a K Vijay Anandh review
தாமதமாகிக் கொண்டிருக்கும் நீதி அல்லது பொருந்தாத நிவாரணம் ஒரு தனி மனிதனைக் குறிப்பாக எளிய மனிதனை எப்படிக் காவு வாங்குகிறது என்பதே தோழர் வெங்கடேசனின் ஒருவரிக் கதை.
ஆரம்பக்கட்ட விஜயசேதுபதியைப் பார்த்து, அட அடுத்த தலைமுறைக்கு ஒரு நடிகன் கிடைச்சுட்டான் டா என்று முணுமுணுக்கப்பட்ட வார்த்தைகள், சந்தேகமே இல்லாமல் அரிசங்கர் விஷயத்திற்கும் பொருந்தும்.
எப்பவாச்சும் ஊருக்கு வரும் நண்பர்களாக இருந்தும் அவர்கள், அட சரளா மேட்டரைச் சொல்லுடா என்று நச்சரித்தும் கருமமே கண்ணாக சோடா பாட்டில் சப்ளை செய்யும், அரிசங்கர்.
இட்லிக்கடை மோனிகா சின்னகொட்லா தன்னைத் திருமணம் செய்ய மறுத்த நிலையிலும், ஒரு சந்தர்ப்பத்தில் அவரையே அழைத்துக் கொண்டு, தனக்குப் பெண்பார்க்கச் செல்லும், அரிசங்கர்.
தாயை இழந்து, தனிமரமாய், சுற்றியிருப்பவர்களின் பாலியல் சீண்டல்களுக்குப் பயந்து தற்கொலை செய்துகொள்ள முயலும் மோனிகாவைக் காப்பாற்றும், அரிசங்கர்.
“எங்கம்மாவைப் பார்த்துக்க எனக்குக் கொடுத்து வைக்கல உன்னை என் அம்மா மாதிரி பாத்துக்கிறேன்.. எப்பவாச்சும் உனக்கு தோனுச்சுனா நாம கல்யாணம் செய்துக்கலாம்..” என்று கண்ணியமாகத் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும், அரிசங்கர்.
நடுவில் கவுன்சிலர் வில்லன் என்று இந்த இரண்டு எபிசோடுகளையும் விறுவிறுவெனக்காட்டி விட்டு, சட்டென்று கதைக்கு வரும், இயக்குநர் மகாசிவன்.
கிட்டத்தட்ட படம் ஆரம்பித்த 20 நிமிடங்களுக்குள் விபத்தொன்றில் நாயகனின் கைகள் பறிபோகிறது. அதன் பிறகு படம் முழுவதும் இரு கைகளை இழந்த நாயகன், அரிசங்கர்.
ஒரு கட்டத்தில், நாயகனின் சித்தப்பாவே “ உன் வாழ்க்கையை வீணாக்கிடாதம்மா… வேற யாரையாச்சும் கல்யாணம் செஞ்சு நல்லாயிரு..” என்று சொன்ன பிறகும், “ அவர் என்னை அம்மாங்கிறார்.. அப்போ அவரை நான் ஒரு புள்ளையாப் பார்த்துப்பணிவிடை செய்யவேண்டாமா..” என்று சொல்லும் ,மோனிகா.
அரிசங்கருக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றத்தில் ஆஜராகி யதார்த்தமான அதே நேரம் மிகவும் அழுத்தமான வாதங்களை எடுத்து வைக்கும், அமுதேஸ்வர்.
பாதிக்கப்பட்டவர் தரப்பில் 100% நியாயம் உள்ளது என்று தெரிந்தும், தனக்கே அரசாங்கம் முறையாகச் சம்பளம் வழங்காத நிலையிலும் அரசு தரப்பில் வாதாடி, அரசின் செலவைக் குறைக்க முயலும் வழக்குரைஞராக, மகாதாரா.
மகாசிவனின் பாடல்களுக்கு அருமையான இசையைக் கொடுத்த, சகிஷ்னா.
எளிய கதைக்களமாக இருந்தாலும் பிரமாண்டமான படமாகக் காண்பிக்கும் வேதா செல்வத்தின், ஒளிப்பதிவு.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் இயக்கம் என்று அத்தனையையும் தோளில் சுமந்து, ரசிகர்களின் ரசனைக்கு அற்புதமான தீனியாக தோழர் வெங்கடேசனைக் கொடுத்திருக்கும், மகாசிவன்.
தனது கணவரின் மீது நம்பிக்கை வைத்து அவருக்காக இந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் மாதவி அரிசங்கர்.
என்று எல்லோருமே பாராட்டுக்குரியவர்களாகிறார்கள்.
அமெரிக்கா, ரஷ்யா, கிரீன்லாந்து என்று பல நாடுகளின் சட்டங்களின் கலவை அதாவது ஒரு காக்டெயில் தான் நமது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம். நமது மக்களுக்கான , மண்ணிற்கான சட்டங்கள் எழுதப்படாதவரை, எளிய மக்களுக்கு நீதி, எட்டாக்கனியே என்று பொட்டில் அறைந்த மாதிரி சொல்லி யோசிக்க வைத்தமைக்கு, தோழர் வெங்கடேசனுக்குப் பாராட்டுகள்.