Share

சத்திரியன் விமர்சனம்

a K.Vijay Anandh review

வன்முறை வேண்டாம் என்று சொல்வதற்காக வர்றவன் போறவனயெல்லாம் வெட்டிச் சாய்ச்சுக்கிட்டு இருக்குமாறு காட்சிகள் கொண்ட தமிழ்சினிமாக்கள் மத்தியில் மிகக்குறைந்த அளவேயான ரத்தக்கறையுடன் ஒரு டான் கதையைச் சொல்லி இறுதியாக வன்முறைவேண்டாம் என்று சொல்லியிருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன், அந்த ஒரு விஷயத்திற்காக எவ்வளவு பாரட்டினாலும் தகும்.

இன்னும் சொல்லப்போனால், இறுதிக்காட்சியில் ஆர்.கே.விஜய்முருகனைக் கொன்று விடாமல் காப்பாற்றியிருப்பதும் பாராட்டத்தக்கது.

ஆனால், ரெண்டே முக்கால் மணி நேரத்திற்குக் கொஞ்சம் குறைவாக ஓடும் படத்தில் ரசிகர்களை அப்படியே படத்துடன் கட்டிப்போடத் தேவையான விஷயங்கள் “பத்தல” அதாவது போதாது என்பது கண்கூடு.

விக்ரம் பிரபு, அப்படியே நீங்க தாத்தாவையும் அப்பாவையும் அசால்ட்டா ஓவர்டேக் செய்துட்டீங்க என்று யாராவது உங்களிடம் சொன்னால், தயவுசெய்து அவர்களைப் போட்டுருங்க, அதாவது மண்டையிலேயே பொளேர்னு ஒன்னு போட்டு  அப்புறப்படுத்திடுங்க, அவய்ங்க தான் உங்க சத்ரு, அவய்ங்கள ஒழிச்சுட்டாலே நீங்க நிசமான சத்திரியன் ஆகிடலாம்.

ஆறடி உயரமும், தீர்க்கமான கண்களும் உங்களுக்கு வரப்பிரசாதம் என்றால் கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பும் உடல்மொழியும் உங்களால் வரவழைக்க முடியாத பிரசாதங்களாக இருக்கின்றன.

இரண்டு மூன்று காட்சிகளில் வரும் செளந்தரராஜா , விக்ரம் பிரபுவை நடிப்பில் ஓவர்டேக் செய்துவிடுகிறார், டம்மியான கதாபாத்திரமாகக் கையாளப்பட்டிருந்தாலும்.

மஞ்சிமா மோகன், அழகாக வந்து அறிவுரை சொல்வதோடு சரி.

ஆர்.கே. விஜய் முருகன், அவரை கலை இயக்குநராகவே ஒழுங்கா வேலை செய்யவிடுங்கப்பா அல்லது கோலி சோடா மாதிரி 100% பொருத்தமான கதாபாத்திரம் இருந்தா மட்டும் நடிக்க வைங்க.

டாக்டராக ஒரு புதுமுக அறிமுகம், கவின், நெல்லைப் பாஷை பேசி வசீகரித்து விடுகிறார். ஐஸ்வர்யா தத்தா, தயாரிப்பாளர் செய்த தண்டச் செலவுகளுக்கு ஒரு உதாரணம்.

முதலில் சொல்லியிருப்பது மாதிரி, வன்முறை அதிகமாக இல்லாவிட்டாலும் நீட்டிமுழக்கப்படும் வசனங்களில் வன்முறை செய்துவிடுகிறார் இயக்குநர், குறிப்பாக அந்த மந்திரி, போனை எடுத்தாப் பேசிக்கிட்டே இருக்கான்.

அரை மணி நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் சமுத்திரம்னா யாருன்னே தெரியாது, அவன் போட்டோவக்கூட ஒருத்தனும் பார்த்தது இல்லைன்னு வசனம். அன்னைக்கு சாயுங்காலமே சமுத்திரத்தை யாரோ போட்டுட்டான்னு சமுத்திரம் போட்டோவோடு செய்தி!

ஆனால், எஸ்.ஆர்.பிரபாகரன் கொஞ்சம் ஜனரஞ்சகமா அல்லது ஜாலியா யோசிச்சுருந்தார்னா, சமுத்திரமா விக்ரம் பிரபுவைத் தொடர வைச்சு ஒரு கலகலப்பான கதகளி ஆடியிருக்கலாம்! மினிஸ்டருக்கும் வில்லனுக்கும் போலீசுக்கும் மட்டுமே தானே தெரியும் ஒரிஜினல் சமுத்திரம் யாருன்னு!

தன்னைத் தொந்திரவு செய்யும் சக கல்லூரி மாணவன் கையில் விக்ரம் பிரபு கத்தியால் கோடுகள் போடும் போது மகிழ்ந்து காதல் வயப்படும் மஞ்சிமா, பின்பு  அந்தக் கத்தியவே எடுக்கக்கூடாதுனு அவருக்கே அறிவுரை சொல்கிறார். அந்தக் கத்தியால் தானம்மா உன் இதயத்திலும் ரோடு – காதல் ரோடு போட்டாரு!

சரி, எல்லாத்தையும் விட்டுர்றேன்னு சொல்லப் போன இடத்தில், காதலி அண்ணனையே குத்திருவேன் கிழிச்சுருவேன்னு கத்தியைக் காட்டும் விக்ரம் பிரபு, முரண்!

ஊருக்கு ஒதுக்குப் புறமான முட்புதர் அல்லது பாழடைந்த ஃபேக்டரியில் ஒரு கொலை. அதனைத் தொடர்ந்து , அவனைச் சுழிக்கனும் இவனைச் சுழிக்கனும், லைன்காட்டு  என்று வார்த்தைகளிலேயே வன்மன். கடைசில  அப்படியெல்லாம் வன்முறையில் இறங்கக் கூடாது என்கிற அறிவுரை, மிரட்டும் பின்னணி இசை, இது எஸ்.ஆர்.பிரபாகரன் படத்தின் டிரேட் மார்க்.

ஐயா , இயக்குநர்களே ஏழரைக்கோடி மக்கள் தொகையில் எங்கோ ஒன்றிரண்டு மூலைகளில் , எவனோ ஒன்றிரண்டு பேரால் நிகழ்த்தப்படும் வன்முறைகள் தவிர , மக்கள் வன்முறைகளைக் கை விட்டு நிறைய நாளாகிவிட்டது, நீங்கள் முதலில் வன்முறைகளை விடுத்து, வேறு கதைக்களங்களுக்கு ரசிகர்களை அழைத்துச் செல்ல முயலுங்கள்!