Share

 ‘இசை மகாசமுத்திரம்’ நூல் மற்றும் ஆவணப்படம் வெளியீடு

இசை மகாசமுத்திரம்’ என்று அனைத்து இசைக் கலைஞர்களாலும் போற்றிப் புகழப்படுபவர்,  கர்நாடக சங்கீத ஜாம்பவான் விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகள் ஆவார்.  நாதஸ்வர சக்கரவர்த்திகளான திருவாடுதுறை T.N.ராஜரத்தினம், அவரது சீடர் காருக்குறிச்சி அருணாச்சலம், M.K. தியாகராஜ பாகவதர்,சீர்காழி S.கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் போன்ற பல இசைமேதைகள், விளாத்திகுளம் சுவாமிகளின் இசைப் போராற்றலை கண்டும் கேட்டும் பரவசமடைந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவருக்கும் தனித்தனியே பல குருமார்கள் இருந்தபோதிலும் விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகளையே தங்களது மானசீக குருவாக எண்ணி வாழ்ந்து சாதித்தார்கள்.

 சென்ற தலைமுறைகளிலும் இந்த தலைமுறையிலும் உள்ள இசைமேதைகள் அனைவரும் மனதார ஒப்புக்கொண்ட ஒரே விஷயம், ‘விளாத்திகுளம் சுவாமிகளைப் போல் ‘இராக ஆலாபனை’ செய்யவும் பாடவும் இதுவரை யாரும் பிறக்கவில்லை, அவரது குரலுக்கும் ஈடு இணையில்லை’ என்பதாகும். ‘எப்படியாவது கடுமையான பயிற்சி செய்தால் விளாத்திகுளம் சுவாமிகள் பாடிய அளவில் ஒரு பத்து சதவிகிதம் எட்டிப் பிடிக்கலாம். அவ்வளவுதான்!’ என்று தலைவணங்கி அவரைப் போற்றுகின்றனர்.

சங்கீத உலகமே வணங்கும் ஒப்பற்ற கலைஞன் இசை மகாசமுத்திரம் விளாத்திகுளம் சுவாமிகள் முறைப்படி  எந்த குருவிடமும் சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லை. எந்த இடத்தில் கச்சேரிகள் நடந்தாலும் முதல் ஆளாக அமர்ந்து முழு ஈடுபாட்டுடன் ரசித்து, அதனை கிரகித்துக்கொண்டு தனது அற்புத நினைவாற்றலால் இடைவிடாமல் ‘அசுர சாதகம்’ செய்து தனது தனித்திறனை வளர்த்துக்கொண்டார். இராக ஆலாபனைகளை ஐந்து நாட்கள் வரை இடைவிடாமல் செய்து சாதனை புரிந்துள்ளார். இதனால் ‘ஆலாபனை அரசன்’ என்ற சிறப்பு பெயரையும் பெற்றார்.

சங்கீத சக்கரவர்த்தியான விளாத்திகுளம் சுவாமிகள் பிறப்பிலும் ராஜபரம்பரைதான். காடல்குடி மன்னர் ‘வீரகஞ்செய பாண்டியன்’ வம்சாவழியில் வந்தவர். அதுமட்டுமின்றி ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனின் தாய்வழி சொந்தமாவார்.

பிறப்பிலும் வளர்ப்பிலும் வாழ்ந்த விதத்திலும் சிறப்புப்பெற்ற சுவாமிகள்  76 ஆண்டுகள் இசைக்காகவே வாழ்ந்தவர் என்றே கூறலாம். அத்தகைய மகானது வாழ்க்கைக் குறிப்புகள் ‘இசைமகாசமுத்திரம் விளாத்திகுளம் சுவாமிகள்’ என்ற பெயரில்  நூல் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது.

நல்லப்ப சுவாமிகளின் அபரிமிதமான இசையைக்கேட்டு பிரமித்த N.A.S. சிவகுமார் என்பவர், அந்த மகானின் அருமை பெருமைகளை அனைவரும் அறியவேண்டும் என்ற சீர்மிகுந்த எண்ணத்துடன் இந்த நூலை தொகுத்துள்ளார். இந்த அரிய தொகுப்பில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா), ரசிகமணி T.K.C, வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி, கோவில்பட்டி சிவானந்தம், ஜி.வெங்கடாச்சலம், கவி.சத்திய சாமுவேல். தூத்துக்குடி பி.இசக்கி, ஸ்ரீ V.G. தெய்வேந்திரன்,கு. அழகிரிசாமி, S. நல்லசிவம் பிள்ளை, பா. வேலப்பன், காருகுறிச்சி அருணாசலம் ஆகியோர் சுவாமிகளின் வாழ்வில் நிகழ்ந்த சுவையான சம்பவங்கள், சாதனைகள் பற்றி எழுதிய கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. இவை தவிர பல அரிய புகைப்படங்கள், சுவாமிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் உள்ளன.

இந்த நூல் வெளியீட்டு விழா விளாத்திகுளம் சுவாமிகளின் 128-வது பிறந்த நாளான 24-09-2016 சனிக்கிழமை அன்று T.N. ராஜரத்தினம் கலையரங்கத்தில் நிகழ்ந்தது. மேலும் இந்த அரிய புத்தகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விளாத்திகுளம் சுவாமிகளின் பாடல்களும் ஆலாபனைகளும் அடங்கிய ஆவணப்படமும் வெளியிடப்பட்டது. இது இசைப்பிரியர்களுக்கு மற்றுமொரு வரப்பிரசாதமாகும். இந்த ஆவணப்படத்தை சி.மகேந்திரன் என்பவர் இயக்கியிருக்கிறார்

இசையரசி K.B. சுந்தராம்பாளின் மருமகளும் நீதியரசருமான  K.B.K வாசுகி  புத்தகத்தை வெளியிட நல்லிகுப்புசாமி செட்டியார் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். ஆவணப்படத்தை பிரபல பாடகர் திருச்சி லோகநாதனின் புதலவர் T.L. மகராசன் வெளியிட,பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி G. சிவசிதம்பரம் பெற்றுக்கொண்டார். மேலும் இந்நிகழ்வில் வீரபாண்டிய கட்டபொம்மனின் ஐந்தாம் தலைமுறை வாரிசான V.V.J.S வீமராஜா , காடல்குடி மன்னரின் ஏழாம் தலைமுறை வாரிசான P. பால்ராஜா சுவாமிகளின் மகள் வழிப்பேரன்  சாமித்துரை மற்றும் இயக்குனர் அம்ஷன்குமார், படத்தொகுப்பாளர் B.லெனின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Book and Doc available at:

N.A.S. சிவக்குமார்,

2/286, 14, முத்துச்சாமி நகர்,

பொங்கலூர் போஸ்ட்,

பல்லடம் தாலுக்கா,

திருப்பூர் மாவட்டம்.

PIN – 641 667

கைப்பேசி – 91596 59788