a K Vijay Anandh review
ஒரு குற்றச்சம்பவத்தைத் துப்புதுலக்க, அலுவல் ரீதியாக அனுப்பப்படும் கெளதம் வாசுதேவமேனனின் ராகவன் ஐபிஎஸ் க்கு எந்த விதத்திலும் குறைந்துவிடாத, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக விவேக், வெள்ளைப்பூக்களில் பிரமாதப்படுத்திருக்கிறார்.
காதல் பிரச்சினை அல்ல, அதை எந்த நேரத்தில் சொல்வது என்பது தான் விஷயம், அமெரிக்கக் காதலியைத் திருமணம் செய்துகொண்டு சியாட்டிலில் செட்டிலாகிவிட்ட மகன் மீது அவருக்கு இருக்கும் நியாயமான கோபம் , மிகவும் அழகாகச் சித்திகரிப்பட்டிருக்கிறது.
சியாட்டிலிலும் தெருக்கள் இருக்கின்றன, வீடுகள் இருக்கின்றன, குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நம்மூரில் குப்பைத் தொட்டியைத் தவிர எல்லா இடங்களிலும், குப்பைகளைப் போடுவது போல, சியாட்டில் வாசிகள் போடுவதில்லை.
அங்கேயும் ஒரு ஆறு, ஆறாகவே ஓடுகிறது. கூவம், அடையாறு என்று இரண்டு ஆறுகள் இருந்தும் சாக்கடைகளாக ஆக்கிவிட்டது போல, சியாட்டில் மக்கள் ஆக்கவில்லை. அவய்ங்களும் காலையில் எழுந்து காலைக்கடன்களை முடிக்கிறார்கள், சமையல் செய்கிறார்கள், பாத்திரங்கள் கழுவுகிறார்கள், அந்த ஊரிலும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுகிறது, ஆனாலும், தெருவில் பயன்படுத்திய நாப்கின்களை தெரு நாய்கள் கவ்விக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கவில்லை.
சரி விஷயத்திற்கு வருவோம். ஓய்வு பெற்றுவிட்டால், ஆத்திர அவசரத்திற்கு சிகிச்சை அளிக்காமலா இருப்பார் மருத்துவர்..? அதுபோல, தன்னைச் சுற்றி வசிப்பவர்கள் தாம் பார்த்தவர்கள் என்று அடுத்தடுத்துக் காணாமல் போகும் போது, தனது போலீஸ் மூளைக்கு வேலை கொடுக்க ஆரம்பிக்கும் விவேக், தனது வீட்டிலேயே அப்படி ஒரு சம்பவம் நடக்கும் போது பதறித்தான் போகிறார். மகனைக் காணவில்லை என்று அழும் விவேக்கைக் கடந்த 27 ஆண்டுகளில் நீங்கள் திரையில் பார்த்திருக்க முடியாது. இன்னும் கொஞ்சம் அதிகமாக நடித்திருந்தால், வேறு யாரேனும் நடிகர்களை நினைவுக்குக் கொண்டுவந்துவிடலாம், கொஞ்சம் அளவைக் குறைத்திருந்தால், நகைச்சுவை நடிகர்கள் என்றால் இப்படித்தாம்பா என்று சொல்லிவிடலாம். அப்படி கத்தியில் நடந்தது போன்று, கச்சிதமாக நடித்து அசத்துகிறார் விவேக். அவருடைய சிகையலங்காரம் மற்றும் ஒப்பனைகளும் கச்சிதம்.
மகன் தேவின் தோழி பூஜா தேவரியாவின் அப்பா சார்லி, சியாட்டிலில் விவேக்கிற்கும் நண்பனாகிப்போகிறார். சார்லி, 30 வருடங்களுக்கு முன்பு கார்த்திக்குடன் நண்பனாக நடித்தது போன்ற அதே துறுதுறு நடிப்பு. கைகளை மடக்கிமேலே மார்பளவில் தூக்கிக் கொண்டு, வேகமாக அங்கும் இங்கும் நடக்கும் அவரது அந்த முத்திரை மட்டும் மிஸ்ஸிங். கதாபாத்திரத்தின் வயதுக்கேற்றவாறு, அமர்க்களப்படுத்துகிறார்.
தேவ், அவருடைய அமெரிக்கக் காதல் மனைவி பைகி ஹேண்டர்சன், பூஜா தேவரியா என்று கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
அட . பூஜாவாக இருக்குமோ என்று ஒரு விநாடி நம்மை ஏமாற்ற வைத்து இறுதியில் ஒரு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விவேக் இளங்கோவன். இதில், அவரது திரைக்கதை உக்தியைக் கொஞ்சம் வெளிப்படையாகப் பாராட்டிவிட்டால், கதையை ஊகித்துவிடக்கூடும். அதே நேரம், சில காட்சிகள் கொஞ்சம் இயல்பாக நடப்பது போன்றே காட்சிப் படுத்தியிருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனாலும், குற்றம் நடைபெறும் அந்த ஷணத்திற்குள் புகுந்து, விவேக் துப்பறிவதும், சம்பந்தப்பட்டவர்களைத் தன் மூளைக்குள் கொண்டுவந்து விசாரிப்பதும், புதுமையான முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.
இதுவரை பார்த்த தமிழ்ப்படங்களில், வெளி நாடுகளில் காட்சிகள் படம்பிடிக்கும் போதும், அது நம்மூரில் கேமாரவை வைத்த மாதிரியே இருக்கும், அதாவது ஒளிப்பதிவு சார்ந்த பணிகளில். ஆனால், இந்தப்படத்தில் நம்மூரில் படம் பிடிக்கப்பட்ட ஆரம்பத்தில் வரும் சில நிமிடக் காட்சிகள் கூட ஹாலிவுட் படம் போன்று படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன. ஜெரால்ட் பீட்டர், அந்த அளவிற்கு மெனக்கெட்டிருக்கிறார்.
ராம்கோபால் கிருஷ்ணராஜுவின் பின்னணி இசையும் பாடல்களுக்கான இசையும், ரசிக்க முடிகிறது.
ஒட்டுமொத்தமாக, சில குறைகள் இருந்தாலும், வெள்ளைப்பூக்கள் சுதந்திரமாக மலர்ந்து பூத்துக்குலுங்கி மணம் வீசட்டும் என்கிற நல்ல நோக்கத்திற்காக, எடுக்கப்பட்ட படமாக இதனை பாராட்டியே ஆகவேண்டும்.
வெள்ளைப்பூக்கள் மட்டுமல்ல, சிகப்பு, கருப்பு, மாநிறம் என்று பலவண்ணப்பூக்களும் தான்.