Share

சேரனின் நண்பன் கெளதமி புத்ர சாதகர்ணி

- முத்துலட்சுமி புத்ர விஜய் ஆனந்த்

தெலுங்குத் திரையுலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் மறைந்த என்.டி.ஆரின் மகனும் தற்போதைய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடித்திருக்கும் படம் கெளதமி புத்ர சாதகர்ணி. இது இவருக்கு 100 வது படம்.

இந்தப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கே.எஸ்.ரவிக்குமார், ஜாக்குவார் தங்கம் ஆகியோருடன் எம்.ஜி.ஆர் – என்.டி.ஆர் ஆகியோருடன் பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கும் லதா மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் லதா ஆகியோர் எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆருடன் பணிபுரிந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். இதில் என்.டி.ஆருடன் லதா நடித்த படத்தில் தான் பாலகிருஷ்ணா அறிமுகமானார் என்பதும் , பாலகிருஷ்ணாவின் 100 படத்தை வாழ்த்த லதா வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கான தமிழ் வசனம் எழுதியிருக்கும் மருதபரணி பேசும் போது, ” உலகப்பிரசித்தி பெற்ற பல.மாவீரர்களைக் கொண்ட தேசம் நம்.தேசம்… அப்படி பாரதம் முழுவதும் ஒரே குடையில் ஆண்ட கெளதமி புத்ர சாதகர்ணி என்கிற மாவீரனைப் பற்றிய படம்… உலகில் அம்மா பெயரை இன்ஷியலாகப் போட்டு இன்ஷியலையே அறிமுகப்படுத்தியவர்.. நாட்காட்டியை அறிமுகப்படுத்தியவர்… ராஜ சூய யாகம் நடத்தும் போது தனது விதவைத் தாய்க்கு முதல் மரியாதை கொடுத்து தாயின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றியவர்…

அமராவதி முதல் ஆக்ரா வரை ஒரே நாணயம் அறிமுகப்படுத்தியவர்…

நமது நாட்டின் மாவீரர்களைப் பற்றி நமக்குத் தெரிவதில்லை… இவரைப் பற்றிய குறிப்புகளை லண்டன் மியூசித்தில் இருந்து எடுத்து இயக்கியிருக்கிறார் கிரிஷ்..” என்றார்.

பாலகிருஷ்ணாவின் 102 படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார் என்பது போனஸ் தகவல்.

” தமிழில் வானம் இயக்கினேன்.. அதற்காகத் தமிழ் கற்றுக்கொண்டேன்… அழகான மொழி… நான் ஆராய்ச்சி செய்தபோது சாதகர்ணி , சேர மன்னரின் நெருங்கிய நண்பர் மற்றும் கண்ணகி சிலை வடிக்க கல் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது..” என்றார் இயக்குநர் கிரிஷ். ஜான்சி ராணியின் கதையை கதையை மணிகர்ணிகா என்று ஹிந்தியில் இயக்கிக் கொண்டிருக்கும் கிரிஷ் அடுத்து தமிழுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தமிழில் ஆர்.என்.சி சினிமா சார்பாக வெளியிடுகிறார்கள் ரகுநாத் மற்றும் நரேன்.