Share

தயாரிப்பாளர்களின் நீண்டநல் வரிசை

பாட்டுடைத்தலைவனுக்கு நல்ல வாடையாகவும், தலைவிக்கோ நீண்ட வாடையாகவும் அமைந்த நெடுநல்வாடையை எழுதியவர் நக்கீரர்.

தலைவியின் உணர்வையொத்த 50 மாணவ தயாரிப்பாளர்கள் என்கிற நீண்ட வரிசையுடன் களமிறங்கி, பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் படத்திற்கு “நெடுநல்வாடை” யை விடப் பொருத்தமான தலைப்பு இருக்கவும் முடியுமோ!

படத்தை எழுதி இயக்கும் செல்வக்கண்ணன் கூறும் போது, “ மாறிக்கொண்டு வரும் இந்த நவீன நாகரீக யுகத்தில், நம் மண்சார்ந்த, நம் கலாச்சாரத்தைப் பேசுகிற திரைப்படங்கள் வருவது அரிதாகி விட்டது. ஆனால், அப்படி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் தனி வரவேற்பு உண்டு.

அப்படியான ஒரு கிராமத்து வாழ்வியலை, ஒரு தாத்தா – பேரன் பாசத்தை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம்தான் “நெடுநல்வாடை”. நெல்லை மாவட்டத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் உண்மைக் கதை இது.

மையப்பாத்திரத்தில், 70 வயது விவசாயியாக ‘பூ ராமு’ நடிக்கிறார். அவருடன் இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி, ஐந்துகோவிலான், செந்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கிழக்குச் சீமையிலே, மாயாண்டி குடும்பத்தார், தென்மேற்குப் பருவக்காற்று போன்ற கிராமத்துப் படங்களின் வரிசையில் இந்தப்படமும் நிச்சயம் இடம்பெறும்…”என்றார்.

நெல்லை, சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த  செல்வக்கண்ணனின் நண்பர்களுமாக 50 பேர் இணைந்து தயாரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.