Share

ரங்கூன் விமர்சனம்

a K.Vijay Anandh review

வேற நாட்டுல இருந்து நம்ம ஊருக்கு வர்றவனும் அகதி, நம்ம நாட்டுல இருந்து போயிட்டு திரும்ப நம்ம நாட்டுக்கே வர்றவனும் அகதி மாதிரி, அவங்களுக்குனு தனியா குடியிருப்புகள் கட்டி , கிட்டத்தட்ட ஒதுக்கிதான் வாழவைத்துப் பார்க்குது இந்த சமூகம். அப்படி ஒரு அகதி மாதிரி என்கிற கெளதம் கார்த்திக்கை, தங்கத்தை சட்டவிரோதமாக வாங்கி விற்கும் குணசீலன் – சித்திக் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார் என்பது தான் ரங்கூன்..

நம்மூரு அய்யனார் மாதிரி, பர்மாவில் ஆங்காங்கே புத்தர் அமர்ந்திருக்கிறார். பர்மாவின் கட்டமைப்புகளில் பணியாற்றியும் சுதந்திரத்திற்காகப் போராடியும் களைத்துப் போன தமிழர்கள், சுதந்திர பர்மாவில் அகதிகளாய்.

அங்கேயிருந்து அம்மா மற்றும் தங்கையுடன் புலம்பெயரும் கெளதம் கார்த்திக். நீரும் நீர் சூழ் இடங்களுமாகக் காட்சியளிக்கும் பர்மா அழகு என்றால், அடுத்த காட்சியிலேயே கெளதமனின் அம்மா சென்னையில் அடி பம்பில் நீர் அடித்துக் கொண்டிருக்கிறார். நம்ம ஊர எவ்வளவு முடியுமோ அவ்வளவு வறட்சியும் குப்பையும் நிறைந்ததாக ஆக்கிவிட்டோம்.

குணசீலனிடம் சின்ன ஒரு வேலைக்குச் சேர்ந்து, அவருடைய நம்பிக்கைக்குப்  பாத்திரமாகி ஒட்டுமொத்த வளாகத்தையே தன் கைக்குள் கொண்டுவரும் கெளதம் கார்த்திக் மிகவும் இயல்பு.  நடாஷாவுடனான காதலும், அது கைகூடுவதும் கூட மிகவும் இயல்பு.

உயிரைக்காப்பாற்றுகிறார், மகளின் தோழியை தொந்திரவு செய்யும் தாதாவை ஸ்க்ரூ டிரைவரால் துளைத்தெடுக்கிறார். சங்க கடன் அடைக்க உதவுகிறார், அப்புறம் ஏன் சியான் , வெங்கட்டை காலை வாருகிறார்..?

அத்தா விக்கும் லல்லு, இரண்டாவது நாயகன் என்று சொல்லுமளவிற்கு நன்றாக நடித்திருக்கிறார்.

டேனியல் , நம்மை ஆச்சிரியத்தில் ஆழ்த்திவிடுகிறார்.

சனா, நடுத்தரக்குடும்ப கொள்ளை அழகாக, இயல்பாக வந்துபோகிறார்.

கடைசி வரை இவர் தான் குட்டையைக் குழப்புகிறாரோ என்று நினைக்க வைத்திருக்கிறது ஸ்ரீ யின் கதாபாத்திரம்

இது, பாக்ஸ் படமா..? ஏ.ஆர்.முருகதாஸ் படமா ? அறிமுக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படமா..?  விஷால் சந்திரசேகர் படமா…? அல்லது ஒளிப்பதிவாளர் அனிஷ் தருண்குமார் படமா..? அல்லது கெளதம் கார்த்திக் படமா..? என்றால்,  கண்ணைத் திறந்து முழுப்படத்தையும் பார்ப்பவர்கள், கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடுவார்கள், இது கெளதம் கார்த்திக் படமென்று.

தனது உடல்மொழி, சண்டைக் காட்சிகள், நடிப்பு மற்றும் சரளமாக சென்னைத்தமிழ் பேசுவது என்று  நடிப்புக் கடல் தாண்டியிருக்கிறார்.

விஷால் சந்திரசேகர் தனது பின்னணி இசையால், ரங்கூன் படத்தில் ரசிகர்களின் கவனத்தையும் மனதையும் ரங்கூரம் இட்டு நிலை நிறுத்தியிருக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் ஆர்.ஹெச்.விக்ரம் இசையில் பாடல்களும் அவை படமாக்கப்பட்ட விதமும் அருமை.

அன்பறிவின் சண்டைக்காட்சிகள் மிகவும் யதார்த்தமான ஆக்ரோஷம், அட்டகாசம்.

அத்தோ குமாரின் வாடிக்கையாளர் போல, ஏ.ஆர்.முருகதாஸ். அவரது திருமணத்திற்குச்  சென்று வாழ்த்துகிறார், இயல்பான பயன்படுத்தல்.

இரண்டாவது பாதி, இன்னும் கொஞ்சம்.நேர்த்தியாகக் கையாளப்பட்டிருந்தால், இன்றைய தலைமுறை படைப்பாளிகளுக்கு ஒரு முன்னோடி படமாக ரங்கூன் இருந்திருக்கும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கும் பட ஆக்கம் – Film Making என்கிற வகையில் ஜெயித்திருக்கிறார் , அறிமுக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.