Share

உரு விமர்சனம்

a K.Vijay Anandh review

ஒரு பெண் கூடத் தாயாகும் போது ஒன்று அல்லது இரண்டு கருக்களைச் சுமக்கிறாள். சில விதிவிலக்குகளில் இரண்டுக்கும் மேற்பட்ட கருக்கள். ஆனாலும், அவளால் அந்த சிசுக்களைப் போல தன்னைப் பாவிக்க முடியாது.

ஆனால், படைப்பாளி அல்லது எழுத்தாளன் அப்படி அல்ல, ஒரே நேரத்தில் ஒன்று, பத்து, நூறு அல்ல  சிந்தையில் கருவாகிற எத்தனை ஆயிரம் கதாபாத்திரங்களுக்கும் உருக்கொடுக்க முடியும் என்பது மட்டுமல்ல, அத்தனை கதாபாத்திரங்களாகவும் வாழ்ந்துவிட முடியும்.

அப்படி தான் சிந்தையில் கருவாக்கி, காகிதத்தில் உருவாக்கிய ஒரு கதாபாத்திரமாகவே மாறிப்போகும் எழுத்தாளனின் கதைதான் உரு. சிறந்த தலைப்பிற்கென்று தேசிய விருது கொடுப்பதாக இருந்தால் உரு என்கிற தலைப்பிற்குக் கொடுக்கலாம், அந்த அளவுக்கு கதையைச் சொல்லிவிடும் தலைப்பு, அதேநேரம் படம் வெளியாகும் வரை, கதையை ஊகித்துவிட முடியாதபடி பார்த்துக் கொண்ட தலைப்பு.

வழக்கமாக , Description – Dialogue என்று இரண்டு பகுதிகளாகப் பிரித்து  கதாபாத்திரங்களின் உணர்வுகள் மற்றும் கதைக்கள நிகழ்வுகள் மற்றும் காட்சிகளுக்கான வசனங்கள் என்று எழுதுவார்கள். காட்சிக்குக் காட்சிப் பேசிக்கொண்டே இருக்கும் படங்களில் இடப்புறம் காலியாக இருக்கும். அப்படிப் பேசிக்கொண்டே இருப்பது காட்சி ஊடகமே அதாவது சினிமாவே அல்ல. அளவான வசனங்களுடன் உணர்வுகளும் , கேமரா நகர்வுகள், அரங்க மாற்றங்களும் காட்சிகளாக விவரிக்கப்படுவது தான் சினிமா. உரு, அப்படி ஒரு நல்ல சினிமா.

கலையரசன் இதில் முழுமையான நடிகனாகத் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்.உடல்மொழியில் படத்துக்குப் படம் நல்ல முன்னேற்றம். படத்தில் இவர் எடுக்கும் மூன்று அவதாரங்களும் முத்துக்கள்.

தன்ஷிகா, இவரை நம்பி அல்லது இவரை.மட்டும் மனதில்.வைத்து  இனி கோடம்பாக்கத்தில் கதைகள் எழுதப்படலாம். ஆக்‌ஷன் காட்சிகளில் அட்டகாசப்படுத்திவிடுகிறார்.

மைம் கோபி, டேனியல் அன்ன போப், தமிழ்ச்செல்வி. கார்த்திகா, ஜெயபாலன் என்று ஒவ்வொருவரும் சிறப்பாகத் தங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

என்னடா நடிகர்கள் கொஞ்சம் தானா..? ஆமா, இது தொழில் நுட்பக்கலைஞர்களின் படம், அவர்களுக்கான களம்.

கேப்டன் விக்கி ஆனந்த் தான் என்றாலும் சண்டைக்காட்சி இயக்குநர் பிரபு சந்திரசேகர் இவருடன் படம் முழுக்க இணைந்து காட்சிகளை இயக்கியிருக்கிறார் போலும், 70% காட்சிகளுக்கு மேல் சண்டைப்பயிற்சி இயக்குநர் உடன் உட்கார்ந்து தான் இயக்குநர் காட்சிகளை உருவாக்கியிருக்கவேண்டும். இவர்கள் இருவருக்கும் ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார் தோள் கொடுத்திருக்கிறார் என்றால், மூவரின் உழைப்புக்கும் கிட்டத்தட்ட உயிர் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜோஹன். முக்கியமாக ஒலி வடிமைப்பும் சேர்ப்பும் அட்டகாசம். தமிழ்ச்செல்வி வயிற்றைக்கிழிக்கும் கத்தி, நம் வயிற்றில் இறங்குவது போன்ற பிரமை,.ப்பா. ஷான் லோகேஷ் எடிட்டிங் கச்சிதம்.

உரு, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுமையான விருந்து!