Share

ஆக்கம் விமர்சனம்

a K.Vijay Anandh review

இழவுக்கும் ஆடுகிறான், இடும்பனுக்கும் ஆடுகிறான் நம்ம ஹீரோ சொக்கு என்கிற  சதீஷ் ராவன்.இரண்டு ஆட்டங்களும் அருமை.

குறிப்பாக வட சென்னைப் பகுதிகளில்  போடும் இழவுகுத்துக்கள் இழவு கூத்துக்கள் ஆக வழக்கில் இருந்திருக்க வேண்டும். அதாவது, இழவு நாயகனின் வாழ்க்கை வரலாற்றைப் பாவைக் கூத்து போன்று. அந்த நடனம், ஒரு கதை சொல்லல் போலத்தான் இருக்கிறது. இன்றைய மரண கானாக்களைக் கூர்ந்து கவனிக்கும் போது அது புரியும்.

ஏன், இழவு கூத்தைப் பற்றி இவ்வளவு நேரம் .? அட படத்தின் முதல் காட்சியில் வரும் மிக நீளமான அந்தக் காட்சி ஆக்கம் படத்தினை உலகப்பட ரேஞ்சுக்கு ஆக்கிவிடுகிறது.

ஆத்தா சரியில்லையென்றால் , பிள்ளை எப்படி உருப்படும்..? சின்னச்சின்ன தவறுகள் செய்யும் மகனை அட நீ சின்னதாத் தவறு செஞ்சா குற்றம்பா… என்று பெரிய தவறு தூண்டி விடுகிறது. சேட்டுவிடம் சென்று சேர்த்தும் விடுகிறது. அங்கே ” இவன் பொறப்பு எப்படினு உனக்குத் தெரியும்..” எனும் போது , அந்த ஆத்தாவை போடிங்…. என்று சொல்லத்தோன்றுகிறது.

இன்னொரு பக்கம் நல்ல அம்மா வடிவுக்கரசிக்குப் பிறந்த ரஞ்சித், வழி தவறிப் போய்விட்டாலும், தாமதமாகவாவது நல்வழிக்கு வருவதும், சோக்குவை திசைதிருப்ப முயன்று தோற்றுப்போவதிலுமாக, மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.

டெல்னா டேவிஸ், கல்வியறிவு இல்லாத வட சென்னைப் பெண்ணாக ஏமாந்து காட்டி வாழ்ந்திருக்கிறார். உன்னை மாதிரி எம்புள்ளைய ஆக்கிவிட மாட்டேன்,நல்லாப் படிக்க வைப்பேன் என்று கிளம்பும் போது நெகிழச் செய்து விடுகிறார்.

மலையூர் மம்பட்டியான் படத்திலிருந்து பயனடுத்தப்பட்டு வரும் அதே சூத்திரத்தைச் சிறுவன் வாயிலாகப் பயன்படுத்தியிருப்பதைத் தவிர்த்துப் புதிதாக யோசித்திருக்கலாம்!

ஆடி காரில் வந்து குப்பைப் போட்டுச் செல்வது போல, நாயகனையும் அவன் சார்ந்தவர்களையும் போட்டுவிட்டுப் போகும் சேட்டு – செம சிந்தனை.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவும் ஒளிப்பதிவாளர் ஜி.ஏ.சிவசுந்தரும்   பட-   ஆக்கத்தில் அசத்தியிருக்கிறார்கள்.

இ.செல்வம், இ.ராஜா ஆகியோருக்கு இந்தக் கதையைப் புரிந்து கொண்டு படமாக்க அசாத்தியத் துணிச்சல் இருந்திருக்க வேண்டும்.

ஒட்டு மொத்த  வட சென்னை இளசுகள் மூலம் , கல்வி மறுக்கப்படும் ஒவ்வொரு இளசுகளையும் நினைத்துப் பரிதாபப்பட வைத்து விட்டார் அறிமுக இயக்குநர் வேலுதாஸ் ஞானசம்பந்தன்.

ஆக்கம், ஆக்கப்பூர்வமான சமூகத்தை உருவாக்க ஒரு அறைகூவல்!