Share

தமிழ் சினிமாவின் பிரின்ஸ் கெளதம் – ஆர்.கண்ணன்

K.Vijay Anandh

ஆர்.கண்ணன், தனஞ்செயனின் நெருங்கிய நண்பர் – இயக்குநர், இவன் தந்திரன் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். இதே நிகழ்வில் கிரியேட்டிவ் எண்டெர்டெயினர்ஸ் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் என்கிற நிறுவனம் சார்பாக, தனஞ்செயனும் விநியோகஸ்தராகத் தனது இன்னொரு பயணத்திற்கும் தயாராகிவிட்டார்.

விவேக், அருண்ராஜா காமராஜா ஆகியோர் எழுதி எஸ்.எஸ்.தமன் இசையமைத்திருக்கும் இவன் தந்திரன் படத்தின் பாடல்களை கே.பாக்யராஜ் முன்னிலையில் கலைபுலி.எஸ்.தாணு வெளியிட ஆர்யா பெற்றுக்கொண்டார்.

கெளதம் கார்த்திக் – ஸ்ரத்தா ஸ்ரீ  நாத் ஜோடியாக நடிக்க, ஆர்.ஜே.பாலாஜி, பரத் ரெட்டி, ஸ்டண்ட்ஸ் சில்வா நடித்திருக்கும் இந்தப்படத்தில் மூத்த சண்டைப்பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் வில்லனாக நடித்திருக்கிறார்.

” முத்துராமனை விட கார்த்திக்கை அதிகம்பேர் விரும்பினார்கள்… கார்த்திக்கை விட கெளதம் கார்த்திக்கை அதிகம் பேர் விரும்புவார்கள்… சிம்பு, கெளதம் கார்த்திக் எல்லாம் கொஞ்சம் மெனக்கெட்டால்  அதிக உயரம் செல்லலாம்..” என்றார் பாண்டிராஜ்.

“நல்ல படம் எடுத்து தப்பான வெளியீடுகளால் பல படங்கள் நஷ்டமடைந்து கொண்டிருக்கின்றன… இந்தப் படத்தை சினிமா வியாபாரம் நன்கு அறிந்த தனஞ்செயனை வெளியிட வைத்ததிலிருந்தே ஆர்.கண்ணன் தந்திரனாகிவிட்டார்..” என்ற டி.சிவா, ” சினிமாவைக் காப்பாற்றக் குரல் கொடுங்கள். இப்பொழுதும் நீங்கள் சினிமாவுக்காகக் குரல் கொடுக்காமல் இருக்கக் கூடாது..” என்று வேண்டுகோள் விடுத்தார்.

 ” அப்பா எப்பொழுதுமே சூட்டிங்குக்கு லேட்டா வருபவர் என்று பெயரெடுத்துவிட்டார்… ஆனால்,  நான் லேட்டாக வரும் நடிகன் என்று பெயரெடுத்துவிடக்கூடாது என்று சொல்லிவிட்டு முதல் ஆளால சூட்டிங்குக்கு வருவார் கெளதம் கார்த்திக்..” என்றார் ஆர்.ஜே.பாலாஜி.

 “சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக என்னைக் கவர்ந்த இளம் நடிகர் ஆர்யா. எனது படவிழாவில் அவர் அருகே அமர்ந்திருப்பதில் மகிழ்ச்சி..

சினிமாவுக்குள் வந்தபோது யாரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தெரியவில்லை.. இப்பொழுதுதான் எல்லாம் கற்றுக்கொண்டிருக்கிறேன்.. ” என்றார் கெளதம் கார்த்திக். ஒரு கிடார் இசைக்கலைஞராக, தமனுடன் மறுபடியும் பணியாற்றவேண்டும் என்று விழைகிறேன் என்று மேலும் தெரிவித்த கெளதம் கார்த்திக், பாண்டிராஜின் அறிவுரையை ஏற்றுக் கொண்டு இன்னும் சிறப்பாக செயல்படவிருப்பதாக மிகவும் இயல்பாக மேடையில் அறிவித்தார்.

எந்த துறையிலும் , கல்வியறிவு குறைவாக இருப்பவர்கள் கூட அளவுக்கதிகமாகவே சம்பாதிக்கின்றார்கள். ஆனால், இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மிகவும் சொற்பமாகவே சம்பளம் கிடைக்கிறது. இந்தப் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் இவன் தந்திரன்.

” தெலுங்கில் பிரின்ஸ் மகேஷ்பாபு என்றால், தமிழ் சினிமாவின் பிரின்ஸ் கெளதம் கார்த்திக் தான்..” என்றார் ஆர்.கண்ணன்.

இவன் தந்திரன் விழா தான் எங்களுக்குச் சிறப்பு விருந்தினராக முதல் மேடை என்று உறியடி இயக்குநர் விஜய்குமார், ரங்கூன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

இவன் தந்திரன் படத்தை ஆர்.கண்ணனுடன் இணைந்து , திருநெல்வேலி சேரன்மாதேவி வழக்குரைஞர் எம்.கே.ராம்பிரசாத் தயாரித்திருக்கிறார்.