Share

தரமணி விமர்சனம்

a K.Vijay Anandh review 

நமது தவறுகள், நம்மைச் சுற்றியிருக்கும் நல்லவர்கள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. இணையாக இன்னொன்று நடக்கும் போது தான், இனியதெது இன்னாவெது என்பது புலனாகிறது.

தரமணி, உலகத்திரைப்படங்களையொத்த உன்னத தமிழ் சினிமா. சொல்லப்போனால் தரமணியும் நடித்திருக்கிறது, கான்கிரீட் மேக் அப்புகள் தாங்கி. படப்பிடிப்பு முடிந்தாலும் ஒப்பனை களைய முடியாதது நம் மனம் ஒத்துக்கொள்ள முடியாததாகிப் போகிறது.

ஆன்ட்ரியா , அந்தக் கதாபாத்திரத்திற்கான அட்டகாசத் தேர்வு. எங்காவதுத் தன் காதலைக் கொட்ட இடம் தேடிக் கொண்டிருந்தவருக்குக் கிடைக்கிறார் வசந்த் ரவி. வழிப்போக்கன் தான் என்றாலும், வடிகால்கள் ஆகிப்போகிறார்கள் இருவரும். ரவிக்குள் , ராம்.தெரிகிறார் பெரும்பாலான காட்சிகளில். குறிப்பாக , இரண்டாவது பாதியில் சரக்கடித்துவிட்டு  அழகம்பெருமாளுடன் அக்கப் போர் செய்யும் காட்சிகளில், அட , அதுக்கு ராமிற்குச் சரக்கடிக்கத் தெரியவேண்டுமென்பதில்லை, இயக்கம் – நடிப்பு என்பது என்ன சரக்கு அடித்த மாதிரி நடிக்கச் சொல்லிக் கொடுப்பதும் – சரக்கு அடித்துவிட்டுப் பேசுவது போல நடிப்பதும் தானே! இருவரும் , இயல்பாக ஜொலிக்கிறார்கள்.

இன்னொரு அப்பா கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் ஏட்ரியன்,இதுதான் வாழ்க்கை என்கிற மகிழ்ச்சியில் ஆன்ட்ரியா. எதுவும் நிரந்தரம் இல்லையே எம் குலப்பெண்களுக்கு, அது நம் மீனவப்பெண்களானாலும், பெருநிறுவன மேலதிகாரியானாலும்.

தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து 10 வது வருடத்தில் நடிக்கவந்திருக்கிறார் ஜே.எஸ்.கே. பத்து பதினைந்து நிமிடங்களில் பட்டையைக் கிளப்பி விடுகிறார். அழகம்பெருமாளை இயல்பாக நடிக்க வைத்திருக்கிறார்கள்.

அழகர் சாமியின் குதிரைக்கு அப்புறம் எங்கய்யா போயிட்டாரு இந்தாளு என்று கேட்கத் தோன்றிய ஒளிப்பதிவு, தேனி ஈஸ்வர் ,தரமணியில் அவரின் ஒளிப்பதிவு வேற லெவல்.

யுவன் ஷங்கர் ராஜா, இசையாளுமை செய்திருக்கிறார். பாடல்களிலும் பின்னணி இசையிலும் உச்சக்கட்ட நேர்த்தி.

நா.முத்துக்குமார்- யுவன் – ராம் சேர்ந்தால் என்ன நடந்திருக்க வேண்டுமோ, அது நன்றாகவே நடந்திருக்கிறது.

எல்லா மதப்பெண்களுமே ஒரு வகையில் ஆணாதிக்கச் சமூகத்தில் சீரழிந்து போகிறார்கள் என்பதைத் தைரியமாகச் சொல்லியிருக்கிறார் ராம். திரைச்சீலைக்கு அந்தப் பக்கம் இருந்து கொண்டு தான் ஒரு ஆணுடன் பேச வேண்டும் என்கிற நிலையில் இஸ்லாமியப் பெண், உச்சக்கட்ட அடிமைத்தனத்தை அசால்ட்டாகச் சொல்லிச் செல்வதில் ராம் தனித்து நிற்கிறார்.

அவார்ட் சினிமா ஸ்பெஷிலிஸ்ட் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே வுக்கு வணிக சினிமாவும் வசமாகும் என்பதை நிரூபிக்கப் போகிறது, தரமணி.