Share

நண்டுகளோட நாட்டில் ஓரிடவேளா விமர்சனம்

-Naveen Ganesh

நிவின் பாலியின் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் “நண்டுகளோட நாட்டில் ஓரிடவேளா”. இன்றைக்கு எட்டில் ஒரு பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின்  ஒரு ஆய்வு கூறுகிறது. இப்படத்திலும் ஷீலா சாக்கோ என்ற கல்லூரி பேராசிரியைக்கு தனக்கு புற்றுநோய் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகின்றது. தனது கணவரிடம் இதனை கூறும் போது அவரால் அந்த நிலைமையை கற்பனை செய்தும் பார்க்க இயலவில்லை. லண்டனில் பணிபுரியும் தனது மகனை இந்தியா வரவைக்கிறார் ஷீலா. தனக்கு திருமணம் செய்யும் பொருட்டே தன்னை தனது தாய் அழைத்ததாக கருதும் குரியன் இங்கு வந்த பின்னர் தனது தாயின் நிலைமையை அறிந்து கவலையுறுகிறார்.

தனது குடும்பத்தினரின் அன்பாலும் கவனிப்பாலும் ஷீலா புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தாரா இல்லையா என்பதை பின் கதை விவரிக்கிறது. காலம் காலமாக புற்று நோயை வைத்து அதனை sentiment மற்றும் அழுகாட்சிகளுக்காகவே இயக்குனர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் இப்படத்தின் இயக்குனர் அல்டாப் சலீம் இக்கதையை அவ்வளவு நேர்மறையான அணுகுமுறையுடனும் மெல்லிய நகைச்சுவையுடனும் திரைக்கதையை அமைத்து நம் உள்ளம் கவர்கிறார்.

தான் இப்படத்தின் தயாரிப்பாளர் என்ற போதும் ஒரு பாத்திரம் கலைஞர் போன்றே தன்னை நிலைநிறுத்திக் கொண்டு படத்திற்கு தேவையில்லாத மிகைப்படுத்தும் காட்சிகளை தவிர்தமைக்காகவே நிவின் பாலியை பாராட்டலாம். ஷீலாவாக சாந்தி கிருஷ்ணா தனது தலைமுடியை தியாகம் செய்து கீமோ என்ற அரக்கனுடன் புன்னகையுடன் போராடும் கதாபாத்திரத்துடன் பொருந்திப்போகிறார். அவரின் கணவரான லால், நிவினின் காதலி ஐஸ்வர்யா லக்ஷ்மி, மருத்துவராக சாய்ஜி குரூப் மற்றும் சிறிய பாத்திரங்களில் தோன்றும் அனைவரும் தங்களின் பங்களிப்பை நிறைவாக வழங்கியுள்ளனர். ஜஸ்டின் வர்கீசின் இசையும், முகேஷ் முரளிதரனின் ஒளிப்பதிவும் படத்தின் தரத்தை பெரிதும் உயர்த்துகின்றன.

மொத்தத்தில் புற்று நோய் நம்மை வெல்லாமல் இருக்க நமது மனத்திடமும், நேர்மறையான அணுகுமுறையும், நம்மை சுற்றி இருப்பவர்களின் அன்பும் பெரிதும் அவசியம் என்பதை நண்டுகளோட நாட்டில் ஓரிடவேளா திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது.

 

Leave a Comment