Share

சும்மாவே ஆடுவோம் விமர்சனம்

a K.Vijay Anandh review

தனக்குத் தன் மனைவி மூலமும் இன்னொரு பெண் மூலம் ஒரே நேரத்தில் பிறக்கும் ஆண் வாரிசுகளை, மனதைக் கல்லாக்கிக் கொண்டு மாற்றிவிடுகிறார் ஜமீனாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஏ. ஆனந்தன். இதனால், முதல் மகன் கர்ணன் அரண்மனையிலேயே வளர்வதாகவும் இரண்டாவது மகன் அர்ஜுனன் வாழ்க்கையில் ஜெயிக்கப் போராடிக்கொண்டிருப்பதாகவும்  அவர் மனக்கணக்குப் போட்டு ஆனந்தப்பட்டுக்கொண்டிருக்க, கிளைமாக்ஸில் ஜோதிடர் பாண்டு மூலமாக ஒரு சுவராஸ்யமான முடிச்சு அவிழ்க்கப்படும்வேளையில் , அவர்கள் இருவருக்கும் தெரியாமல் அந்த முடிச்சுக்குள் தான் போட்ட  முடிச்சை அவிழ்க்காமல் ஆனந்தப்படுகிறார் பாலாசிங்.

அருண் பாலாஜி, இந்தப் படத்தில் நிஜமாகவே அட்ரா மச்சான் விசிலு போடவைக்கிறார். கதாபாத்திரப்பெயருக்கேற்றார்ப் போலவே இரத்தம் முதல் பணம் முதற்கொண்டு அள்ளி அள்ளி வழங்குகிறார். தன் ஊரைச்சேர்ந்த இளைய சூப்பர் ஸ்டார் அர்ஜுனின் தீவிர ரசிகராக இருந்துகொண்டு ஒரு கட்டத்தில் அர்ஜுனின் சுயரூபம் தெரிந்து அவருக்கு எதிராகவே புறப்படும் சவாலான கதாபாத்திரம் , மிகவும் இயல்பாக ஜெயித்துக்காட்டியிருக்கிறார்.

சகுனி மாமா சம்பத்ராமிடம் மாட்டிக்கொள்ளும் அர்ஜுன், ஜமீன் பொறுப்புக்கு வந்தவுடன், கர்ணன் ஆட்களை ஊரைவிட்டே விரட்டும் சதிக்கு உடந்தையாகிறார்.

மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களான கர்ணன் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பெயர்களை சும்மாவே ஆடுவோமின் கதாபாத்திரங்களுக்கும் சூட்டி, அவர்களது சூழ் நிலையையும் பிரச்சினையையும் உல்ட்டாவாக மாற்றி ஒரு சுவராஸ்யமான திரைக்கதை அமைத்திருக்கிறார் சுகுமார்.

 நாயகி லீமா பாபு, யுவராணி, மனோ, லொள்ளு உதயா, கிங்காங், விசித்திரன், போண்டாமணி, கொட்டாச்சி, ரவி, சுஜித், அம்மு , ராபர்ட் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட துணைக்கதாபாத்திர நடிகர்களை நடிக்க வைத்து, அவர்கள் ஒவ்வொருவரையும் மிகச்சரியாகப் பயன்படுத்தி இந்த குருஷேத்திரப்போரில் கர்ணனை ஜெயிக்க வைத்திருக்கிறார்.

இடைவேளைக் காட்சியில் போடப்படும் ஒரு வழக்கமான சவால்தான், ரசிகர்களுக்குத் தெரியும், ஹீரோதான் ஜெயிப்பான் என்று, ஆனாலும், எப்படி ஜெயிக்கிறான் என்பதை விறுவிறுப்புடனும் சுவராஸ்யத்துடன் சொல்லி தயாரிப்பாளரிடம் விட்ட சவாலில் ஜெயிக்கிறார் இயக்கு நர் சுகுமார்.

சும்மாவே ஆடுவோம் படத்தின் கதைப்போக்கிற்கு ஏற்றவாறு தனது கேமராவைக் கையாண்டிருக்கிறார் வில்லியம்ஸ்.

சும்மா சொல்லக்கூடாது, சும்மாவே ஆடுவோம் படத்திற்குப் பெரிய பலமே ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் அவரது இசையில் உருவான முருகன் மந்திரம், அஸ்வின் மற்றும் காதல் சுகுமார் எழுதிய பாடல்களும் தான். யுவராணிக்கு  நடக்கும் வளைகாப்பில் மாணிக்கவி நாயகம் – மகிழினி மணிமாறன் பாடியிருக்கும் மகராசி… பாடல் முதல் முத்து முத்து…,  சும்மாவே ஆடுவோம்…,  ரெட்ட சடக்காரி… இப்படி எல்லா பாடல்களும் அருமை.

அதிலும் தலைவா தலைவா… பாடலை நிஜத்தையும் நிழலையும் இணைத்துக் காட்சிப்படுத்திய விதம் அட்டகாசம். இசையமைக்க எல்லா வாத்தியங்களும் வேண்டும் என்று இயக்கு நர் கேட்க , அதனைச்  “சரியாகப்” புரிந்துகொண்டு வரிகளில் கொண்டுவந்து அந்த வெள்ளந்தி கிராமமக்கள் செய்கிற களேபரம் கலகல ரகம். இந்தப் பாடலை எழுதியவர் லொள்ளு உதயா என்பது குறிப்பிடத்தக்கது, நிஜமான லொள்ளு பாடல்தான்.

சவாலை ஏற்றுக்கொண்ட அருண் மற்றும் குழுவினரின் எழுச்சிப் பயணமாக அமைந்த முருகன் மந்திரம் எழுதிய விடியாத இரவிங்கு… நம் ஒவ்வொருவருக்கும் புத்துணர்வு ஊட்டும் ரகம்.

ஃபெஃப்சியை வைத்து சும்மாவே ஆடுவோம் படத்தை எடுத்துக்கொண்டே அவர்களையும் கலாய்த்திருக்கிறார்கள், அதனை பெப்சியும் பெருந்தன்மையாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். விமர்சனத்திற்கு உட்படாதவர்களாக பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் எவரும் இருக்க முடியாது என்று எடுத்துக்கொண்டிருப்பது ஆரோக்கியமான விஷயம்.

தனது நீண்ட திரைப்பயணத்தில் சும்மாவே ஆடிக்கொண்டிருக்காமல் நிறையக்  கற்றுக்கொண்டிருக்கிறார் காதல் சுகுமார் என்பது தெரிகிறது.

சும்மாவே ஆடுவோம் – அவர்களுக்கு, திரையரங்கில் கொண்டாடுவோம் – நமக்கு.