Share

வெற்றித் தொழிலதிபர் சி.கே.குமாரவேல்

K.Vijay Anandh

பசித்தவனுக்கு மீன் துண்டுகளைக் கொடுப்பதை விட ,தூண்டிலைக் கொடு என்று சொல்லுவார்கள்   யாருடைய பசியையும் தொடர்ந்து நம்மால் ஆற்றிக்கொண்டிருக்க முடியாது. ஆனால், ஒரு தொழிலைக் கற்றுக் கொடுத்துவிட்டால் அல்லது வேலைவாய்ப்புகளை உருவாக்கிவிட்டால், அவர்களின் மனித ஆற்றல்களையும் பயன்படுத்திக் கொள்ள முடியும், அதில் அவர்கள் சுயமாகவோ அல்லது வேலைபார்த்தோ வருமானம் ஈட்டிக் கொண்டோ அவர்களது வாழ்க்கையில் மேம்பட முடியும்.

ஆதிமனிதன்   வேட்டையாடுவதிலிருந்து விலகி, என்றைக்கு விவசாயம் என்கிற தொழிலைக் கைக்கொண்டானோ அன்றைய தினம் மனித குலத்திற்கு ஒரு பொன்னான நாளாக அமைந்துவிட்டது.

முதலில், விவசாயம் சம்பந்தப் பட்ட தொழில்கள், அதனைத் தொடர்ந்து சார்ந்த தொழில்கள் என்று உணவை மட்டுமே தேட ஆரம்பித்த மனிதன், பின் உடை, உறையுள் சார்ந்த தொழில்கள் என்று தனக்குத் தேவையானவைகளை உருவாக்கப் பல தொழில்களை உருவாக்கினான்.

தன்னிறைவு அடைந்தது போக மிகுதியை வியாபாரத்திற்குள் கொண்டுவந்தான். அரிசி கொடுத்து பருத்தி என்கிற பண்டமாற்று மாறி ,  பரிணாம வளர்ச்சியடைந்து இன்று பணம்,  அதைக் கொடுத்து விட்டால் குண்டூசி முதல் விமானம் வரை வாங்க முடிகிறது.

இந்த நேரத்தில், உடல் மற்றும் அழகு பராமரிப்பும் மனிதனுக்கு இன்றியமையாத தேவைகள் ஆகிவிட்டன.

சிகையலங்காரத்திற்கென்றே ஆரம்பிக்கப்பட்ட அந்தத் துறை இன்று நகம் முதல் முழு உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் சிகிச்சைகள் என்று Salon to Spa ஆக மாறியிருக்கின்றன.

அந்த வகையில் , சி.கே.குமாரவேலால் ஆரம்பிக்கப்பட்ட நேச்சுரல்ஸ் சலூன் இன்று நாடு முழுவதும் 550 கிளைகள் பரப்பி , இதுவரை 300 பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கியிருப்பதுடன் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பினையும் வழங்கியிருக்கிறது.

2018 க்குள் 1000 கிளைகள் , 3000 மகளிர் தொழில் முனைவோர் மற்றும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் என்கிற கனவுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார் சி.கே.குமாரவேல்.

ஆலமரமும் ஒரு சிறிய விதைக்குள் இருந்து தானே கிளம்புகிறது. அதுபோல, 16 ஆண்டுகளுக்கு முன் ஒரே ஒரு சலூனாக ஆரம்பிக்கப் பட்ட நேச்சுரல்ஸ் இன்று தேசம் முழுவதும் கிளைபரப்பி , தொழில் முனைவோர் –  தொழிலாளர் – வாடிக்கையாளர் என்று தினம் தோறும் பல லட்சம் பெண்களுக்குத் தன்னம்பிக்கை அளித்து வருகிறது என்றால் அது மிகையல்ல.

ஒரு புள்ளியை கோலமாக்கிப் பின் சாம்ராஜ்யமாக்கிய சி.கே.குமாரவேலைப் பற்றி ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளும் விதமாக பிரபல எழுத்தாளர் பிரகாஷ் ஐயர் தனது யூ கேன் டு என்கிற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

வணிகம், மேலாண்மை, தலைமை, இயக்கம் என்று மும்பை  இந்தியன்ஸ் வரை கோலோச்சிக் கொண்டிருக்கும் பிரகாஷ் ஐயர் , இந்தியாவின் சிறந்த எழுத்தாளராகவும் அறியப்படுபவர்.

இந்தியா முழுவதும் தான் சந்தித்த தனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய 20 தொழில் முனைவோர்களைச் சந்தித்து, அவர்களது சாம்ராஜ்யத்தை உருவாக்கிய அனுபவங்கள், இடர்பாடுகள், வெற்றிகள், பெற்ற வெற்றியைத் தக்கவைக்கும் வித்தைகள்  ஆகியவற்றைக் கேட்டறிந்து விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

You Can Do புத்தகத்தை இயக்குநர் பாலாஜி மோகன் வெளியிட்டார். புத்தக வெளியீட்டின் போது, இளம் தொழில் முனைவோர் மற்றும் தொழில் முனைவோர் ஆக முயல்பவர்கள் என்று சி.கே.குமாரவேலுடன் கலந்துரையாடி, தன்னம்பிக்கைத் தகவல்களைப் பெற்றுச் சென்றனர் என்றால் அது மிகையாகாது.

பசிக்கு ரொட்டியோ மீனோ கொடுப்பதை விட, ரொட்டி செய்யவோ மீன் பிடிக்கவோ கற்றுக் கொடுங்கள், இந்தியத் தொழில் முனைவோர்  உலகையாளட்டும்!