Share

ஆவணம் பார்த்து ஆவன செய்த தனுஷ்

K.விஜய் ஆனந்த

பத்திரிக்கையாளர் கவிதா தயாரித்து இன்னொரு பத்திரிக்கையாளர் ராஜீவ் காந்தி இயக்கி ஆவணப்படுத்திய படம் கொலை விளையும் நிலம்.

சமீபத்தில் இதன் திரையிடல் நிகழ்ந்தது. இயக்குநர் சுப்பிரமணிய சிவா , விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தனுஷுடன் வி.ஐ.பி 2 பட வேலைகளிலும் , இயக்குநர் சங்கத் தேர்தலிலும் பரபரப்பாக இருந்த நிலையிலும் சுப்பிரமணிய சிவா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. “ நம்ம பட விழாவுக்குக் கூட வராமல், அந்த திரையிடலுக்குச் சென்று விட்டீர்களே, அப்படியென்னப்பா அந்தப்படத்தின் சிறப்பு..?” என்று உரிமையோடு சிவாவை தனுஷ் கோபித்துக் கொள்ள. பதிலாக அந்த ஆவணப்படத்தையேப் போட்டுக் காட்டியிருக்கிறார் சிவா.

தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் காவிரி உள்ளிட்ட ஆறுகள், மற்றவர்கள் பசியாற கடன் வாங்கி விவசாயம் செய்தும் பயிர் கருகியதால் தற்கொலை செய்து கொள்ளும் டெல்டா விவசாயிகள், தலைவனை இழந்து நிற்கதியாய் நிற்கும் குடும்பங்கள், நடந்தது ஏதும் அறிய முடியாத நிலையில் அவர்களின்  அப்பாவிக் குழந்தைகள் என்று அந்த ஆவணப்படம் விரிய, தனுஷ் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில்,  பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்.

சிவா, ராஜீவ் காந்தி மற்றும் தனுஷ் ரசிகர் மன்றத்தினர் ஆகியோர் உதவியுடன், உடனடியாக 125  விவசாயக் குடும்பங்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தலா 50 ஆயிரம் கொடுத்திருக்கிறார் தனுஷ். இந்த நிகழ்ச்சியில் தனுஷின் அம்மா விஜயலட்சுமி, அப்பா கஸ்தூரி ராஜா, மனைவி ஐஸ்வர்யா ஆகியோரும்  தனுஷுடன் இணைந்து விவசாயிகளுக்கு  நிதியுதவி அளித்தனர்.