேச மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்துக்கொண்டு, அவர்களது பரிசோதனைக்கூடத்தில் உருவாக்கும் மருந்துகளைச் சோதனை செய்ய இந்த அப்பாவி குழந்தைகளைப் பயன்படுத்தும் கும்பல்.  இவர்களை வேட்டையாட அண்டர் கவர் ஆப்ரேஷனில் இறங்கும் அருந்ததி. அவரது வேட்டையில் பங்குபெறும்ராம்குமார். சக்தியுடன் சிவன் சேர்ந்து அசுரர்களை வேட்டையாடுவதால் அர்த்த நாரி. இறுதிக் காட்சியில் கதைக்கும் டைட்டிலுக்கும் சமரசம் செய்துகொள்ளாமல் சிவனைச் சாகடித்துவிடுகிறார்கள்.

இப்படி ஒரு சவாலான கதைக்கருவை, சூர்யா – விக்ரம் போன்ற ஆக்ஷன் ஹீரோக்கள் சுமக்க வேண்டிய கதாபாத்திரத்தை அருந்ததி போன்ற வளரும் நடிகையை நம்பி அவரது தலையில் ஏற்றிவிட்டிருக்கும் கதை எழுதித் தயாரித்திருக்கும் ஏ எஸ் முத்தமிழ் மற்றும் அறிமுக இயக்குநர் சுந்தர இளங்கோவன் ஆகியோரின் துணிச்சலை நிஜமாகவே பாராட்டித்தான் ஆகவேண்டும்.

அருந்ததியும், அட்டகாசப்படுத்தியிருக்கிறார். கிரிமினல்களிடம் காட்டுவதை விட ஆரம்பக்காட்சிகளில் காதலனிடம் விறைப்பாக நடந்துகொள்ளும் போது நிஜமான காவல்துறை அதிகாரியாகவே ஜொலிக்கிறார்.

ராம்குமார், அறிமுகம் என்றாலும் தனது பங்கை அளவாகச் செய்துவிடுகிறார்.

முக்கிய வில்லன் சுதாகரின் ஆட்களாக வரும் காவல்துறை உயரதிகாரி முத்துராமன், நான் கடவுள் ராஜேந்திரன், சம்பத்ராம் அண்ட் கோ மிகவும் இயல்பாகப் பயமுறுத்துகிறார்கள்.

குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு பள்ளிக்கு அனுப்பும் நாசர் போன்ற செல்வமாணிக்கங்கள் இன்றைய சமூகத்திற்கு அதிகளவில் தேவைப்படுகிறார்கள். அவரது உதவியாளராக வரும் சிவசங்கர் மாஸ்டர், சரியான கதாபாத்திரத் தேர்வு.

இசையைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும், கபிலன் எழுதிய அத்துனை பாடல்களும் வி செல்வகணேஷ் இசையில் மிகவும் அற்புதமாக இருக்கின்றன. எண்பதுகளில் கேட்டு ரசித்த மெலடிகள் போன்று மெஸ்மெரிசம் செய்கின்றன.

அர்த்தநாரி, தவறுகள் இல்லாத படம் என்பதில் சந்தேகமே இல்லைதான். ஆனாலும், மேக்கிங்கில் இன்றைய யுக்திகளைக் கையாண்டிருந்தால் சில நாடகத்தனங்களைத் தவிர்த்திருக்கலாம்.

மற்றபடி, அர்த்தநாரி , அர்த்தமுள்ள படம்.