நிஜமான நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதை. இதேபோன்றதொரு அனுபவம் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பல வீடுகளில் ஏற்பட்டிருக்கும். படியுங்கள், பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் – விஜய் ஆனந்த்.K
எனது தம்பி மகன்கள் அவிக்னா அபிஷேக் முறையே 3 மற்றும் 2 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் செல்ல(வ)ங்கள். நான் கணிப்பொறி முன் அமர 30 வருடங்கள் பிடித்ததென்றால் அவர்களுக்கு இந்த வயதிலேயே அந்த வாய்ப்பு வந்து விட்டது.
ஒரு வருடத்திற்கு முன் கணிப்பொறி வாங்கி பாகங்களைப் பொருத்தி பயன் படுத்த ஆரம்பித்த நேரத்திலேயே அவர்களுக்கும் சொல்லிக்கொடுத்தாகி விட்டது. ஆரம்பப் பள்ளியிலேயே கணிப்பொறிப் பாடம் வந்து விட்டபடியால் UPS , CPU, KEYBOARD, MONITOR அதன் பாகங்களைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தனர். பள்ளி முடிந்து வரும் போது ”பெரியப்பா கம்யூட்டர்ல உக்காரணும்” என்பார்கள். எனது தாயார் என்னிடம் கம்யூட்டரை ஆன் செய்து கொடுக்கச் சொல்லுவார்கள். நான் ஆன் செய்து கொடுக்க மாட்டேன் அவர்களையே முதலில் பிளக் சுவிட்ச் ஆன் செய்வதிலிருந்து UPS, CPU, MONITOR ஆன் செய்து கூகுள் குரோம் சென்று பின் கூகுளுக்குள்ளும் சென்று அவர்களுக்குத் தேவையானதை அவர்களாகவேத் தேடிக் கண்டு பிடித்து படிக்கவும், விளையாடவும் செய்து கொள்ளச் செய்தேன்.
கணிப்பொறியினைப் பயன்படுத்தி விட்டு எப்படி ஷட் டவுண் செய்து விட்டு ஆஃப் செய்வது என்பதனையும் சொல்லிக்கொடுத்தாகி விட்டது.
இப்பொழுதெல்லாம் நான் இல்லாத நேரங்களில் வந்தாலும் கூட அவர்களாகவே கணிப்பொறி முன் அமர்ந்து ஆன்லைன் விளையாட்டுகளாகட்டும் யூடியூபில் அவர்களுக்குப்பிடித்த வீடியோ பதிவுகள் அதனையும் தாண்டி அவர்கள் அப்பத்தா(எனது அம்மா)விற்குப் பிடித்த ஆன்மீக இசை நிகழ்ச்சிகள் பார்க்காமல் விடுபட்ட தொலைக்காட்சித் தொடர்கள் இதையும் தாண்டி ஆன் லைனில் வரும் திரைப்படங்கள் என்று அவர்கள் இந்த வயதிலேயே கணிப்பொறியினைச் “சிறப்பாக” பயன்படுத்தத் துவங்கி விட்டனர்.
பஞ்சாப் மாநிலத்து பெற்றோர்கள் வெளியே எங்கு போனாலும் சரி தங்கள் குழந்தகளை அவர்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு நடக்க அனுமதிக்காமல் அக்குழந்தைகளாகவே தன்னிச்சையாக தைரியமாக நடந்து வரும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பார்களால். பிற்காலத்தில் அக்குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழவும் தங்கள் வாழ்க்கையினை அவர்களாகவேக் கற்றுக்கொண்டு வாழ்ந்திடவும் இத்தகைய செயல் பெரிதும் துணைபுரிவதாக்க் கேள்விப் பட்டிருந்தேன். அந்த மாதிரிதான் எனது தம்பி மக்கட்க்கும் தன்னிச்சையாகக் கற்றுக்கொள்ள வாய்ப்பு அளித்ததை நினைத்துப் பெருமைப் பட்டுக்கொள்வேன்.
இருந்தாலும் சில நேரங்களில் பக்கத்துத் தெருவிலிருக்கும் அவர்கள் வீட்டிலிருந்து தனியே எங்கள் வீட்டிற்கு வரும் போது மிகவும் எச்சரிக்கையாக நடந்து வரும் படி அடிக்கடிக் கேட்டுக்கொள்வேன் திரும்பி வீட்டிற்குச் சென்றவுடன் போன் செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறுவேன். ஏனென்றால் நம்ம ஆட்கள் பைக்கில், ஆட்டோவில், காரில் எதில் சென்றாலும் தெருக்களில்தான் வேகமாகச் செல்வார்கள் அதிலும் ஆட்டோக்காரர்கள் கேட்கவே வேண்டாம் அவர்கள் தெருவில் வரும் போது நடப்பதற்கு எனக்கே பயமாக இருக்கும். அதானால் தான் குழந்தைகளையும் மிகவும் கவனமாக வரும்படி அடிக்கடி கேட்டுக்கொள்வேன்.
அன்றும் வந்தார்கள். நான் வழக்கம் போல இடத்தைக் காலி செய்து கொண்டு துணிகளைத் துவைப்பதற்காக வீட்டிற்குப் பின்னால் சென்று விட்டேன். வெளியிலே கேட்கும் சத்தங்களை ரசித்துக்கொண்டே எனது வேலையைச் செய்து கொண்டிருந்தேன். எங்கள் வீடு ஏர்போர்ட்டுக்கு மிக அருகில் என்பதால் டேக் ஆஃப் செய்யும் விமான்ங்களின் சத்தமும் லேண்ட் ஆகும் விமான்ங்களின் சத்தமும் காதைப்பிளக்கும். அதனையும் மீறி சில பறவைகளின் சத்தம் , பின்புற வீடுகளில் மிக்ஸி சத்தம், காகங்களின் சத்தம் அப்புறம் நாம் துவைக்கும் போது கூட ஒரு சத்தம் வருமே இப்படி அனைத்து சத்தங்களையும் கேட்டு ரசித்துக் கொண்டே துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கையில்…
உஸ்ஸ்… கொஞ்சம் இருங்க…கொஞ்சம் இருங்க… எங்கோ வண்டிகள் முட்டிக் கொண்ட சத்தம் கேக்குதுல்ல…
திடீரென்று “டேய் அவனை இடிடா”
“இருடா இந்த பஸ்ல மொதல்ல இடிச்சுட்டு வாரேன்”
“ஓ கே.. டா வேகமா போயி மோதுடா” ”
“செத்தாண்டா”
“அப்படித்தாண்டா போடுறா போடுறா”
”அடங்ங்கொய்யால “
“ஹேய் ஹேய்“
கிரிக்கெட்டில் எதரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஒருவருக்கொருவர் கைகளை தட்டிக் கொள்வார்களே அதே போன்று கைகளைத் தட்டிக்கொண்டார்கள்…
வீட்டிற்குள் இருந்துதான் சத்தம் வந்துச்சா…
உள்ளே வந்து பார்த்தால்,
இவய்ங்கதான்… இவய்ங்களேதான் ஆட்டோ ரேஸ் விளையாடிக்கொண்டிருக்காய்ங்களாம். குறிப்பிட்ட இடத்தில் இருந்து புறப்பட்டு இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கம் இன்றி ஆட்டோ புறப்பட்ட உடனே வழி நெடுக ஒரே ”டமால் டமால்” இடி, மோதல் தான் .
சிரிப்பதா, தலையிலடித்துக் கொள்வதா? (என் தலையில்தான்) தெரியவில்லை…
– K. விஜய் ஆனந்த்





VIRAIVIL MANAM MUDITHU MANA VALKAI VALA VALTHUGIREN IDHAN VAYILAGA NAN ARINDHUKONDATHU NENGAL PASAMANAVAR BUT BACHELER