a K Vijay Anandh review
ஆறு அக்காக்களுக்குத் தம்பியாகப் பிறப்பது என்பது அதற்கு முன் ஆயிரம் பிறவிகளில் செய்த புண்ணியமென்று தான் சொல்லவேண்டும்.
வினோதி வைத்திய நாதன், அகல்யா வெங்கடேசன் தொடங்கி ஆறு அக்காக்கள், போஸ் வெங்கட், சூரி , முனீஷ்ராஜ், சக்தி சரவணன், ஆறுபாலா என்று ஆறு அக்கா கணவர்கள் மொத்தத்தில் ஆறு பெற்றோர்களின் ஒற்றை மகனாக பசியும் தெரியாமல் பயமும் தெரியாமல் வளரும் கெளதம் கார்த்திக்.
மண்ணைத் தொட்டவனைக் கூட விட்டுவிடலாம், பெண்ணைத் தொட்டவனை விட முடியுமா..? கருவறுக்க வேண்டும். அன்றாடச் செய்தித்தாள்களைப் படிக்கும் போது, ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் கோபம், வெற்றி மூலமாகத் தீர்த்துக்கொள்ளப்படுகிறது.
கதாபாத்திரங்கள் நிறைந்த மாதிரி, அவர்களது நடிப்பும் நிறைவாக இருக்கிறது. குறிப்பாக, ஏற்றிச் சீவிய தலைமுடியுடன் மதுரைக்கார அம்மாவாகவே வாழ்ந்திருக்கிறார் வினோதினி வைத்திய நாதன், இந்தப்படத்தில் தன்னைத் திரும்பிப்பார்க்க வைக்கும் அளவிற்கு, அவருடைய நடிப்பு. சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு அடியெடுத்து வைத்திருக்கும் அகல்யாவும், பார்ப்பதற்குப் பழைய ஷாமிலியை நினைவு படுத்தினாலும், தன் பங்குக்குச் சிறப்பாக நடித்துவிடுகிறார்.
இந்தப்பக்கம், தாய்மாமன்கள் , போஸ் வெங்கட் மூத்தவராகப் போய்விட்டதால், கொஞ்சம் பொறுப்பாகவே நடந்துகொள்ள மற்றவர்கள் கூட்டணி அடித்து குதூகலப்படுத்துகிறார்கள். நகைச்சுவை என்று தனி ஆவர்த்தனம் ஆடிவிடாமல், கதையோடு பயணித்து கலகலப்பூட்டுகிறார் சூரி.
தப்புச் செஞ்சவனை விடத் தட்டிக் கேட்டவனுக்கு அதிக தண்டனை வழங்குவது போன்று அமைக்கப்பட்டிருக்கும் இந்திய தண்டனைச் சட்டங்களை நிச்சயம் மறுபரிசீலனை செய்யத்தான் வேண்டும், காலத்திற்குத் தகுந்த மாதிரி மாற்றிக் கொள்ளவேண்டும்.
வீட்டில் செல்லமாக பசியும் பயமும் தெரியாமல் வளர்ந்து, சட்டமும் படித்து விட்டால் மதுரைக்காரன் எப்படி இருப்பான்..? அப்படி இருக்கிறார் கெளதம் கார்த்திக்.
தவறு நடந்தால் தட்டிக்கேட்கும் கதாபாத்திரம் தான், சாதிப்பெருமை பேசும் கதாபாத்திரம் அல்ல. அட, நம்ம கெளதம் வாசுதேவ மேனன் நாயகியா..? மதுரைக்காரப்பெண்ணாக்க இயக்குநர் பெரிதாக மெனக்கெடவில்லை. மஞ்சிமா மோகன் பேசும் வசனங்களும், அணிந்திருக்கும் உடைகளும் அப்படியே மண்ணின் மகளாக்கிவிடுகின்றன.
தப்பு செஞ்சவனும் தண்டிக்கிறவனும் ஒரே சாதி என்பதால், முத்தையா எந்த சாதியையும் உயர்த்தியோ தாழ்த்தியோ சொல்லிவிட்டார் என்கிற குற்றச்சாட்டிற்கு இடமில்லை.
ஆனால், ஒரு காட்சியைச் சரியாக முடிக்காததால் பல விமர்சனங்களைச் சந்தித்துக் கொண்டிருப்பதுடன், தனது சமூகத்தையே கொஞ்சம் கீழிறிக்கி விடுகிறார்.
படிக்க அனுப்பினால், எவன் கூடவாவது ஓடிப்போய்டுவாளுகளோ என்று படிக்க அனுப்பப்படாத முதல்தலைமுறை, 400 ரூ ஜீன்ஸ் + 200 ரூ டி ஷர்ட் போட்டுவந்தா மயங்கிடுவாளுகளோ என்று சந்தேகப்படும் இரண்டாம் தலைமுறை…! சரி, இனி கல்லூரிக்கு அனுப்பவேண்டாம், கெளதம் கார்த்திக்குடன் கல்யாணம் செஞ்சு வைச்சுடுவோம் என்று நினைத்து அடுத்த காட்சியில் அதற்கு விடை தேடியிருக்காமல், அதே காட்சியினைக் கொஞ்சம் நீண்ட காட்சியாக இருந்தாலும் , நேர்த்தியாக முடித்திருந்தால், தேவராட்டம், இன்னும் சிறப்பான படமாக ஆகியிருக்கும், கதை விஷயத்தில்.
மற்றபடி, கணவனும் மனைவியும் விவாகரத்து வாங்காமல் இருந்தாலே அது கூட்டுக்குடும்பம் என்று நினைத்து வாழ்கிற இந்த சமூகத்தில், இதுதான் டா குடும்பம் என்று அழகான குடும்பத்தைக் காட்டி, அந்தக்குடும்பத்தில் நம்மையும் ஒருவனாக்கிவிடுகிறார், முத்தையா.
பாடலாசிரியர் மோகன் ராஜா, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் ஆகியோர் இயக்குநருக்கு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.
தேவராட்டம், சாதியைக் கொண்டாடும் படமல்ல, பெண்களின் பாதுகாப்பைக் கொண்டாடும் படம்!