a K Vijay Anandh review
மதுப்பழக்கத்திற்கோ போதைக்கோ அடிமையானவன் தன் வாழ்க்கையை மட்டுமல்ல, தனது நெருங்கிய சொந்தங்களின் வாழ்க்கையும் சீரழிக்கிறான் என்பதே போதை ஏறி புத்தி மாறி படத்தின் ஒருவரிக்கதை.
மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிவரும் தீரஜுக்குத் தனது சொந்த அத்தை பெண் துஷாராவுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.
அடுத்த நாள் திருமணம் என்கிற நிலையில், நண்பர்களுடன் Bachelor Party இல் மாட்டிக் கொள்ளும் நாயகன், ஒரு கட்டத்தில் நண்பன் வீட்டில் இருந்த சட்டவிரோதமான போதைப்பொருளை விளையாட்டாக உட்கொள்ள, அடுத்து என்ன நடக்கிறது என்பது தான் விறுவிறுப்பான கதை.
பக்கத்து வீட்டில் வசிக்கும் ஊடகவியலாளராக பிரதாயினி, நாயகி துஷாரா, நாயகன் தீரஜ், வில்லனாக வரும் போலீஸ் அதிகாரி, போதைப்பொருள் கடத்தும் மைம் கோபி என்று அத்தனை பேரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
போதைப்பொருளைத் தவிருங்கள் என்கிற வழக்கமான சமூக அறிவுரைப் படமாக ஆகிவிடாமல், கதிரி நடராசனின் திரைக்கதை போதை ஏறி புத்தி மாறி படத்தை ஒரு விறுவிறுப்பான திரில்லர் படமாக கே ஆர் சந்துருவை இயக்க வைத்திருக்கிறது.
தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்துகொண்டிருக்கும் தீரஜ், இதில் அட்டகாசமான நடிகராகவும் மிளிர்கிறார். துஷாரா, பிரதாயினி என்று நாயகிகளும் அழகும் ஸ்டைலுமாக அட்டகாசப்படுத்துகிறார்கள்.. அர்ஜுன் உள்ளிட்ட நாயகனின் நண்பர்களாக வருபவர்களும் மிகவும் இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார்கள்.
சரி அடிச்சுத்தான் பார்ப்போமே என்று அதுவரை பழக்கமில்லாத நிலையிலும் சரக்கு அடித்துப் பார்க்கத் தூண்டும் தருணங்கள் தான் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடுகின்றன.
போதை ஏறி புத்தி மாறி, சரக்கடிப்பவர்களும், அடிக்காதவர்களும் பார்க்க வேண்டிய படம்.