ஒரு கனவு-ரொமன்ஸ்-பேராசை-சமூக நோக்கு ஆகியவை கலந்த சிறுகதை. திரைப்பட இயக்குனராக முயற்சி செய்து கொண்டிருக்கும் நான் எழுதிய சிறுகதைகளுள் அஞ்சுவும் ஒன்று. படித்து விட்டுப் புன்னகையுங்கள், பிடித்திருந்தால் நாண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.! – விஜய் ஆனந்த்.K
சூரியன் உதிக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் ஒரு அதிகாலையின் ஆரம்பப்பொழுது அதாவது 4 மணி 30 – 35 நிமிடம். கடல் அலைகளின் சீற்றம் மீன்பிடித்துவிட்டு கரைக்குத்திரும்பும் படகுகளின் கூட்டம்.கிழக்குக்கடற்கரை ஓரத்தில் இருக்கும் ஒரு அழகிய மாளிகை. கதாநாயகன் இராஜசேகரன் தன் செல்லமனைவியுடன் இன்னும் கலவியின்பம் துயித்துக்கொண்டிருக்கிறான்.
”ம்ம்ம்….விடுங்க…” மொபைலில் நேரம் பார்த்து அதிர்ந்த அவன் மனைவி தன் மேல் புரண்டுபடுக்க எத்தனித்தவனை அப்படியே தள்ளிவிட்டு விட்டு போர்வையுடன் எழுந்து “இப்படி தினமும் ஏர்லி மார்னிங் நாலரை மணிவரை தூங்காம இருந்தா உடம்பு என்னத்துக்காகிறது…
” அழகான பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கிட்டு கொறட்ட விட்டுத்தூங்கினாதான் செல்லம் தப்பு..” என்று முணகிக்கொண்டே அவளை பிடித்து இழுக்க முயன்ற இராஜசேகரனின் கையை உதறிவிட்டு “அப்புறம் ஆபிஸுக்குப்போனா தூக்கம் தூக்கமா வருது செல்லம்ன்னு போன்மேல போன்பண்ணி என்ன பகலயும் தூங்க விடாம பண்றது….ம்ம்ம்… நான் என் ரூமுக்குப்போறேன்…குட் நைட்…” என்றவறு அவள் சென்றுவிடுகிறாள்.
Like mysixer.com on FB for more such interesting posts and unlimited Tamil Cinema Updates
”குட் நைட்டா…ஹ்ஹிக்…குட் மார்னிங்…” என்று முனகிக்கொண்டே தூங்கிவிடும் இராஜசேகரன்.
சூரியன் நன்றாக உதித்துவிடுகிறது… இராஜசேகரனின் மனைவி மகாலட்சுமி மாதிரி கையில் ஒரு காப்பி டம்ளருடன் உள்ளே நுழைந்து அவனை மெதுவாக எழுப்புகிறாள்.
“என்னங்க… மணி எட்டாகுதுங்க… எழுந்திருங்க…” அப்படியே அவள் முகத்தில் விழிக்கின்றான் இராஜசேகரன். அவளிடமிருந்து காபியை வாங்கி அருந்தியவாறே., “மகாலட்சுமி முகத்தில முழிக்கிறத மத்தவங்களெல்லாம் கேள்விதான் பட்டுருப்பாங்க…” ஒரு மடக்கு குடித்து விட்டு, ”ஆனா நாந்தான் தினமும் மகாலட்சுமி முகத்திலேயே முழிக்கிறேன்…”
”ஆமாம நான் உங்களுக்கு காலங்காத்தால சூடா காப்பிகொடுக்கிறேன் பதிலுக்கு நீங்க ஜில்லுன்னு ஐஸ் வைக்கிறீங்க…தினம் நடக்கிறகதைதானே… சரி..சரி சீக்கிரம் ரெடியாகுங்க…” என்றவாறு டவல் எடுத்து கையில் கொடுத்து அவனை பாத்ரூமுக்குள் தள்ளி விடுகிறாள்…
குளித்து விட்டு வெளியே வந்து தலை துவட்டிக்கொண்டே இராஜசேகரன்..
”என்னோட டிரஸ் அயன் பண்ணியாச்சா… “ கேட்டு முடிப்பதற்குள்
”இன்னைக்கு வெள்ளிக்கிழமை நீங்க கருப்பு பேண்ட்டும் மஞ்சகலர் ஸர்ட்டும் தான போடுவீங்க…” என்றவாறே அந்த உடைகளை அவன் கையில் கொடுக்கிறாள் அவள் மனைவி.
”பட் நீதானடா செல்லம் எனக்கு சம்பளம் வாங்கிக்காத காஸ்ட்யூம் டிசைனர்…” ”க்கும் இதுக்கு ஒண்ணும் கொறச்சலில்ல…” அவள் சென்று விடுகிறாள்
டிப் டாப்பாக மாடியில் இருந்து டைனிங் டேபிளைப்பார்த்துக்கொண்டே இறங்கி வந்து அமர்கிறான். செட்டி நாடு சமையலில் கைதேர்ந்த அவன் மனைவியும் அடுப்படிக்குள் இருந்து அவனருகில் வந்து,
”உங்களுக்குப்பிடிச்ச ஆப்பம் தேங்காய்ப்பால் பண்ணிவச்சுருக்கேன் நல்லா சாப்பிடுங்க…”
”வாவ்” என்றவாறே அவன் சாப்பிட ஆரம்பிப்பது. அதற்குள் ஒரு டப்பர் வேர் ஐ எடுத்து டேபிளில் வைத்து,
”மத்தியானத்துக்கு மிதுக்கவத்தக்குழம்பும் அவியலும் வச்சிருக்கேன் சுண்டவத்தல தனியா ஒரு கவருல போட்டுருக்கேன்..தயிர தனியா ஒரு டப்பாவில வச்சுருக்கேன்…”
அவன் ’ம்ம்ம் … ம்ம்ம்’
”கரெக்டா ஒண்ணரைமணிக்கெல்லாம் நான் போன் பண்ணுவேன் ”நான் மிச்சம் வைக்காம சாப்பிட்டாச்சு” அப்படிண்ணு சொல்லனும் என்ன..”
என்றாவாறே செல்லமாக அவனை ஒரு பார்வை , அவன் சாப்பிடும் அழகை ரசித்து விட்டு தண்ணீர் எடுத்துக்கொடுக்கிறாள்.
எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்து காரை திறக்க எத்தனிக்கையில் அவனுக்கு முன்பாக டிரைவிங் சீட்டில் அவனது மனைவி. கேள்விகுறியுடன் பார்க்கும் அவனை பேசவிடாமல் உள்ளே ஏறுமாறு சைகை செய்கிறாள். தலையை ஆட்டியாவாறே அமர்கிறான். கார் சென்றுகொண்டு இருக்கிறது.
“மணி இப்பவே ஒன்பதே முக்கால் ஆச்சு நீங்க கார எடுத்துட்டு அவசரவசரமா போனீங்கன்னா எங்காவது போயி முட்டிக்குவீங்க.. போன வாரம் ரெண்டு காரையும் ஆக்ஸிடெண்ட் பண்ணி இன்னும் ஒர்க்ஷாப்பில இருந்தே வரல…” திரும்பி அவளைப்பார்க்கிறான்.
”அதான் அப்பா என்னயவே கொண்டு விடச்சொன்னாரு தினமும்”..
லேசாக தலையை அசைத்து “சரி” என்கிறான்.
அலுவலகம் வந்துவிட இறங்கியவனை அழைத்து,
” நான் அப்படியே என்னோட பிரண்ட போயி பாத்துட்டு வர ஈவினிங் ஆயிடும்… ஆபிஸ் விடறதுக்கு ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடி போன் பன்ணுங்க வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்” பதிலுக்குக்கூட காத்திராமல் சென்றுவிடுகிறாள்.
இராஜசேகரன் அலுவலகத்துக்குள் நுழைகிறான்.
நேரம் நகர்கிறது. சாயுங்காலம் 3 மணி ஆகிறது.
சிவா பிரிண்டர் என்ற பெயர்பலகை அது ஒரு பிரிண்டிங் பிரஸ் உள்ளே சட்டையக் கழட்டி வைத்து விட்டு வெறும் பனியனும் லுங்கியுமாக பிரிண்ட்டான மாதிரியை சரிபார்த்தவாறே நம்ம இராஜசேகரன். அட நம்ம இராஜசேகரன் தாங்க. எப்படி இருந்த இராஜசேகரன் இப்படி ஆகிட்டானே அதுவும் சாயுங்காலம் 3 மணிக்குள்ள…அப்படி நீங்க நெனைச்சா அது… ”அட்ரா அட்ரா நாக்கமூக்க நாக்கமூக்க…” ஒரு நிமிஷம் இருங்க இராஜசேகரனுக்கு போன் வருது.
“சொல்லுடா என்ன விசயம்…”
”டேய் ஊருல இருந்து உங்க மாமா வந்திருக்கிறார்டா.. என் ஆட்டோவிலதான் கூட்டிட்டு வந்து வீட்டுல விட்டுருக்கேன்..’
”ஐய்ய்யோ என்னடா சொல்ற அவர் எதுக்குடா திடீருன்னு…ஓ.கே நான் உடனே கிளம்பி வாரேன்…” என்றாவறே அவசரவசரமாக பேண்ட் சர்ட் மாட்டிக்கொண்டு மணியிடம் வேலையை ஒப்படைத்து விட்டு தன் சைக்கிளில் வீட்டுக்கு விரைகிறான்.
சந்து பொந்துலாம் நுழைந்து ஒரு தெருவில் வந்து பல குடித்தனங்கள் இருக்கும் ஒரு கட்டிட்த்தில் நுழைந்து மாடிக்கு வருகிறான். மொட்டைமாடியில் அவனது குடிசையும் அவன் நண்பனின் வீடும்.
அட நம்ம இராஜசேகரன் தாங்க. ”டேய் எங்க மாமா எங்கடா…”
“இதோ பக்கத்துக் கடைக்கு போயிட்டு வாரேன்னு சொல்லிட்டு போயிருக்கார்டா..” ஆட்டோ ஓட்டும் அவனது நண்பன்.
“என்னண்ணே எப்பவும் சாவி வாங்கி வச்சுடுவேன் இன்னிக்கு நானும் மறந்திட்டேன்…’ என்றவாறே ஆட்டோக்காரன் மனைவி இழுப்பது.
“அண்ணாத்த வழக்கம் போல கனவு கண்டுட்டே ஆபிஸூக்கு கெளம்பிருப்பாரு…”
அவனும் அவன் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்முறுவல்.
இராஜசேகரன் எரிச்சலுடன் கதவைத்திறந்து உள்ளே நுழைகிறான். பின்னாடியே வந்த அவன் நண்பன்., ”மொதப்பொண்டாடி காலைல நலரை மணி வரைக்கும் தூங்க விட்டுருக்க மாட்டாளே…”
கையில் காப்பி டம்ளருடன் வரும் அவன் மனைவி (இது இராஜசேகரனோட மகாலட்சுமி இல்லீங்க ஆட்டோக்காரன் பொண்டாட்டி புஷ்பவள்ளி), ” மகாலட்சுமி மாதிரி உங்க ரெண்டாவது பொண்டாட்டி எழுப்பி விட்டுருப்பாங்களே..” அவன் காப்பியை வாங்கிக்கொண்டு அப்பாடா நிப்பாட்டிடாய்ஙக என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே இருவரையும் பார்த்துக்கொண்டே குடிப்பது..
“அதெப்படி ஒண்ணோட கஸ்ட்யூம்..”
புஷ்பவள்ளி ”அது கஸ்ட்யூம் இல்ல காஸ்ட்யூம்… காஸ்ட்யூம் டிசைனர்..கஷ்டம் கஷ்டம்…’
“ஆமா ஏதோ ஒண்ணு இப்ப அதுவா முக்கியம்.” இராஜசேகரனைப்பார்த்து சொல்ல ஆரம்பிக்க…
”ஆமாட ஏன் மூணாவது பொண்டாட்டி ட்ரஸ் எடுத்துக்கொடுத்தா… நல்லா சமைக்கிற ஏன் நாலாவது பொண்டாட்டி டிபன் ஊட்டிவிட்டுட்டு…” இராஜசேகரன் எரிச்சலுடன் பேச ஆரம்பிக்க…
”ஓ இன்னிக்கு ஊட்டி வேற விட்டாளா..’ இருவரும் சிரித்துக்கொள்வது…
ஆட்டோக்காரன் ”அப்புறம் அந்த பணக்கார ஐந்தாவது பொண்டாட்டி காருல கொண்டுவந்து ஆபிஸுல அதாவது அந்த பிரிண்டிங் பிரஸுல விட்டுருப்பாளே…”
”என்னது உனக்குக் கல்யாணம் ஆகிருச்சா..” உள்ளே நுழையும் அவனது மாமா.
”ஐய்யோ மாமா., மொட்டைதலக்கும் மொனங்காலுக்கும் முடிச்சுப்போடாதீங்க..”
“நான் எங்கடா முடிச்சுப்போட்டேன் நீதானடா ஏதோ ஒரு பணக்கார பொண்ணுக்கு முடிச்சுப்போட்டுருக்க..” கோபத்துடன் மாமா
இராஜசேகரன், ஆட்டோக்காரனையும் அவனது மனைவியையும் பார்த்து முறைப்பது
“அது சரி அப்புறமும் ஏண்டா இந்த குடிசை வீட்டுல குடியிருந்துக்கிட்டு இருக்க…”அப்பாவியாய் மாமா
ஆட்டோவும் புஷ்பவள்ளியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்வது.
இராஜசேகரன்,”அது வந்து வந்து..”
”உஙக அம்மா என்னடாண்ணா ஊருல ஒரு பொண்ணப்பாத்து வச்சிக்கிட்டு உன்ன கையோட கூட்டிட்டு வரச்சொல்லிக்கிட்டு இருக்கா கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு. இங்க நீ என்னடாண்ணா…” என்றவாறே மாமா மொபைலை எடுத்து டயல் செய்யப்போவது…
”யாருக்கு மாமா?”
”ஓன் அம்மாவுக்குத்தாண்டா…’
”என்ன சொல்லப்போறீங்க..” இராஜசேகரன்
”உண்மையச்சொல்லப்போறேன்..” மாமா
”உண்மைய நாங்க சொல்றோம்” ஆட்டோவும் புஷ்பவள்ளியும்.
படுக்கையறையில்,அழகில்,அலங்காரத்தில்,சமையலில்,பணத்தில் இப்படி ஐந்து விசயத்திலும் சிறந்துவிளங்கும் ஐந்து பெண்களைத் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ”லட்சியத்துடன்” இராஜசேகரன் வாழ்வதைத் தெரியப்படுத்துவது.
மாமா சலித்துக்கொண்டே ,”ம்ம்ம் எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பொண்டாட்டி அவளே என் கனவில வர்றது இல்ல… அஞ்சு பொண்டாட்டி கேக்குதா ஒனக்கு…’
எல்லோரும் மாமாவைப்பார்ப்பது.
”ஏற்கனவே 1000 ஆம்பிளைக்கு 800 பொம்பளைங்கதான் இருக்கிறதா ஒரு புள்ளிவிபரம் சொல்லுது…இதுல வேற பெண் கொழந்தைகளை கருவிலேயே கொன்னுபோட்டுர்றாங்க”
“அப்படி பொண் கொழந்தைய கலைச்சிட்டு ஆம்பிள புள்ளய பெத்துக்கிறாங்களே இப்படி நெறயப்பேரு செஞாங்கண்ணா…” அப்பாவியாக புஷ்பவள்ளி
”அவங்க பண்ண தவறுனால அவங்க புள்ளைங்களுக்கே கல்யாணம் ஆகாம போய்டும்…இப்படியே போச்சுண்ணா பத்து வருஷத்துல பெரிய கலவரமே வர வாய்ப்பு இருக்கு”ஆட்டோக்காரன்.
”அதனாலதான் சொல்றேன் வீடு வாசல் எல்லாம் வரும்போது வரும்.பேசாம இந்த பொண்ண கல்யாணம் கட்டிக்கிட்டு நல்லபடியா குடும்பம் நடத்துற வழியப்பாரு…” மாமா ஒரு போட்டோவை எடுப்பது.
அதனை வாங்கிப்பார்த்த புஷ்பவள்ளி “ஐய் அழகா இருக்காங்க..”
இராஜசேகரன் அவர்களைப்பார்ப்பது.
”ஆமா மாமா இந்த பொண்ணோட பேரு என்ன …” புஷ்பவள்ளி
”அது அந்த போட்டோவில பின்னாடி எழுதியிருக்கும் பாரு..” மாமா
போட்டோவில பின்னாடி பார்த்து விட்டு அவள் சிரிப்பது…
”ஏன் சிரிக்கிற..’ ஆட்டோக்காரன் அதனை வாங்கிபார்த்து விட்டு அவனும் சிரிப்பது.
இராஜசேகரன் அவர்களருகில் வந்து “என் வாழ்க்கை உங்களுக்கு விளையாட்டா போச்சா..” போட்டோவை பிடுங்கியவன் அந்த பெண்ணைப்பார்த்து விட்டு மாமா காதில் புஷ்பவள்ளி ஏதோ முணுமுணுப்பதைப் பார்த்துக்கொண்டே புகைப்படத்தைத் திருப்ப ….
போட்டோவின் பின்புறம் “அஞ்சு” என்று எழுதிருப்பது.
அனைவரும் இராஜசேகரனைப்பார்த்து சிரிக்கிறார்கள்.
- K. விஜய் ஆனந்த்




