( பாக்யா வார இதழில் வந்த எனது சிறுகதை-விஜய் ஆனந்த்.K)
ஈவ் டீசிங் என்றாலே எனக்கு பிடிக்காதுதான். எப்பொழுதும் கூட்டமாக இருக்கும் மாநகரப்பேருந்தில் டிக்கெட் எடுக்க வேண்டுமே என்பதற்காக பின்னால் ஏறி டிக்கெட் எடுத்து விட்டு அடுத்த நிறுத்தத்தில் முன்பக்கமாக ஏறி ஓட்டுநர் அருகில் நின்றுவிடும் ரகம் நான்.
ஆனால் எனது நண்பன்? நண்பன் என்று சொல்ல்லாமா? சரி அவன் இதில் கில்லாடி. நெரிசல் மிகுந்த பேருந்தில்தான் ஏறுவான், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு “அனுபவம்” சொல்லுவான். நமக்கும் ஒருமுறை செய்து பார்க்கலாமா? என்று தோன்றும்.
“இன்னாப்பா எருமை மாடு மாதிரி இப்படி தேய்ச்சுக்கினு நிக்கிறியே.. நீல்லாம் அக்கா தங்கச்சி கூட பொறக்கல்ல.. ச்சீ.. த்தூ” என்று சில தைரியமான பெண்கள் ( ஆனால்.சிலருக்கு அ நாகரிமான பெண்கள் என்று கூட தோன்றும்) உரசல் மன்னர்களைத் திட்டும் போது அவர்களின் முகமாறுதலும் மற்றவர்கள் அவர்களைப்பார்க்கும் பார்வையும் என்னை ஈவ் டீசிங் செய்ய விடாமல் தடுத்தன.
ஆனாலும் நண்பனின் பிடிவாதத்தால் முயற்சி செய்து பார்ப்போமே என்று ஒரு நெரிசலான பேருந்தில் அடித்துப் பிடித்து ஏறி நடுப்பக்கம் நின்று கொண்டோம்.
அண்ணா நகர் ரவுண்டானாவில் ஒரு பெண் ஏறினாள். நண்பன் தான் கவனித்துச் சொன்னான். அவனுடைய கணிப்புப் படியேஅந்த பெண் எங்கள் அருகில் வந்து நின்றாள். எவ்வளவு முயன்றும் அவளின் முக அழகைப் (பொய் என்று நீங்கள் முனகுவது கேட்கிறது) ..சரி..சரி… முன்னழகைப் பார்க்க முடியவில்லை. அதனால் என்ன அவளின் பின்னழகு பித்தம் கொள்ள வைத்தது.
என்னுடைய கைகள் அவளின் பின்னழகை நோக்கி நடுக்கத்துடன் முன்னேறிய நேரம் திடீரெனத் திரும்பிய அவள்,
”இந்த சீசன் டிக்கெட்டை பாஸ் பண்ணுங்களேன் ப்ளீஸ்” என்று கூறிவிட்டு “அட ரகு அண்ணா நீங்க எங்க போறீங்க..? வீட்டுக்கே வர்றதில்லை ம்ஹூம்” என்றாளே பார்க்கலாம். “
நான், ”ச்..சு..சு… சுமதி..? எப்படியிருக்க.. வீட்ல பெரியப்பா பெரியம்மா, ஹரி எல்லோரும் செளக்கியமா?”…. ”சரி நான் இன்னொரு நாள் வீட்டுக்க வரேன்”
ஐயப்பன் கோயில் அருகே எனது சித்தி வீடும் பெரியம்மா வீடும் இருப்பதும் பெரியம்மா மகள் சுமதி பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படிப்பதும் நல்லவேளை இப்போதாவது ஞாபகத்திற்கு வந்த்தே!!
கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டு .. மறுபடியும் ஓட்டு நருக்கு அருகில் போய் நின்று கொண்டேன் நண்பனுடன்.
– K.விஜய் ஆனந்த்





Very gud comedy story pa….
nice story.