Share

கல்வியாளரின் முதலமாண்டு நினைவு தினம்

சாய்ராம் கல்விக்குழுமங்களின் நிறுவனர்  எம்.ஜெ.எப். லயன் லியோ முத்துவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி ஜூலை 10 ஆம் தேதி அன்று ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்கப்பட்டு நெகிழ்வான  நிகழ்வாக ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  முன்னதாக அன்று காலை , கல்லூரி வளாகத்தில் லியோ முத்துவின் நினைவு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சாய்ராம் குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து,  லியோமுத்துவின் மனைவி கலைச்செல்வி லியோமுத்து, மகள் சர்மிளா ராஜா,  ஆர்.எம்.கே கல்வி நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.எஸ்.முனிரத்தினம், மறைந்த லியோ முத்துவின் நெருங்கிய நண்பரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தா.பாண்டியன், ஜெயா கல்வி குழுமத்தின் நிறுவனர் டாக்டர்.ஏ.கனகராஜ், நடிகர் மயில்சாமி, முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், மக்கள் தொலைக்காட்சி பாஸ்கர் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், மாணவர்கள் உள்ளிட்ட   இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய சாய்பிரகாஷ், “சாதனையாளர்களுக்கு மகனாக பிறந்தது ரொம்ப கஷ்ட்டமான விஷயம், ஏன் என்றால், அவர்கள் செய்த சாதனையை நாம் முறியடியக்க வேண்டும், அது நடக்குமா? என்பது கேள்விக்குறிதான். அப்படித்தான், எனது தந்தை லியோமுத்து அவர்களும் கல்வித் துறையில் பல சாதனைகளை புரிந்துள்ளார். பள்ளி முதல் பொறியியல் கல்லூரி வரை, பல்வேறு சாதனைப் புரிந்த அவர், சாய்ராம் கல்லூரியை, இந்தியாவில் சிறந்த 10 கல்லூரிகளில் ஒன்றாக கொண்டு வந்தார். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், அந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே கல்லூரி சாய்ராம் கல்லூரிதான். அடுத்த ஆண்டு அந்த இடத்தில் நாங்கள் இருப்போமோ? என்பது தெரியாது. அந்த அளவுக்கு எனது தந்தையின் உழைப்பு இருந்துள்ளது. அவர் இல்லாத இந்த ஒரு ஆண்டில் நான் ரொம்பவே கஷ்ட்டப்பட்டுவிட்டேன். அந்த நேரத்தில் எனக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்தும், நண்பராக இருந்தும் எனக்கு ஊக்கம் கொடுத்தவர், ஆர்.எம்.கே கல்வி நிறுவனத்தின் நிறுவனர் முனிரத்னம் அவர்கள் தான். இந்த நேரத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியை, குடும்ப நிகழ்ச்சியாக நடத்தலாமா அல்லது பொது நிகழ்ச்சியாக நடத்தலாமா, என்றே நான் குழம்பிவிட்டேன். இறுதியாக, எனது கல்லூரி ஊழியர்கள் கொடுத்த ஊக்கத்தின் பேரில், இப்படி ஒரு சிறப்பான விழாவாக நடத்தியுள்ளோம். இதற்கு வந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினருக்கும் எனது நன்றிகள்.

எப்போதும், அப்பா சொல்வார் கல்வியை வியாபரமாக மட்டுமே பார்க்ககூடாது, அதை சேவையாக பார்க்க வேண்டும் என்று, அப்படித்தான் சாய்ராம் கல்வி குழுமத்தில் நாங்கள் கல்வியை வியாபாரமாக பார்க்காமல் சேவையாக பார்க்கிறோம். இது ஒரு சேவை வியாபாரம் என்று சொல்லலாம். சிலர் 50 சதவீதம் சேவை, 50 சதவீதம் வியாபாரம் என்று பார்ப்பார்கள், ஆனால், நாங்கள் 75 சதவீதம் சேவையாகவும், 25 சதவீதம் தொழிலாகவும் பார்க்கிறோம். தொடர்ந்து அப்படித்தான் சாய்ராம் கல்வி குழுமம் இயங்கும். எனது தந்தை எப்படி சாய்ராம் கல்வி குழுமத்தை அழைத்துச்  சென்றாரோ, அவர் வழியில் நானும், எனது சகோதரி உள்ளிட்ட எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், சாய்ராம் கல்வி குழுமத்தை நடத்திச் செல்வோம். நான் குடும்பம் என்று சொல்வது சாய்ராம் கல்வி குழுமத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரையும் தான்” என்று தெரிவித்தார்.

மூத்த கம்யூனிச தலைவர் தா.பாண்டியன் பேசுகையில், “கம்யூனிஸத்தை பின்பற்றும் ஒருவர் செல்வந்தர்களைப் பற்றி பேசலாமா என்று கேட்பார்கல்…  நான் லியோமுத்துவைப் பற்றி எங்குவேண்டுமானாலும் பேசுவேன்… ஏனென்றால் அந்த அளவிற்கு பொதுமக்கள் சேவை குறிப்பாக கல்விச்சேவை  ஆற்றியிருக்கிறார். அவரைப் பற்றி நான் புத்தகமும் எழுதுவேன்.. அவரது சொந்த ஊரில், பெண்களுக்கு தனியாக பள்ளி கட்ட வேண்டும் என்று 5 ஏக்கர் நிலம் வழங்க முன் வந்தார். ஆனால், அரசியல் காரணமாக அதை ஏற்றுக்கொள்ள சிலர் மறுத்தார்கள். அதேபோல தமிழகத்தில் டிஜிட்டல் நூலகம் ஒன்றை கட்ட வேண்டும், என்பதற்காக பல ஏக்கர் நிலமும், ரூ.50 லட்சம் நிதியும் தருகிறேன், என்று கூறினார். அவர் சொன்னதை நான், தமிழக அரசிடம் சொன்னேன், சிறந்த யோசனை என்று கூறிவிட்டு, அதையும் ஏற்க மறுத்தது, அதற்கும் அரசியல் பின்னணி தான் காரணம். இப்படி அவர் பலருக்கு பல உதவிகளை செய்து வந்திருக்கிறார்.

லியோ முத்து, தெரிந்து செய்தது குறைவு, தெரியாமல் அவர் செய்த உதவிகள் பல, அது அத்தனையும் எனக்கு தெரியும். நற்பண்புகள் பொருந்திய மனிதனாக புளோட்டஸ் வாழ்ந்தான், அவர் உயிரிழக்கும்போது அவனை கொல்ல வந்தவனே, இயற்கையைப் பார்த்து, இயற்கையே இந்த உலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதன் மாண்டுவிட்டான், என்பதை தெரியப்படுத்த எழுந்து நில், என்று கூறினான். அதுபோல தான் லியோமுத்துவும், நாம் எப்படி வாழ வேண்டும், என்பதின் உதாரணமாக வாழ்க்கையில் நற்பண்புகள் பொருந்திய சிறந்த மனிதராக வாழ்ந்துக்காட்டினார்” என்று  பேசினார்.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் அரசியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசும்போது, “ நமது நாட்டில் ஆராய்ச்சி மாணாக்கார்கள் அதிக அளவில் உருவாக வேண்டும்… சுற்றுப்புறச்சூழலைப் பாதிக்காத புதிய கண்டுபிடிப்புகள் வேண்டும்…. அந்த துறையில் சாதிக்கவேண்டி சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு சாய் பிரகாஷ் ஊக்கமளித்துவருகிறார்..” என்று பேசினார்.

இந்த நிகழ்வையொட்டி சென்னை சுற்றுப்புறங்களில் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் வசிக்கும்  1300 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன்,  அன்றைய தினம் முழுவதும் அக்குழந்தைகள் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் உணவு உண்டு, விளையாடி மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தனர்.

சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவர்களுக்கு, தங்குமிடம், சேர்க்கை கட்டணத்துடன் முற்றிலும் இலவசமாக நான்கு வருட பொறியியல் படிப்பைப் படிப்பதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. அத்துடன், +2 இல் தவறிய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக அதற்கான மையத்தைக் கட்டும் பொருட்டு மதுராந்தகத்தில் ஒரு ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது.

சாய்ராம் கல்வி அறக்கட்டளை சார்பாக இதுவரை இரண்டரைக் கோடி ரூபாய் அளவில் கல்வி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய ஜன நாயக நாடான இந்தியாவில், ஒவ்வொருவருக்கும் தேவையான  அடிப்படை வசதிகளுடன் கல்வியும் வழங்கும் பொருட்டு ஆண்டுதோறும் அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் பணத்தைச் செலவு செய்கிறது. ஆனாலும், அடிப்படை மற்றும் உயர்கல்வி ஆகியவை இன்னும் ஏராளமான ஏழை மாணவர்களுக்குச் சென்றடையாமல் இருப்பது கண்கூடு. இந்த நிலையில், அரசுடன் தனியாரும் கைகோர்த்துக் கொண்டு செயல்படுவது அவசியமாகிறது. அப்படி இருக்கும் போது, பள்ளிக்கூடம் கட்ட சாய்ராம் அறக்கட்டளை வழங்கிய  நிலத்தை ஏற்காமல் இருப்பது, டிஜிட்டல் நூலகம் அமைக்க வழங்க முன்வந்த 50 லட்சம்  நிதியை ஏற்றுக்கொள்ள மறுப்பது போன்றவை ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாக இருக்கின்றன.

ஜன நாயக நாட்டில், மக்கள் நலனுக்காக ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யும்  நிதி ஒதுக்கீட்டில் தனியார் பங்களிப்பு என்று ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திரட்டுவது காலத்தின் கட்டாயம் என்றால் அதுமிகையல்ல.

முன்னதாக தனது பேச்சினூடே, இரண்டாவது முறை குடியரசு தலைவராக அப்துல் கலாம் வரும் வாய்ப்பைக் கெடுத்ததுடன் , சென்னைப் பல்கலைக்கழகத்தின் வேந்தவராக வரவேண்டும் என்கிற அவரது ஆசையையும்  நிராசையாக்கிவிட்ட அன்றைய தமிழகத்தின் முதல்வரையும் வேதனையுடன் நினைவுபடுத்தினார் தா.பாண்டியன்.