Share

மரகத நாணயம் விமர்சனம்

a K.Vijay Anandh review

தனது தவத்தால் கைப்பற்றிய ஒன்றை வைத்து எதிரிகளை வென்று சாம்ராஜ்யத்தை நிறுவிய பேரரசன், தனது 94 வயதில் செத்துப்போகிறான். தான் பெற்ற சுகம் தன் வாரிசுகள் கூடப் பெறக்கூடாது என்கிற ‘நல்ல சிந்தனையுடன்’ அவனது சீக்ரெட் ஆஃப் சக்ஸஸுடன் சேர்ந்து சமாதியாகின்றான். அது என்ன 94 வயது..? சம கால அரசியல் நையாண்டி ஏதும் செய்திருக்கின்றீர்களா, இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன்..??

கொடுமை என்னவென்றால், செத்தபிறகு கூட சொர்க்கத்துக்கோ நரகத்திற்கோ செல்லாமல் , அந்த சீக்ரெட்டை வேறு யார் அபகரிக்க முயன்றாலும், அவர்களை ஆவியாக வந்து கொன்று போட்டுக் கொண்டிருக்கின்றான். கிட்டத்தட்ட 132 பேர், அந்த சீக்ரெட்டை அபகரிக்க முயன்று செத்துப் போகிறார்கள்.

எப்படியாவது கடன்களை அடைத்துவிட்டு வாழ்க்கையில் செட்டிலாகவேண்டும் என்று துடிக்கும் ஆதி, சின்ன சின்ன கடத்தல்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு, அந்த சீக்ரெட் மரகத நாணயத்தைக் கடத்தி பெரிதாகச் செட்டிலாகிவிட முடிவு செய்கிறார்.

அதற்கு, அந்த மரகத நாணயத்தை அபகரிக்க முயன்று செத்துப் போன 132 பேரில் 4 பேரின் ஆவி துணைக்கு வருகிறது.

ஆவி வந்தால், அதற்கு உடல் வேண்டுமே! மிகச்சரியாக மூன்றாவது காட்சியில் முனீஷ்காந்தையும் அடுத்த சில காட்சிகளில் நிக்கி கல்ராணியையும் சாகடித்து புத்திசாலித்தனமாக படம் முழுவதும் அவர்களைப் பிணமாக, அதாவது ஏற்கனவே செத்துப் போனவர்களின் ஆவிகளின் நடமாடும் கல்லறைகளாகக் கையாண்டு சுவராஸ்யப்படுத்தி விடுகிறார் இயக்குநர் சரவன்.

இந்தப் படத்துக்கு ஆதிதான் ஹீரோன்னு சொன்னா அதை அந்த ஆதியே நம்ப மாட்டார். முனிஷ்காந்த் தான் ஹீரோ! உசிரோடு இருக்கும் போது மெட்ரஃஸ் பாஷை பேசிக்கொண்டும், உடலோடு இருக்கும் போது கோவை பாஷை பேசிக் கொண்டும் மனிதர் பட்டையைக் கிளப்புகிறார்.

தூக்கில் தொங்கிய சில நொடிகளில் முனிஷ்காந்த் & கோ நிக்கி கல்ராணியைத் தூக்கி வந்துவிடுவதால், சரி, மரகத நாணயம் கிடைப்பது வரை ஆதிக்குத் துணையாக ஆவி புகுந்த உடலாக நடித்துவிட்டு, இறுதிகாட்சியில் என் கொடுமைக்காரப் புருஷனை விட்டுட்டு வந்துடுறேன் நீ என்னை ஏற்றுக்கொள்வாயா..? என்று ஒரு காதல் பார்வை பார்ப்பார் என்று நினைத்தால், கண்ணீர் விட வைத்து விடுகிறார், ஆதியையும், நம்மையும்.

ஆவிகள், அட்டகாசகங்கள் என்று  இதெல்லாம் நடக்கின்ற காரியமா  என்று யோசித்து விட ஒரு நொடி கூட கிடைத்து விடாத படி கிச்சு கிச்சு மூட்டுகிறார் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன். இரண்டரை மணி நேரமும் இங்கிட்டு அங்கிட்டு திரும்பிவிடாத படி பார்த்துக்கொள்கிறார்கள்.

எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி, கோட்டா சீனிவாசராவ், பிரமானந்தம்  ஆகியோரை அளவோடு பயன்படுத்தியவர்கள் ஆனந்த்ராஜை வைத்து அட்டகாசப்படுத்தி இருக்கிறார்கள்.

டாஸ்மாக்குல் அலைமோதும் கூட்டத்தைப் பார்த்து , இவய்ங்களும் சீக்கிரம் சாகப் போறவய்ங்கதான் என்று போகிற போக்கில் முனீஷ்காந்த் சொல்லிச் செல்லும் இடத்தில் ஏ.ஆர்.கே.சரவனின் சமூகப்பார்வை விரிகிறது.

வழக்கமான பேய்க்கதைதான் என்றாலும் படம் முழுவதும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த விதத்தில், மரகத நாணயம் நல்ல பொழுதுபோக்குப் படமாகிவிடுகிறது.

மரகத நாணயம், அக்சஸ் பிலிம் பேக்டரி டில்லி பாபுவின் வங்கிக் கணக்கை நிரப்பும்.