Share

தங்க ரதம் விமர்சனம்

a K.Vijay Anandh review

தங்க ரதம் நிலைகொள்ளும் அந்த கிராமம் அழகு. இன்னும் சிமெண்டுகளால்அந்த கிராமத்தின் தெருக்களுக்குக் கல்லறை கட்டிவிடவில்லை. அந்த , ஊர் கவுன்சிலர் மற்றும் சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு முதலில் நன்றி!

கிராமங்களில் விளையும் காய்கறிகளைச் சேகரித்து, டவுன் சந்தைக்குக் கொண்டு செல்லும்  நாயகர்கள் வெற்றி, செளந்திர ராஜா நேர்த்தியான தேர்வு. வழக்கம டெம்போ ஸ்டேண்டில் பார்க்கும் முகங்கள். அதிதியும் , பொத்தி பொத்தி வளர்க்கப்படும் கிராமத்து அழகு தேவதை.

சிறப்பான கதைக்களம், ஒரு அழகான கிராமத்து வாழ்வியல் , அதற்குள் ஒரு அத்புதமான காதல் என்று அமர்க்களப்படுத்திவிடுகிறார் இயக்குநர் பாலமுருகன்.

திண்ணையும் படிகளில் காவியும் சுண்ணாம்பும் அடிக்கப்பட்டிருக்கும் நான் கடவுள் ராஜேந்திறன் , வெற்றி ஆகியோரின் வீடுகள் அழகு.  செளந்தர ராஜாவும், நரேனும் சொந்தமா டெம்போ.ஓட்டி செட்டிலானவர்கள் – முதலாளி என்பதால் புதிதாகக் கட்டின மார்பிள் வீடுகள்.

தங்க ரதம் படத்தில் கதை தான் நாயகன். அந்தக் கதைக்கேற்றக் கதாபாத்திரங்களாக அத்துனை பேரும் வாழ்ந்திருக்கிறார்கள்.

தங்க ரதத்தின் உரிமையாளர் நரேன் படு யதார்த்தமாக படத்தின் முதுகெலும்பாக இருக்கிறார். வெற்றியின் முதலாளி – சித்தப்பா விசுவாசம் , அதிதி மீது அவருக்கு ஏற்படும் காதல்,  எல்லாவற்றுக்கும் மேல் அவரது தந்தையை அவர் பேணும் விதம் மிகவும் இயல்பு.

பிறந்தநாளுக்கு கை நிறையப் பணத்தை அள்ளி கொடுத்து விட்டு, என்னவேணா வாங்கிக்கோ ஆனால், மொபைல் மட்டும் இப்போ வேண்டாம் என்று கல்லூரியில் படிக்கும் தங்கை அதிதியிடம் கூறும் பொறுப்பான அண்ணன், செளந்திர ராஜா.

அண்ணன் அறிவுரைக்குக் கட்டுப்படும் கிராமத்துத் தங்கை அதிதி, ஒரு ரூபாய் நாணயத் தொலைபேசியில் காதலனுடன் பேசும் அழகே அழகு.

என்னடா திடீர்னு பதினாறு வயதினிலே சப்பாணி கேரக்டர் படத்துக்குள்ள என்று தேடிப்பார்த்தால், கொஞ்சம் குனிந்து பார்த்தால் தான் தெரியும் வெள்ளைப் புறா – பாண்டியனை. நிறுத்தி நிதானமாக வெள்ளந்தியாக வார்த்தைகளை முழுவதுமாகப் பேசி முடிப்பது ரசிக்க வைக்கிறது. வெற்றியின் கிளீனர் ராண்டில்யா மட்டும் என்ன..? அவரும் அசத்தியிருக்கிறார்.

குடிக்கு அடிமையானா உன் மனைவிக்கு நீ சொந்தக்காரன் இல்லை என்பதை நான் கடவுள் ராஜேந்திரன் மூலமாக நச்சுனு புரிய வைக்கிறார் இயக்குநர் பாலமுருகன். மதுவினால் கிராமங்கள் எப்படி சிதறிக்கிடக்கின்றன என்றும் காட்டியிருக்கிறார்.

நான் கடவுள் ராஜேந்திரன் ஹீரோ தான் என்று நம்பும் டீக்கடை சுவாமிநாதன் யதார்த்தமாகச் சிரிக்க வைக்கிறார்.

வெற்றி, செளந்திர ராஜா , அதிதி ஆகியோரைச் சுற்றித்தான் கதை நடந்தாலும் அந்த மூன்று கதாபாத்திரங்களையும் நிறையப் பேசவைக்காமல், அதிகமான உணர்ச்சிகளை மிகவும் இயல்பாகக் கொட்ட வைத்திருக்கிறார் இயக்குநர்.

ஆர்.ஜேக்கப்பின் ஒளிப்பதிவும் , டோனி பிரிட்டோவின் பாடல்களுக்கான மற்றும் பின்னணி இசையும் படத்திற்குப் பெரிய பலம்.

வெற்றியின் வீட்டைப் பார்த்து செளந்திரராஜா மன்னிப்புக் கேட்பதுடன் படம் நிறைவடைகிறது.

ஈரானிய இயக்குநர் மஜித் மஜித்தின் படைப்புகள் போல வந்திருக்கும் தங்க ரதம், நம்ம ரதம்.  ரசிகர் கூடித் திரையரங்கில் இந்தத் தேரை இழுத்தால், கோடம்பாக்கம் இன்னும் அற்புதமான ரதங்களைச் செதுக்கும்!