Share

மணல்கயிறு 2 விமர்சனம்

a K.Vijay Anandh review

விசு: ராத்திரி ஓட்டப்பிரிச்சு திருடறதும், பகல்ல ஓட்ட வாங்கிதிருடறதும் சகஜம் தானப்பா

எஸ் வி.சேகர்: நீங்க சொல்றது அரசியல் நான் சொல்றது உண்மை, உண்மைக்கும் அரசியலுக்கும் என்னைக்குமே சம்பந்தம் கிடையாது…

34 வருடங்களுக்கு முன்னாடியே அப்படி, அந்த வசனத்தை இன்னைக்கு வரைக்கும் உண்மைதான்னு நிரூபிச்சிக்கிட்டு இருக்காங்க நம்ம அரசியல்வாதிகள்.

சரி, மணல் கயிறு 2 க்கு வருவோம்.

எப்படி ஒரு எட்டு கண்டிசனைப்போட்டு உமாவைக் கல்யாணம் செய்து செட்டிலானரோ, அவருடைய மகள் பூர்ணா தனக்கு மாப்பிள்ளை பார்க்கும் போதும் 16 கண்டிசன் போடாதது நல்லது தானே! அவரும் அதே போல எண்ணிக்கையில் எட்டு கண்டிசனைப் போட்டு அம்மா ஜெய ஸ்ரீ வயிற்றிலும் அதே நாரதர் நாயுடு விசு வயிற்றிலும் பாலை வார்த்துவிடுகிறார்.

இந்த கலாட்டாக்களுக்கு நடுவில், விளம்பரப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அஸ்வின், ஏதேச்சையாக பூர்ணாவைப் பார்த்து ஒருதலையாகக் காதல்வயப்பட, அதே பூர்ணா போட்டாவை விசு அவரிடம் காட்ட, அடுத்தடுத்து  வெடிக்கப்போவது நகைச்சுவை வெடிகுண்டுகள் என்பதை குறிப்பால் உணர்ந்துகொள்ளவேண்டியது பார்வையாளர்களின் கடமையாகிப்போகிறது.

சுவாமி நாதன், சாம்ஸ் ஆகியோருக்குத் தங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு, இரண்டு பேருமே படம் முழுவதும் வந்து பட்டையைக்கிளப்பியிருக்கிறார்கள்.

அஸ்வின், ஜெகன், ஜார்ஜ் எடுக்கும் விளம்பரப்படங்கள் எந்த டிவிலப்பா வருது, வந்தா அந்த விளம்பரப்படங்களையே ஓட்டிக்கொண்டிருக்கலாம்,  நிகழ்ச்சிகளுக்காகத்தான் சிறிய இடைவேளை கொடுக்கவேண்டும். அந்த அளவிற்கு வெடி வெடி வெடி. தண்ணீர் பாட்டில உல்டா செய்து , நான் உங்கள்ட்ட பொய் சொல்லிட்டேன்… பாய் பிரண்டு வீட்டுக்கு குரூப் ஸ்டடி செய்யப்போறேன்னு சொல்லிட்டு கேர்ள் பிரண்ட கூட்டிட்டு ஈ சி ஆர்ல ரூம்போட்டிருக்கேன் – ஆகட்டும். நாலு கழுதை வயசுல ஏழுகுதிரையின் சக்தி என்கிற மஸ்தி – விளம்பரமாகட்டும் , நகைச்சுவைக்காக அதிகமாக மெனக்கட்டிருக்கிறார்கள், ஒவ்வொரு காட்சியமைப்புக்கும்.

கல்யாணத்துக்கு அப்புறம் நான் செத்துப்போய்ட்டா அவ ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கனும் என்கிற எட்டாவது கண்டிசன் போடுகிற அந்தக்கால உறவுகள் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிற அப்பா எஸ் வி சேகருக்கு, கல்யாணத்துக்கு முன்னாடியே டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்துப் போட்டுக்கொடுக்கனும் என்று எந்த நேரத்திலும் உறவுகளை உதறித்தள்ள தயாராகும் மகள் பூர்ணா., தலைமுறை இடைவெளியை இதற்கு மேலாக யாரும் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிட இயலாது.

முற்றிலும் மாறுபட்ட பூர்ணாவைப்பார்க்க சவரக்கத்தியை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மிகவும் இயல்பாகவே வித்தியாசம் காட்டிவிடும் பூர்ணாவாக மணல் கயிறு 2 மூலம் பார்வையாளர்கள் மனதை வடம் போட்டு இழுக்கிறார். பெரிய ஒப்பனை ஏதும் இல்லையென்றே தோன்றுகிறது. அசட்டு அப்பாவின் துணிச்சல் பெண்ணாக தூள்கிளப்புகிறார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணரும் நொடி முதல், நிரந்தரமாகப் பிரிந்துவிடலாம் என்கிற நொடி  வரை, அதையும் தாண்டி அஸ்வின் உயிரைக்காப்பாற்றத்துடிக்கும் மனிதாபிமானம், அதைத்தொடர்ந்து நடக்கும் டிவிஸ்ட் எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

இந்த மாதிரி  முந்தைய படங்களின் தொடர்ச்சியாக வரும், அதுவும்  34 வருடங்களுக்குப் பிறகு அதே குடும்பத்தின் அடுத்த தலைமுறையில் நடக்கும் கதை என்பதாக பாகம் 2வருவதும். சம்பந்தப்பட்ட விசு, எஸ் வி சேகர் மற்றும் குரியன்கோஸ் ரெங்கா ஆகியோர் 34 வருடங்களுக்குப் பிறகு எடுக்கப்படும் பார்ட் 2 இல் வருவதும் நிச்சயமாக உலகசினிமாவரலாற்றிலேயே புதுமையாகத் தெரிகிறது. திரைப்படங்களை நேசிக்கும் ஒவ்வொருவரும் கொண்டாடப்படவேண்டிய விஷயம் இது. அப்படி ஒரு பாக்கியம் எஸ் வி சேகரின் மகனாக அஸ்வினுக்குக் கிடைத்திருப்பது அரிதிலும் அரிது. மிகவும் இயல்பாக நடித்து அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்.

எந்த ஒரு விஷயமும் திணிக்கப்படாதவாறு இயல்பான காட்சியமைப்புகள் தாம்,  அதே நேரம் பார்வையாளர்கள் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ஊகித்து விடமுடியாதவாறான காட்சித்திணிப்புகள் அபாரம்.  இரவு 11 நிகழ்ச்சிகளில் எல்லாம் இவன் விளம்பரம் ஒளிபரப்பாகுது, அப்படியே கொமட்டது… என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, நிஜமாகவே வாந்தியெடுக்கும் – நல்ல விஷயத்திற்காக, அந்த காட்சி அற்புதம். கதாசிரியர் எஸ் வி சேகர், இயக்குநர் மதன்குமாருக்கு பாராட்டுகள்.

தரணின் இசையில் நா.முத்துக்குமாரின் அத்துனை பாடல்களும் அற்புதம். நல்ல எடிட்டிங், அத்தியப்பன் சிவா.

அவராவே டிஸ்சார்ஜ் ஆகிக்கலாம் என்று டாக்டர் டெல்லி கணேஷ் சொல்லும் போது அப்பல்லோ பிரதாப் ரெட்டி நினைவுக்கு வருவதைத் தவிர்ப்பதற்கில்லை. ஒருவேளை, மணல் கயிறு 2 வை அவருக்கு ஏற்கனவே போட்டுக்காமிச்சீங்களா எஸ் வி சேகர்..? எம் எஸ் பாஸ்கர், நமோ நாராயணா என்று எல்லோருமே சிரிக்க வைக்கிறார்கள்.  ஜெய ஸ்ரீ , சாந்தி கிருஷ்ணாவின் இடத்தினை அற்புதமாக நிரப்பியிருக்கிறார்.

பல சினிமாக்கள் நாடகத்தனமாகவே இருக்கும் போது, நாடக உலகின் ஜாம்பவானின் படத்தில் ஆங்காங்கே சில இடங்களில் நாடகத்தனம் வெளிப்படுவது இயல்புதானே! ஆனால், ரசிக்கமுடிகிறது.

பார்வையாளர்களை எதைக்கட்டித் தியேட்டருக்கு இழுப்பது என்று யாவரும் விழிபிதுங்கிக் கொண்டிருக்கும் வேளையில், எஸ் வி சேகர் அண்ட் கோவின் இந்த மணல் கயிறு ஆக்டோபஸ் போல ரசிகர்களைத் தியேட்டருக்குள் இழுத்துப்போடப்போவது உறுதி!

34 வருடங்களுக்கு முன்பு எஸ் வி சேகர், நாயகனாக நடித்து வெளிவந்த மணல் கயிறு திரைப்படம் மோடி மஸ்தான் என்கிற பெயரில் பலமுறை அரங்கேறிய நாடத்தை தழுவி எடுக்கப்பட்டது என்பதும், இன்று பலராலும் மோடி மஸ்தான் என்று கிண்டல் செய்யப்படும் பாரதப்பிரதமர் மோடி, எஸ் வி சேகரின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.