Share

5 ஆண்டுகளில் 5 லட்சம் மரங்கள்

சென்னைவாசிகளுக்கு நீண்டநாட்கள் நினைவிலிருக்கும் கலை நிகழ்ச்சியென்றால் அது பொங்கல் விடுமுறையை ஒட்டி.நடத்தப்பட்ட சென்னை சங்கமம் என்கிற கலைநிகழ்ச்சிதான் என்றால் அது மிகையாகாது. அந்த நிகழ்ச்சியின் பின்னணியில்   இருந்தவர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் ராஜ்.

தனது பூமியின்புன்னகை Earthsmiles என்கிற அமைப்புடன் ரோட்டரி இண்டர்நேசனல், கிரடாய், ஒய்ஸ்மென் இண்டர்நேஷனல், எக்ஸ்னோரா, தமிழ்நாடு உழவர் சங்கங்களின் கூட்டமைப்பு, வானகம், ஓசை, சென்னை சமூகநலச்சங்கம், ஐந்திணை, சென்னை டிரக்கிங் கிளப், குட் நியூஸ் தொலைக்காட்சி, பிராண்ட் அவதார், கிளாசிக் இம்ஸ், தமிழ் சேம்பர் ஆஃப் காமர்ஸ், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா, கேட்டலிஸ்ட் பி.ஆர், ஒய்.எம்.சி.ஏ, தமிழ் வேளாண்மை வணிகம் தொழில் சேவை கூட்டமைப்பு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட அமைப்புகளுடன் இணைந்து மீண்டும் பசுமையான சென்னை என்கிற திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளார்.

இந்த முன்னெடுப்பு மூலமாக அடுத்த 5 வருடங்களில் 5 லட்சம்  மரங்கள் நடுவதற்குத் திட்டமிட்டு இருக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய கஸ்பர், “ சென்னையைப் புரட்டிப் போட்ட வர்தா புயலால் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட மரங்கள் விழுந்துவிட்டன. அதன் பலனை இந்தக் கோடையில் நாம் அனுபவித்தோம். விழுந்த மரங்கள் பெரும்பாலும் அழகுக்காக நடப்பட்ட நமது மண்ணுக்கு ஒவ்வாத மரங்கள் ஆகையால், வேம்பு. அரசு, புங்கை , பூவரசு, நாவல், நாகலிங்கம், பனை, மா, நெல்லி போன்ற நமது நாட்டு மரங்கள் நடப்போகிறோம்…

ஏற்கனவே மரங்கள் நடந்ததாக அறிவித்தவர்கள் சிறிய கன்றுகளை நட்டு, அதில் 90 கன்றுகளில் வளராமலேயே கருகிவிட்டன. அதனைக் கருத்தில் கொண்டு ,  நான்கரை அடி வளர்ந்த மரக்கன்றுகளை, முறையாக பாத்தி வெட்டி, இயற்கை உரங்கள் போட்டு நடவுள்ளோம்…

அவற்றைத் தொடர்ந்து பரமாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறோம்…” என்றார்.

“ கிறுஸ்துவ நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் சார்பாக, ஆகஸ்டு மாதம் ஒரே நாளில் 1 லட்சம் மரங்கள் நடுவதற்குத் திட்டமிட்டிருக்கிறோம்..” என்றார் பிஜு தாமஸ்.

இந்த நிகழ்ச்சியில், மேற்குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மரங்கள் நடுவதற்கான அவசியத்தை விளக்கும் கருத்தரங்குகள்  நடத்தவும்.திட்டமிட்டிருக்கிறார்கள்.