Share

குரங்கு பொம்மை விமர்சனம்

a K.Vijay Anandh review

நான் ஒரு கதை சொல்லவா என்று விஜய்சேதுபதி ஆரம்பிக்கும் போது, மாதவன் மட்டுமல்ல அரங்கில் அமர்ந்திருக்கும் ரசிகர்களுக்கும் சுவராஸ்யம் தொற்றிக்கொள்கிறது. விக்ரம் வேதாவின் வெற்றிக்கு அந்தக் கதை சொல்லலும் ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல!

குரங்கு பொம்மைக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்..? இதிலும் கதை சொல்கிறார், பாரதிராஜா.என் இனிய தமிழ் மக்களே … என்று தனது இயக்கத்தில் உருவாகும் படங்களில் கதை சொல்லிய அந்தக் கணீர்க்குரலோன், குரங்கு பொம்மையிலும் கதை சொல்கிறார். அந்தக் கதையில் கணீர்க்குரலாக இருக்காது, கொஞ்சம் கரகரத்த குரலாக, உயிர்ப்பயம் கண்களில் தெரிய நம்மையும் அழ வைத்துவிடும் குரலாக, ப்பா… இமயம் என்கிற பட்டம் கூட இவர் முன் ஒரு சிறு குன்றாகிப் போய்விடுகிறது.

இன்னொரு சிறப்பான நடிகர் என்று அறியப்படும் குமரவேல்,  தன் கையால் சாகாப்போகும் பாரதிராஜாவைப் பார்த்து அப்படியே வெலவெலத்து உட்கார்ந்திருப்பார்.  குமரவேலும் குறைவில்லாம செய்திருக்கிறார், அந்தக் கொலையை மட்டுமல்ல, நடிப்பையும்.

காலையில் அணியும் சீருடையைக் கழட்டுவதற்குள்ளாக, அப்படி ஒரு பரபர பயணம். விதார்த், நல்ல கதையா அப்படினா விதார்த்துக்குப் போனைப் போடுவோம் என்கிற நமிக்கையை தொடர்ந்து விதைத்துக் கொண்டுவருகிறார்.  குரங்கு பொம்மையை வைத்து அசால்ட்டாக விளையாடி அசத்தியிருக்கிறார்.

டெல்னா டேவிஸ், வறுமைச்சூழலில் வரும்  நாயகியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். படுக்கையில் கிடந்தாலும் பாலா சிங் , மனதில் பதிந்து விடுகிறார்.

அட., யார்ரா அவன்,  பேண்டக் கழட்டுறான் அதுவும் நடு ரோட்டுல, அவனா இருப்பானோ என்று பார்த்தால் , இவனை மாதிரி உண்டா என்று ரசிகர்களின் இதயம் நுழைந்து விடுகிறார், கல்கி ராஜா.

அக்னீஷ் லோக் நாத்தின் இசையும் , என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவும் மிகவும் இயல்பாக படத்துடன் ஒன்ற வைத்துவிடுகிறது.

இதுபோன்ற படங்கள் தாம் தமிழ் சினிமாவை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கின்றன. தவிர, குரங்கு பொம்மை போன்ற யதார்த்த சினிமாக்களைப் படைப்பதற்கு ஒரு தில் வேண்டும், நித்திலனுக்கு அந்த தில் இருந்து படைப்பாளி சமூகத்தைக் காப்பாற்றியிருக்கிறார்.

அட,படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில்  இன்னொருத்தர் இருக்காரே, இரண்டு மணி நேர சினிமா விழாக்களிலேயே நான்கு வார்த்தை தான் பேசுவார். இதில், தன் கண் முன் பரிமாறப்பட்டுக் கொள்ளும் கோடிக்கணக்கான பணத்தை ஒரு பொருட்டாகவே நினைக்காமல்  என் நண்பன் எங்கடா..? என்று கேட்கும் போது, நெகிழச் செய்து விடுகிறார் , பி.எல்.தேனப்பன்.

குரங்கு பொம்மைக்கு மைசிக்ஸர்.காம் ரேட்டிங் 9.5/10